வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (21/09/2016)

கடைசி தொடர்பு:11:49 (26/09/2016)

வாயால் டேபிள் டென்னிஸ் விளையாடும் வீரர்..! பாராலிம்பிக் ஆச்சரியம்

ஒலிம்பிக், பாராலிம்பிக்கைத் தொடர்ந்து பப்பிஸ் ஒலிம்பிக்கும்  முடிவடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியும் பாராலிம்பிக்கின் கடைசி தினத்தில் செல்ல நாய்களுக்கான ஒலிம்பிக் போட்டியும் நடைபெறுவது வழக்கம். ஒலிம்பிக் போட்டி போல,  பாராலிம்பிக் இந்தியாவில் பரவலாக ஒளிபரப்பப்படவில்லை. ஆனால் உண்மையில், ஒலிம்பிக்கை விட பாராலிம்பிக்கில்தான் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களும் அதிசயிக்க வேண்டிய ஆச்சரியங்களும் காத்திருந்தன.

இந்த பாராலிம்பிக்கில் பார்வையற்றோருக்கான கால்பந்துப் போட்டியில் ஈரான் மொராக்கோ அணிகள் மோதின. ஈரான் வீரர் பெசாத் நான்கு மொராக்கோ வீரர்களை அசாத்தியமாக கடந்து கோல் அடிக்க,மெஸ்சி , ரொனால்டோ தோத்தாங்க போங்க. பார்வை இருந்தாலே கூட நான்கு பேரை கடத்திச் சென்று கோல் அடிப்பது குதிரைக் கொம்பு. ஆனால் பெசாத் தனி ஆளாக பந்தை கடத்திச் சென்று கோல் அடித்து மிரட்டிவிட்டார்.

வாயால வம்பு பேசி நாம் நேரத்தை வீணடிப்போம் நாம். ஈரானைச் சேர்ந்த இப்ராஹிம் ஹமோட்டாவுக்கு பத்து வயதில் விபத்தில் சிக்கி கைகள் பறிபோயின. சுருண்டு விடவில்லை. புலம்பிக் கொண்டிருக்கவில்லை. வாயால் டேபிள் டென்னிஸ் விளையாடப் பழகினார். டேபிள் டென்னிசோ படு ஸ்பீட் கேம். அதுல கையில்லாம எப்படினு நினைக்காதீங்க . வாயால் டேபிள் டென்னிஸ் விளையாடுவது இப்ராஹிமுக்கு கை வந்த கலை.  அப்போ சர்வீஸ் எப்படி போடுவார்னு யோசிக்காதீங்க. டோவால் பந்தை உயரேப் போட்டு வாயால் சர்வீஸ் அடிக்கிறார். பந்து டேபிளில் பட்டுத் தெரிக்கிறது. அத்தனை வேகம். படு ஸ்பீடான டேபிள் டென்னிசை விளையாடுவதற்கு எத்தனை முயற்சியும் எத்தகைய பயிற்சியும் எடுத்திருக்க வேண்டும். பல ஆண்டு கால முயற்சிக்கு பின்னரே இப்ராஹிமால் வாயால் டேபிள் டென்னிஸ் விளையாட முடிந்தது. ''நாம் விரும்பும் செயலை நிகழ்த்திக் காட்ட எந்த வித சமரசத்தையும் செய்து கொள்ளக் கூடாது. சமரசம் செய்து கொள்ளாமல் போராடினாலே வெற்றி வசமாகும்'' என்கிறார் இப்ராஹிம். இப்ராஹிம் டேபிள் டென்னிஸ் விளையாடும் யு டியூப் வீடியோ பயங்கர ஹிட். 

 

 

 

ரியோ பாராலிம்பிக்கில் உலகின் இரண்டாவது உயரமான மனிதரும் பங்கேற்றிருந்தார். அவரது பெயர் மார்டெஸா. ஈரானைச் சேர்ந்தவர். உயரம் 8 அடி ஒரு இஞ்ச்.  'அக்ரோமோளி ' என்ற ஹார்மோன் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டவர். இவரது வலது கால் இடது காலை விட 6 இஞ்ச் உயரம் கம்மியாக இருக்கும். அதனால், மெர்டஸாவால் சரியாக நடக்க முடியாது. ஊன்றுகோள் உதவியுடன்தான் நடப்பார். சும்மா அமர்ந்திருந்தாலே மனிதர் 6 அடிக்கு இருப்பார். இவர் தான் வாலிபால் ஹீரோ.

வில்வித்தையில் அசர வைத்தவர் மத் ஸ்டட்ஸ்மேன் என்ற ஆர்ம்லெஸ் ஆர்ச்சர். அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டட்ஸ்மேன் கடந்த லண்டன் பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ரியோவில் பதக்கம் வெல்லவில்லையென்றாலும் இவர் அம்பு எய்வதை பார்க்கவே அரங்கத்தில் கூட்டம் அலை மோதியது. வலது காலால் வில்லைத் தூக்கி நாடியால் அம்பை எய்கிறார். 283.59 மீட்டர் தொலைவுக்கு அம்பு எய்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். இவரது இந்த சாதனை இன்று வரை கை உள்ளவர்களாலேயே கூட முறியடிக்கப்படவில்லை.

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி பார்முலா ஒன் வீரர் அலெக்ஸ் ஸனார்டி கொடூர விபத்தில் சிக்கினார். இத்தாலியைச் சேந்த் இவர் யூரோ ஸ்பீடுவேயில் இருந்து காருடன் தூக்கி எறியப்பட்டார். விபத்தில் அலெக்சின் உடலில் இருந்து 3 லிட்டர் ரத்தம் வெளியேறி விட்டது. அவரது இதயம் 7 முறை நின்று நின்று இயங்கியது. எனினும் மருத்துவர்கள் கடும் முயற்சி எடுத்து அவரைக் காப்பற்றி விட்டனர். விபத்தில் இரு கால்களும் இழந்து விட்டார். ஆனால், வீட்டில் முடங்கிக் கிடக்கவில்லை. கையால் சைக்கிள் ஓட்டத் தொடங்கினார். ரியோ பாராலிம்பிக்கில் தான் விபத்தில் சிக்கிய அதே தேதியில் அதாவது செப்டம்பர் 15ம் தேதி பாரா சைக்கிளிங்கில் அலெக்ஸ் தங்கம் வென்றது அனைவரையும் நெகிழ வைத்தது.

உங்களுக்கு உசேன் போல்ட்டைத் தெரியும். 100 மீட்டர் சாம்பியன். உலகின் மிக வேகமான மனிதர். பாராலிம்பிக்ல உசேன் போல்ட் யார் எனத் தெரியுமா?. அயர்லாந்தைச் சேர்ந்த ஜேசன் ஸ்மித் என்பவர்தான் பாராலிம்பிக்கின் சிறுத்தை. இவரும் உசேன் போல்ட் போல தொடர்ச்சியாக 100 மீட்டர் ஓட்டத்தில் மூன்று முறை தங்கம் வென்றுள்ளார். பெய்ஜிங், லண்டன் ரியோ என ஜேசன் ஸ்மித்தின் தங்க வேட்டைத் தொடர்ந்தது. கியூபா வீராங்கனை ஓமாரா டுரான்ட் மகளிருக்கான 100 மீட்டரில் தங்கம் வென்றார். இவர் பார்வைக் குறைபாடு உள்ளவர்.

ஒலிம்பிக் வீரர்களைக் காட்டிலும் பாராலிம்பிக் வீரர்களிடம் இருந்துதான் நாம் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்றேத் தோன்றுகிறது!

-எம். குமரேசன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்