Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”டேய் மடோனோடா... மடோனா செபாஸ்டியன்”... சேப்பாக் கில்லீஸின் அலப்பறைகள் #Tnpl

‘டேய் மடோனோடா... மடோனா செபாஸ்டியன்’ என அஷ்வத் முகுந்தன் கை விரல் காட்டிய திசையில் நோக்கினால், லிஃப்டில் ஏகாந்தமாக மிதந்து கொண்டிருந்தார் ‘பிரேமம்’ செலின். ச்சை... மிஸ் ஆயிடுச்சே... என்ற ஆதங்கம் அவர்கள் முகத்தில். 

சென்னையின் முக்கிய நட்சத்திர ஹோட்டல் லாபியில் இவர்களை வரிசையாக நிற்க வைத்து,நம் ஃபோட்டோகிராபர் விதவிதமாக கிளிக்கிக் கொண்டிருக்க,அவர்களோ செலின் உடன் செல்ஃபி எடுப்பதற்காக ஏங்கிக் கொண்டிருந்தனர் . 

‘பரவாயில்லை பாஸ் நீங்க ஃபைனல் வரைக்கும் வந்துட்டீங்க. இன்னொரு செலிபிரிட்டி உங்க கூட ஃபோட்டோ எடுக்க போட்டி போடுவாங்க’ என்றதும் ‘அத சொல்லுங்க முன்ன...’ என கட்டை விரலை உயர்த்திப் பிடித்து போஸ் கொடுத்தனர் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் வீரர்கள் எஸ்ஐ வாசுதேவன், பாஸ்கரன் ராகுல், அஷ்வத் முகுந்தன், ஜோயல் ஜோசப், சாய் கிஷோர்.

 ‘சொல்லுங்க பாஸ்.. நாங்க இப்ப என்ன பண்ணனும்’ என்றனர் கோரஷாக. ‘உங்களைப் பத்தி நீங்களே சொல்லுங்க’ என்றதும், முதல்ல அவர்கிட்ட இருந்து ஆரம்பிங்க...’ என எல்லோரும் ஏகமனதாக ஒருவரை கை காட்டினர்.

அவரோ சன்னமான குரலில், ‘‘என் பேரு எஸ்ஐ வாசுதேவன். ஊர் சேலம். ஸ்ட்ரீட் கிரிக்கெட்ல இருந்துதான் ஆரம்பிச்சேன். ஸ்கூல்ல இருந்து டிஸ்ட்ரிக்ட் செலக்ஷன் கூட்டிட்டு போனாங்க. ஃபர்ஸ்ட் டிஸ்ட்ரிக்ட், அப்பறம் ஸ்டேட் ஆடி இப்ப இங்க வந்தாச்சு’ என லீடு கொடுக்க, ஒவ்வொருவரும் கிரிக்கெட்டர் ஆன கதையை சொல்லத் தொடங்கினார். வாசுதேவன் தவிர்த்து மற்ற நால்வருக்கும் சொந்த ஊர் சென்னை. இப்போது அவர்கள் தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஒன்று கூடியுள்ளனர். 


முதல்முறையாக இவர்கள் மீது ‘ஃபிளட் லைட்’ வெளிச்சமும், புகழ் வெளிச்சமும் ஒருசேர பாய்ந்துள்ளது. தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்ததில் பசங்க ஏக குஷி. ‘வீட்டுல செம ஹேப்பி. எல்லாரும் மேட்ச் பாக்க வந்திருந்தாங்க’ என்றார் ஆல் ரவுண்டர் வாசுதேவன். 

‘எங்க வீட்டுல சொந்தக்காரங்ககிட்ட சொல்லி அமர்க்களம் பண்ணிட்டாங்க. சேப்பாக்கத்துல நடந்த முதல் மேட்ச்சை பாக்க, ஃபிரண்ட்ஸ், ஃபேமிலின்னு மொத்தம் 40 பேர் ஸ்டேடியம் வந்துட்டாங்க. இதுவே எங்களுக்கு பெரிய சப்போர்ட். டிஎன்பிஎல்-க்கு முன்னாடி இந்தளவு புகழ் வெளிச்சம் இல்லை. இப்ப வாய்ப்பு கிடைச்சிருக்கு. இது ரஞ்சி, ஐபிஎல் டீம்ல சேர்றதுக்கு நல்ல சான்ஸா இருக்கும்’ என நெகிழ்ந்தார் மாதவரத்தில் கிரிக்கெட் பால பாடம் பயின்ற ராகுல்.

‘எங்க வீட்லயும் செம ஹேப்பி. செலக்ட் ஆன உடனே பயங்கர ஹைப் கிரியேட் ஆச்சு. பயங்கர பிரஸ்ஸர்ல இருந்தோம். இப்ப என்ஜாய் பண்றோம். ஃபேஸ்புக்ல ரொம்ப ஃபிரெண்ட் ரிக்வஸ்ட் வருது. லைக்ஸ் எகிறுமில்ல” என்றார் முகுந்தன். 

‘இதுக்கு முன்னாடி எவ்வளவு பெர்ஃபார்ம் பண்ணாலும் பேப்பர்ல பேர் மட்டும்தான் வரும். இப்போ வெளி உலகத்துக்கு நம்ம முகம் தெரியும்.. வீட்டுலயும் ஹேப்பி’ என சொல்லும் ஜோயல், ஓட்டேரியைச் சேர்ந்தவர். 

‘‘நேத்து, ஃபோட்டோஷூட் போயிருந்தோம். எல்லாரும் வரிசையா போய், போட்டோ எடுத்துட்டு வாறாங்க. வாசு ஃபர்ஸ்ட் டைம் போனான். பவுலிங் போடுற மாதிரி பந்தை இப்டி சுத்துனான் பாருங்க, டம்முன்னு ஒன்னு வெடிச்சிருச்சு. லைட்டிங்ல நெருப்பு பத்திகிச்சு. அதுல ஒன் ஹவர் கட். அதுக்கு அப்புறம் ரெண்டு மூனு பேர் போனாங்க. அவங்க எல்லாம் கரெக்டா முடிச்சிட்டாங்க. திருப்பியும் வாசு பேட் எடுத்துட்டு போனாரு, அப்பவும் நெருப்பு பத்திகிச்சு.’’ என சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் சொன்னார் அஷ்வத் முகுந்தன். உடனே கோரஸாக எல்லோரும் நெருப்புடா என கத்த, வாசு முகத்தில் ஃப்ளட் லைட் வெளிச்சம்.

இரு இரு நான் சொல்றேன்னு தொடர்ந்தார் சாய் கிஷோர். ‘‘ஃபர்ஸ்ட் நான் பேட் பண்ணேன். ‘ஆர்டர்ல என் பேரு வர்ல. நான் ஆல்ரவுண்டர்டா.. நான் போறேன்டான்’னு சொல்லி டயலாக் விட்டு போனார் வாசு. போய் நின்னதும். லெக் ஸ்டம்புக்கு அடுத்து, ரைட் ஆர்ம் ஓவர்ன்றாங்க, கேமரா டாமல்னு வெடிச்சிருச்சு. ஃபோட்டோ ஷூட்டே கேன்சல். திருப்பியும் இன்னிக்கு போறோம்’’ என வாசுவை பார்த்து சிரித்தார் கிஷோர். 

 

அப்புறம் இன்னொரு மேட்டர். ‘‘ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல்ல ஆன்த்தம் லாஞ்ச் கிராண்ட்டா நடந்துச்சு. அசார், இர்ஃபான் பதான், ஜாகிர்கான், நெஹ்ரான்னு 25க்கும் மேல செலிபிரிட்டீஸ் வந்திருந்தாங்க. அவங்க பக்கத்துல நின்னு பேசுனது, ஃபோட்டோ எடுத்தது எங்களுக்கு பெரிய விஷயமா தெரிஞ்சது. அதுவும் நடிகைகள் பக்கத்துல நிக்கறப்போ சூப்பரா இருந்துச்சு’ என குஜாலானார் முகுந்தன்.

அப்போது இடைமறித்த சாய் கிஷோர் ‘‘அவங்க எல்லாம் செலிபிரிட்டி. ஆனா, அந்த ஷோவுல நாங்கதான் ஹீரோ. அது ஒரு நல்ல ஃபீல்’ என உருகினார். ‘ஒரு ஆக்ட்ரஸே வந்து உங்க கூட ஃபோட்டோ எடுக்கனும்னு கேட்டப்போ.. ம்ம்ம் ஓகேடா, நம்மளும்... ’ என, மேன் ஆஃப் தி சீரீஸ் வாங்கிய திருப்தி அடைந்தார் ராகுல். யார் அந்த நடிகை என்றதும், ‘வேதிகான்ற ஆக்ட்ரஸ்’ என முகுந்தன் பதில் சொன்னதுதுதான் தாமதம், ‘பார்றா.. வேதிகான்றவங்க... யாரோ அவங்கன்ற.. ரேஞ்சுல பில்டப் பண்றான் பாரு’ என கலாய்த்தார் ராகுல். 

‘இவன் சொல்றது ஜஸ்ட் ஃபிப்டி பெர்சன்ட். ரேம்ப் வாக்னு ஒன்னு வச்சாங்க பாருங்க. 13 ரஷ்யன் மாடல்ஸ்...’ என ஃபேஷன் ஷோ அனுபவத்தை ராகுல் தொடர முயன்றபோது, ‘13 இல்லைடா, 19 மாடல்ஸ்’ என அப்டேட் செய்தார் சாய் கிஷோர். ‘ம்ம்ம்ம் 19 மாடல்ஸ். அவங்க எல்லாருமே இன்டர்நேசனல் புரஃபொசனல் மாடல்ஸ். ஒவ்வொருத்தரும் எங்க கையப் பிடிச்சு வாக் போனதும், ஃபேஷன் ஷோ பத்தி சொல்லிக் கொடுத்ததும் அட அட அட. இதை எல்லாம் என் வாழ்க்கையில பாத்ததே இல்லை’ என முடிக்கும்போது அவர் முகத்தில் அவ்வளவு பிரகாசம். 

 

ரேம்ப் வாக், போட்டோஷுட் எல்லாம் ஓகே. ட்ரெய்னிங் எப்படி இருக்கு. உங்க கோச் யாருன்னு கேட்டதும் டெக்னிகல் ரீதியாக பதில் வந்தது. 

‘எங்களுக்கு இந்தியன் கோச்சே போதுங்க. ஹேமங் பதானி. கோச்சுன்னு சொல்றதை விட அவர் எங்க ஃபிரண்ட். செம ஜாலி டைப். ஆஃப் தி ஃபீல்ட் நம்மளோட நம்மளா இருப்பாரு. ஆன் தி ஃபீல்ட் புரஃபொஷனலா இருப்பார். 3 மணி நேரம், பிராக்டீஸ் செஷன் அவரோடது’ என்றார் ஜோயல்.

‘மத்த டோர்னமென்ட்டுக்கு அவ்வளவு கேர் பண்ண மாட்டோம். பிராக்டிஸ் பண்ணாம நேர போயி விளையாடுவோம். இங்க அப்படி கிடையாது. காலையில பிராக்டீஸ், மத்தியானம் ஜிம், ஸ்விம்மிங், ஈவனிங் திருப்பியும் பிராக்டிஸ்னு கொல்றாங்க... தூங்க கூட டைம் இல்லை’ன்னு ஜோயல் சொன்னதை ஆமோதித்தார் வாசுதேவன்.

‘ஆக்சுவலி நிறைய நேரம் பிராக்டிஸ் பண்றோம். ஜிம் செசன்லாம் டெய்லி பண்றோம்.  ஃபிட்னஸ் ரொம்ப இம்ப்ரூவ் ஆயிருக்கு’ என வாசதேவன் சொன்னதும், ‘ஆமா, ஒரு வாரத்துலேய ஒபாமா ஆயிட்டான்’ என கலாய்த்தார் ராகுல் டிராவிட்டை ஆதர்ச நாயகனாக கருதும் முகுந்தன். 

முதல் முறையாக ஃப்ளட் லைட் வெளிச்சத்தில் ஆடுனது எப்படி இருந்துச்சுன்னு கேட்ட உடனே, ‘நான் சொல்றேன், நான் சொல்றேன்னு’ பாய்ந்தார் ராகுல். 

‘‘இதுக்கு முன்ன நாலாவது படிக்கும்போதுதான் நைட், டென்னிஸ் பால் மேட்ச் ஆடியிருக்கேன். அதுக்கப்பறம் இப்பதான் நைட் மேட்ச் ஆடுறேன். தூத்துக்குடிக்கு எதிரா சேப்பாக்கத்துல ஃபர்ஸ்ட் மேட்ச். 5 விக்கெட்டுக்கு 63 ரன்னு அடிச்சிருந்தப்ப நான் இறங்கறேன். கிரவுண்டுக்கு உள்ள போய் பாத்தா எல்லாம் மாயமா இருக்கு. எல்.பாலாஜி பவுலிங். அப்பதான் எங்க கேப்டன் சதீஷ் அவுட்டானாரு. அவரும் ஃபர்ஸ்ட் பால் ஜீரோ. அதுக்கப்புறம் நான் போறேன். சத்தியமா சொல்றேன் அட்மாஸ்பியர் செம்ம்ம்ம்ம டிஃபரன்டா இருந்தது. கிரவுட் ஒரே சத்தம். 

அவர் (பாலாஜி) ஃபீல்ட் செட் பண்ணது, ஓடி வந்தது இப்படி ஒவ்வொரு செகண்டும், நெருக்கடியா இருந்துச்சு. ஒவ்வொரு நொடி கடக்கவும் ரொம்ப நேரம் ஆனது மாதிரி தெரிஞ்சது’ என, ராகுல் விளக்க விளக்க, அதற்கேற்ப ‘டுப்டுப் டுப்டுப்’ என சவுண்ட் எஃபெக்ட் கொடுத்தார் முகுந்தன். 

‘அந்த கிரவுட், கேமரா, ஃபிளட் லைட் வெளிச்சம் இதையெல்லாம் பாத்து கண்டிப்பா என்னால கான்சென்ட்ரேட் பண்ண முடியலை. அவர் ஸ்டெம்ப்ல போட்டாரு. பாலை விட்டு நடந்து வந்துகினே இருக்கேன். சுத்தி நடக்கிறது ஒன்னுமே தெரியலை. கொஞ்சம் விட்டிருந்தா ஆபனன்ட் சைட்ல போய் உக்காந்திருப்பேன்’ என்றார் ராகுல். 

‘தலைவர் அவுட்டாகி வந்தப்ப டிரெஸ்ஸிங் ரூம்ல எந்த மாதிரி சிச்சுவேசன் இருந்துச்சு தெரியுமா... நீங்க யாரு.. இது உங்க வொய்பா... அந்த மாதிரி நிலைமையிலதான் இருந்தாரு’ என முகுந்தன் கலாய்க்க, ஆமாம் என ஆமோதித்தார் ராகுல். 

‘இதுக்கு முன்ன இப்டி அனுபவம் இருந்ததே இல்லை. செம ஃபிரஷ்ஷா இருந்தது? என அவர் முடிக்கும் முன், ‘டேய் ஃபிரஷ்ஷா இருந்துச்சா ஏண்டா...?’ என மற்றவர்கள் சிரிக்க, ‘அதுக்கு முன்னாடி இப்படி இருந்ததே இல்லைன்னு சொல்ல வந்தேன்டா...’ என ராகுல் சமாளித்தார். அடுத்த மேட்ச் எப்படி இருந்தது என கேட்டதும், ‘அடுத்த மேட்ச்தான் ஆடவே இல்லையே’ என்றார் அப்பாவியாக. ‘ஆமா, டக் அவுட் ஆயிட்டா, தொடர்ந்து ஆட விடுவாங்க பாரு’ என நக்கல் அடித்தனர் மற்றவர்கள். 

‘‘ஃபர்ஸ்ட் பால் போடுறப்ப எல்லாம் செம பிரஸ்ஸரா இருந்துச்சு’ என வாசுதேவன் ஆரம்பிக்கும் முன்பே, ‘ஆமா மொத பாலே ஃபோர் வேற குடுத்துட்டாப்ல’ என்றார் ராகுல். நடுவே குறுக்கிட்ட ஜோயல், ‘பால் போடும் போது இல்லை. பஸ்ல போகும்போதே அவனுக்கு பிரஸ்ஸர் ஏறிடுச்சு. கண்ல இருந்து லைட்டா தண்ணி வருது. அதை மறைக்க கண்ணாடி போட்டுகிட்டான். டேய் பயப்படாதடா பாத்து ஆடுறான்னு தேத்தி விட்டோம்’ என்றார். 

‘‘கிரவுட் வேற ஃபுல் சவுண்ட். கான்சன்ட்ரேட்டே பண்ண முடியலை. மத்த மேட்ச்ல எல்லாம், என்கரேஜ் பண்ணி விளையாடுவோம். எப்பவுமே மேட்ச்ல இருப்போம். இப்ப அப்டி இல்லை. நம்ம எங்கயோ இருக்குற மாதிரி இருக்கும், மேட்ச் எங்கயோ நடக்குற மாதிரி இருக்கும். ஃபோகஸ் நிறையா இருந்தாதான் கான்சென்ட்ரேட் பண்ணி ஆட முடியும்’ என்பது தோனியை ரோல் மாடலாக கருதும் வாசுதேவன் வாதம். 

‘நாங்க பொதுவா த்ரி டே மேட்ச்சுக்குத்தான் பிராக்டிஸ் பண்ணி இருப்போம். டி20க்கு தனியா பிராக்டிஸ் பண்ணது கம்மிதான். மைண்ட் செட் மாத்துறதுதான் பெரிய சேலஞ்சா இருக்கு. ஃபர்ஸ்ட் டிவிஷன்ல எல்லாம் பாளையம்பட்டி டிராபி அடிக்கிறதுதான் பெரிய விஷயம். அதுக்கேத்த மாதிரி பிராக்டிஸ் பண்ணிட்டு திடீர்னு டி20க்கு மாறுவது சேலஞ்சிங்கா இருக்கு’ என முடித்தார் சாய் கிஷோர்.

இவ்ளோ தூரம் வந்துட்டீங்க. உங்களால முடியாதா? கலக்குங்க பாய்ஸ்!

-தா.ரமேஷ்
படங்கள்: குமரகுருபரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement