'லைக்ஸ் மழை பொழியுது ப்ரோ!' #ஐ.எஸ்.எல் தமிழர்கள் | ISL Football players from tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (12/10/2016)

கடைசி தொடர்பு:14:29 (12/10/2016)

'லைக்ஸ் மழை பொழியுது ப்ரோ!' #ஐ.எஸ்.எல் தமிழர்கள்


கிரிக்கெட்டுக்கு அடுத்த இடம் இந்தியாவில் கால்பந்துக்குதான். சூடுபிடித்திருக்கிறது ஐ.எஸ்.எல். அதில் விளையாடும் தமிழக வீரர்கள் மூவரை சந்தித்தோம்.

ராவணன்: 


”எங்க தாத்தா தி.க.ல இருந்தாரு. வீரமணிதான் எனக்கு பேர் வச்சாரு’ என படபடவென பேசும் ராவணன், ஐஎஸ்எல் தொடரில், புனே சிட்டி எப்.சி. அணியின் தவிர்க்க முடியாத வீரர். 

''இந்தியன் பேங்க்ல கிடைச்ச வேலையை 20 வயசுலயே ரிசைன் பண்ணிட்டு, ஃபுட்பால்தான் என் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டேன். இன்னிக்கி வரைக்கும் எந்த குறையும் இல்லை. கிரிக்கெட் பிளேயர்ஸ் மாதிரி நாங்களும் ஃபிளைட்ல போறோம், ஸ்டார் ஹோட்டல்ல தங்குறோம், ஃபாரின் ட்ரிப் அடிக்கிறோம். அஃப்கோர்ஸ்... நல்லாவே சம்பாதிக்கிறோம்'' என உற்சாகமாக தொடங்கினார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பறை ராவணன் சொந்த ஊர். திருச்சி பிஷப் ஹெர்பர் பள்ளியில் படிக்கும்போது கால்பந்து மீது காதல். அந்த காதலுக்காக கையில் கிடைத்த இந்தியன் வங்கி வேலையை உதறிவிட்டு, கோவா மற்றும் கொல்கத்தாவில் டெம்போ, சர்ச்சில் பிரதர்ஸ், மோகன் பகான், மகேந்திரா சிட்டி எப்.சி. என ஐ-லீக் கிளப்களில் ஃபுட்பால் விளையாடத் தொடங்கி விட்டார். சந்தோஷ் டிராபிக்கான தமிழக அணியில் இடம்பெற்றிருந்த ராவணன், இந்திய அணியின் ஜெர்ஸி அணிந்து, ‛ஜனகண மண’ பாடியதை இன்னும் பெருமையாக சொல்கிறார்.

முதல் ஐஎஸ்எல் சீசனில் புனே எப்.சி. அணி ராவணனை கொத்திச் சென்றது. இன்றுவரை அவரை விடவே இல்லை. ஐ-லீக் போட்டிகளின் மூலம் போதுமான சம்பாத்யம் கிடைத்து விட்டது என்றாலும் ஐஎஸ்எல்தான் அவருக்கு அடையாளம் கொடுத்தது. இதை அவர் மறுக்கவும் இல்லை. ”பத்து வருஷமா ஃபுட்பால் ஆடுறேன். இந்தியன் டீம்ல 5 வருஷம் இருந்தேன். யாருக்குமே என்னைத் தெரியாது. ஐஎஸ்எல்ல ஆடுறதால, யார் யாரோ விசாரிக்கிறாங்க. சோசியல் மீடியாவுல லைக்ஸ் அள்ளுது. ஃபுட்பால் ஆடுனா என்ன கிடைக்கும்னு கண்டுக்காம இருந்த சொந்த பந்தம் இப்ப ரொம்ப நெருக்கமாயிடுச்சு. ஃபுட்பால் பிளேயரா செம ஹேப்பி’’ என ஐஎஸ்எல் புராணம் பாடினார்.

 

மோகன்ராஜ்: 


எப்போது ஃபோன் செய்தாலும் அடுத்த நொடியே அட்டென் பண்ணும் மோகன்ராஜ், ஐஎஸ்எல் தொடங்கியதும் செம பிஸி. 'ப்ரோ நீங்க ஒரு வார்த்தை மீடியா மேனேஜர்ட்ட பெர்மிஷன் கேட்ருங்க. இல்லைன்னா எனக்கு சிக்கல் வரும்’ என்கிறார் கிரிக்கெட் வீரர்களைப் போல. ராவணன் சொன்னதைப் போல, ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்கும் வீரர்களை கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறது ஐஎஸ்எல் நிர்வாகம்.

முதல் இரண்டு சீசன்கள் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியின் லெஃப்ட் பேக் ஏரியாவில் ரவுண்டு கட்டி நின்ற மோகன்ராஜ் நல்லப்பன், இப்போது சென்னையின் எப்.சி. அணியில். இதற்கான அறிவிப்பு வெளியான மேடையில் மோகன்ராஜ் சொன்னது செம ரொமான்டிக். ''என்ன சொல்றது... முதல் காதலியை கல்யாணம் பண்ண மாதிரி சந்தோஷமா இருக்கு’’

இடது காலில் பவர்ஃபுல்லாக ஷாட் அடிப்பதில் வல்லவர்; சிறந்த லெஃப்ட் பேக் என பெயரெடுத்தவர்; சந்தோஷ் டிராபி தொடரில் தமிழக அணிக்காக விளையாடியதை பெருமையாக கருதுபவரான மோகன்ராஜ், நாமக்கல் மாவட்டத்தில் பிறந்து, சென்னை நேரு மைதானத்தில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் கால்பந்துக்கான பால பாடம் பயின்றவர், பத்த ஆண்டுகளுக்குப் பின் அதே மைதானத்தில் 30 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடி வருகிறார். இதை மனதில் வைத்துத்தான் முதல் காதலி, திருமணம் என உருகினார்.


''ஏஜ் குரூப் போட்டி எதற்குமே நான் செலக்ட் ஆகவில்லை. திடீரென இந்திய ஜூனியர் அணிக்கு தேர்வானேன். கொல்கத்தா சென்று மோகன் பகான் அணியில் 5 ஆண்டுகள் விளையாடியபோதுதான் கம்ப்ளீட் ஃபுட்பால் பிளேயராக மாறினேன்’’ என்று சொல்லும் மோகன்ராஜ், கோவாவில் ஸ்போர்டிங் கிளப் அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் விளையாடிய அனுபவம் நிறைந்தவர்.

''கூட ஒரு வருஷம் ஃபுட்பால் விளையாடலாம்னு நினைச்சு, நைன்த் படிக்கிறப்போ, எக்ஸாம் எழுதாம மட்டம் போட்டு, கிரவுண்ட்ல போயி தூாங்கிட்டேன். எனக்கு ஃபுட்பால்தான் எல்லாமே. கால்பந்து இல்லைன்னா நான் இல்லை. ரொம்ப நாள் கழிச்சு சொந்த மண்ல ஆடுறது சந்தோஷமா இருக்கு. அப்படியே இந்த சீசனும் சென்னையின் எப்சி சாம்பியன் பட்டம் ஜெயிக்கனும். இதுதான் இப்போதைய இலக்கு’’ என கண் சிமிட்டுகிறார்.

 

தனபால் கணேஷ்:


கடந்த சீசனில் சென்னையின் எப்.சி சாம்பியன் பட்டம் வென்ற மறுநாள் சென்னை நேரு மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம். அணியின் ஓனர்கள் வீதா தானி, அபிசேக் பச்சன் என ஆளாளுக்கு ‛லோக்கல் பிளேயர் ஃபர்ஸ்ட், லோக்கல் பிளேயர் ஃபர்ஸ்ட்’ என, ஒரு உள்ளூர் வீரனுக்கு முதல் மரியாதை வழங்கினர். ஆம், ஆடாமலேயே ஜெயித்திருந்தார் தனபால் கணேஷ்.

மெட்ராஸ்’ படத்தில் வருவதைப் போல, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகும் கனவோடு வியாசர்பாடி மைதானத்தில் சுற்றித் திரிந்தவர்களில் ஒருவர் கணேஷ். ‛சின்ன வயசுல இருந்தே ஃபுட்பால்னா ரொம்ப பிடிக்கும் . நெய்வேலி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல்ல இருந்தப்ப, முன்னாள் வீரர் ராமன் விஜயன் பேசிய பேச்சு செம இன்ஸ்பிரேசன். அதுல இருந்து ஃபுட்பால் பிளேயர் ஆகனும்னு முடிவு பண்ணிட்டேன்’ என சொல்லும் கணேஷ், உலக கோப்பை தகுதிச்சுற்றுக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.
சென்னை அணியில் இடம்பெற்றிருக்கும் முதல் சென்னை வீரர் என தனபால் கணேஷ் மீது கடந்த சீசனில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு. ‛முதல்முறையா அம்மா, அப்பா முன்னாடி ஆடப் போறதை நினைச்சா சிலிர்ப்பா இருக்கு’ எனச் சொன்னவருக்கு, காயத்தின் வடிவில் வந்தது வினை. இந்திய அணியில் இருந்தபோது பயிற்சியின்போது காலில் ஏற்பட்ட அடி, கடந்த ஐஎஸ்எல் சீசன் முழுவதும் அவரை கிரவுண்டில் அடியெடுத்து வைக்காமல் செய்து விட்டது. 

போன வருஷம் அடிபட்டு, ஆட முடியாம போனது கூட வலிக்கலை. நான் ஃபுட்பால் விளையாடுறதை எங்க அம்மா நேர்ல பாத்ததே இல்லை. அதுக்கு வாய்ப்பு கிடைச்சும் கடைசி நேரத்துல மிஸ் ஆயிடுச்சு. அதான் வருத்தமா இருந்துச்சு. இந்தமுறை ஃபிட்டா இருக்கேன். ஒரு கலக்கு கலக்கிரலாம்’’ என கட்டை விரலை உயர்த்திப் பிடித்தார் கணேஷ்.


-தா.ரமேஷ்
படங்கள்: பாலசுப்ரமணியன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்