வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (14/10/2016)

கடைசி தொடர்பு:17:14 (14/10/2016)

பதக்கத்துக்காக உயிரைப் பணயம் வைத்தவர்... பயிற்சிக்காக காரை திருப்பி கொடுத்தார்!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து, சாக் ஷி  மலிக், பேட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த் மற்றும் தீபா ஆகியோருக்கு சச்சின் தலைமையில் ஹைதரபாத்தில் நடந்த விழாவில் பிஎம்டபிள்யூ கார் பரிசாக வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 30 முதல் 35 லட்சம் வரை இருக்கும்.

ஆனால், திரிபுராத் தலைநகர் அகர்தாலாவில் வசித்து வரும் தீபா கர்மாகருக்கு இந்த விலைஉயர்ந்த காரால் எந்த பயனும் இல்லை.  அதற்கு ஈடான நிதி தருமாறு தீபாவின் தந்தை டூலால் கம்ராகர் வேண்டுகோள் விடுத்திருந்தார். தனக்கு பி.எம்.டபிள்யூ. கார் வழங்கியதற்கு ஏற்பாடு செய்த  சச்சின் உள்ளிட்டோருக்கு தீபா நேற்று நன்றியும் காரை திருப்பி அளித்தற்கான காரணத்தையும் தீபா ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

 ஜிம்னாஸ்டிக்கில் ப்ரொடுனோவா (produnova) வால்ட் பிரிவில் தீபா போட்டியிடுகிறார். கடந்த 1999ம் ஆண்டு ரஷ்ய வீராங்கனை எலினா ப்ரொடுனோவா,   ஜிம்னாஸ்டிக்கில்  இந்தப் பிரிவை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து இந்த வால்ட்டுக்கு ‘ப்ரொடுனோவா’ என்றே பெயர் சூட்டப்பட்டது. ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் ப்ரோடுனோவா பிரிவில் கரணம் தப்பினால் மரணம் நிகழ்ந்து விட வாய்ப்பு அதிகம்.  அதனால் பெரும்பாலானா வீரர்-  வீராங்கனைகள் இந்த பிரிவைத் தேர்வு செய்யத் தயங்குவார்கள். ஸ்பிரிங்போர்டு மீது கை வைத்து, அந்தரத்தில் இரண்டு முறை பல்டி அடித்து, தடுமாறாமல் கால்களை தரையில் ஊன்றி நிற்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று பிசகினாலும், கை கால் ஒடியலாம், முதுகில் பலத்த அடி படலாம். உயிரிழப்புக் கூட ஏற்படலாம். ரியோ ஒலிம்பிக்கில் இதே பிரிவில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை சைமன் பைல்ஸ் கூட   ‘ப்ரொடுனோவா’ பிரிவை தேர்ந்தெடுக்க தயங்கியவர்தான்.

தீபாவோ ‘ப்ரொடுனோவா வால்ட்தான் என் வாழ்க்கை. இதில் வெற்றி அடையவில்லை எனில், நான் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையே அல்ல’ என அடம்பிடித்து  சாதித்தும் காட்டினார்.  ரியோவில் அசத்திய தீபா குறைந்தது வெண்கலம் பதக்கமாவது வெல்வார் என தேசமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனால், தீபாவால் நான்காவது இடத்தையே பிடிக்க முடிந்தது. எனினும் இந்திய வீராங்கனை ஒருவர் ஜிம்னாஸ்டிக்கில் சாதித்தது தங்கம் வென்றதற்கு சமம்தான். அதனால், தீபா ஒரே நாளில் இந்தியா முழுவதும் பாப்புலரும் ஆகி விட்டார். அதேவேளையில் வென்றால் மட்டும்தானே நம்மவர்கள் பரிசுகளை அள்ளிக் கொடுப்பார்கள்.  அந்த வகையில் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவுக்கும் சாக் ஷி மலிக்கிற்கும் மத்திய மாநில அரசுகள் கோடிக் கணக்கில் பரிசுகளை அள்ளி வழங்கின. பதக்கம் வெல்லாத தீபாவுக்கு வெறும் குறைவான பரிசுத் தொகையே  கிடைத்தது.

ஆனால், சச்சின் தெண்டுல்கர் மற்றும் ஹைதரபாத் பேட்மின்டன் சங்கத்தின் முயற்சியின் பலனாக ஒலிம்பிக்கில் சாதித்தவர்கள் மற்றும் பதக்கம் வென்றவர்களுக்கு பிஎம்டபிள்யூ கார் வழங்கப்பட்டது. அந்த வகையில், தீபாவின் சாதனையை பாராட்டி தீபாவுக்கும் சச்சின் பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கினார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தீபாவால் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள அந்த காரை வைத்து பராமரிக்க முடியவில்லை. அதனால், காரை திருப்பிக் கொடுக்கும் முடிவுக்கு தீபா வந்துள்ளார். ஆனால்,  காரை திருப்பி கொடுத்தற்கான உண்மைக் காரணம் தற்போது வெளி வந்துள்ளது.

அடுத்த ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வெல்லும் நோக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட தீபா முடிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளில் நடைபெறும் ஜிம்னாஸ்டிக் போட்டிகளிலும்  பங்கேற்க தீபா முடிவெடுத்துள்ளார். ஆனால், அவரை வெளிநாடுகளுக்கு தொடர்ச்சியாக அனுப்பி போட்டிகளில் பங்கேற்க வைக்க இந்திய ஜிம்னாஸ்டிக் கழகத்திடம் போதிய நிதி ஆதாரம் இல்லை எனக் கூறப்படுகிறது. அதனால்தான் காரைத் திருப்பிக் கொடுத்து விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பயிற்சி மற்றும் சர்வதேவ போட்டிகளில் பங்கேற்கும் முடிவுக்கு தீபா வந்துள்ளார்.

இது குறித்து தீபாவின் பயிற்சியாளர் பிஷேஷ்வர் நன்டி கூறுகையில், ''ரியோவில் இருந்து திரும்பிய பிறகு தீபா ஒரு மாத காலம் ஓய்வில் இருந்தார். வழக்கமாக நாங்கள் ஆண்டுக்கு 3,4 சர்வதேச போட்டிகளில் பங்கேற்போம். டோக்கியோ ஒலிம்பிக்கை பதக்கம் வெல்வது இலக்கு. அதனால், இந்த ஆண்டு 10 போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். இந்திய ஜிம்னாஸ்டிக் கழகத்தின் நிதி நிலைமை குறித்து எனக்குத் தெரியவில்லை. காரைத் திருப்பிக் கொடுத்தால், அதில் இருந்து கிடைக்கும் பணத்தில் சிறிய காரை வாங்கி விட்டு, மீதி பணத்தில் பயிற்சிக்குத் தேவையான பிசியோதெரபி பயிற்சி உபகரணங்கள் வாங்க உள்ளோம்.  போக்குவரத்துச் செலவுகளுக்கும் அந்த தொகை உதவியாக இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.

பதக்கத்துக்காக உயிரை பணயம் வைத்தவர் இப்போது பயிற்சிக்காக காரைத் திருப்பிக் கொடுக்கிறார்... இதுதான் இந்திய விளையாட்டுத்துறை!

- எம். குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்