இந்தியா........டா? அரசியலையும் மீறி ஜெயிச்சோம்னு சொல்லுங்க...

ந்தியாவில் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் இடையே கிரிக்கெட்  போட்டிகளுக்கான மோகம் சற்றே தணியும் வகையில், இந்திய கபடி அணி உலகக் கோப்பையை மீண்டும் வென்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் அணி தேர்வு அரசியலை விடவும், மிகவும் அரசியல் நிறைந்த கபடி விளையாட்டில், அனைத்து அரசியலையும் மீறி இந்திய அணி சாம்பியனாகியுள்ளது. 

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கபடிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், ஈரான் அணியை இந்திய கபடி அணி வீரர்கள் 38-29 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டனர். இந்தியாவின் அஜய் தாகூர் 14 புள்ளிகளை எடுத்து, அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். 

உலகக்கோப்பை கபடிப் போட்டித் தொடரில் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளின் அணிகள் கலந்து கொண்டன.  கொரியாவும், தாய்லாந்தும் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறிய போதிலும், இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறின.

நேற்று நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, முதல் பாதி முடிவில்  13-18 என்ற புள்ளிக்கணக்கில் பின்தங்கியிருந்தது. எனினும் இரண்டாவது பாதியில் இந்தியா எழுச்சி பெற்றது. அஜய் தாகூர் அடுத்தடுத்து புள்ளிகள் குவித்ததால், ஈரானை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறத் தொடங்கியது.  போட்டி முடிவடைவதற்கு 5 நிமிடத்துக்கு முன் ஈரானைவிட இந்தியா 5 புள்ளிகள் முன்னிலை பெற்றது.  தொடர்ந்து, ஈரானை இரண்டாவது முறையாக ஆல் அவுட் செய்ததால், ஆட்டத்தின் முடிவில் 38-29 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை இந்தியா தக்கவைத்துக் கொண்டது.இந்த வெற்றியுடன் சேர்த்து இந்தியா, உலகக் கோப்பையை 8 முறை வென்றுள்ளது. ஏற்கெனவே 2004 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஸ்டாண்டர்டு முறையிலான உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஈரானை வென்றிருந்த நிலையில், தற்போது 3-வது முறையாக ஈரான் அணியை வென்றுள்ளது.

கபடியைப் பொருத்தவரை ஸ்டாண்டர்டு, சர்க்கிள் என இரண்டு விதமாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. தற்போதைய உலகக் கோப்பை போட்டித் தொடர் ஸ்டாண்டர்டு முறையிலேயே நடத்தப்படுகிறது. இதுவே உலக அளவில் பின்பற்றப்பட்டு வருகிறது. பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் வட்டவடிவிலான மைதானத்தில் நடத்தப்படும் கபடிப் போட்டிகளுக்கு சர்வதேச கபடி அமைப்பு அங்கீகாரம் அளிக்கவில்லை.
2010 முதல் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்ற சர்க்கிள் முறையிலான கபடிப் போட்டித் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றுள்ளது. இந்த முறை அடைந்துள்ள வெற்றியின் மூலம் கபடி ஆட்டத்தில் இந்திய வீரர்களே கோலொச்சுவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். 

உலகக் கோப்பையை வென்றதன் மூலம் இந்திய கபடி அணிக்கு ரூ. 2 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளது. உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கபடி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது அரசியலையும் மீறி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் போட்டிகளில் தான் அரசியல் என்றில்லை. கபடிப் போட்டியிலும், வீரர்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களிலும் அரசியல் உண்டு. அந்த அரசியலை எல்லாம் மீறி, இந்திய கபடி அணி, தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்று வருவதை இந்தியர்கள் ஒவ்வொருவரும் பாராட்டியே தீர வேண்டும்.

கபடிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதும், மைதானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். வண்ணக் காகிதங்களை வீசியும், செல்போன்களில் உள்ள டார்ச் ஒளியை பரப்பியும் உற்சாக நடனம் ஆடி, வெற்றியைக் கொண்டாடினர்.

வழக்கமாக கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்காக மட்டுமே, ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபடும் நிலையில், உலகக் கோப்பை கபடி சாம்பியன் பட்டம், ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசாக அமைந்தது. கபடி விளையாட்டுக்கும் இந்தியாவில் மவுசு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில்  இந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் அமைந்திருந்தன.

எது எப்படியாயினும், உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் விளையாட்டு என்றாலே கிரிக்கெட் என்ற இளைஞர்களின் மன ஓட்டத்தை ஓரளவு மாற்ற முடிந்துள்ளது என்பதில் ஐயமில்லை. அதேபோல் ஊடகங்களும் கபடி, பேட்மிண்டன், கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளையும் முன்னிலைப்படுத்தி எழுதுவோமாக! 

- சி.வெங்கட சேது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!