வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (03/11/2016)

கடைசி தொடர்பு:18:28 (03/11/2016)

தன்னால் கோமாவில் இருந்து மீண்ட சிறுவனைச் சந்தித்த ரொனால்டோ! #Video

கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்கும் கமென்ட்ரியை கேட்டுக் கேட்டு, போலந்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் கோமாவில் இருந்து சுய நினைவு திரும்பினார். அந்த சிறுவனை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொன்னார் ரொனால்டோ. 

போலந்து நாட்டைச் சேர்ந்த டேவிட் பவ்லாசிக், 2013-ம் ஆண்டு தன் நண்பனின் வீட்டில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது கார் ஒன்று அவர் பைக் மீது மோதியதில் டேவிட் படுகாயம் அடைந்து கோமா நிலைக்குச் சென்றார். மூன்று மாதங்களாக கோமாவில் இருந்தார்.

கோமாவில் உள்ளவர்களிடம் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி சுயநினைவுக்கு கொண்டு வர முயற்சிப்பதுண்டு. டேவிட் விஷயத்திலும் அந்த முயற்சி நடந்தது. அந்த சிறுவன் போர்ச்சுகலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகன்.  அவனுக்குப் பிடித்த கால்பந்து அணி ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப்.

இதைப் புரிந்து கொண்ட மருத்துவர்கள், ரியல் மாட்ரிட் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்கும் காட்சியை ஒளிபரப்பி, அந்த கமென்ட்ரியை மீண்டும் மீண்டும் அவனை கேட்க வைத்தனர். ஒரு கட்டத்தில் இதைக் கேட்டு அந்த சிறுவன் சுயநினைவுக்குத் திரும்பினான். நினைவு திரும்பியதும் டேவிட், உடனடியாக தன் ஆதர்ச நாயகனை நேரில் பார்க்கத் துடித்தான். 

கடந்த 2014ல் மாட்ரிட் நகரில் உள்ள ரியல் மாட்ரிட் சொந்த மைதானமான சான்டியாகோ பெர்னபுவில் நடந்த, ரியல் மாட்ரிட் -பேயர்ன் மியூனிக் மோதிய சாம்பியன்ஸ் லீக் போட்டியின்போது, ரொனால்டோவைப் பார்க்க அந்த சிறுவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீண்டும், ரொனால்டோவை குடும்பத்தினருடன் சந்தித்தான் அந்த சிறுவன். 


போலந்து நாட்டின் வார்ஸா நகரில் நேற்று சாம்பியன்ஸ் லீக் போட்டியில், ரியல் மாட்ரிட் - லீஜியா வார்ஸா அணிகள் மோதின. இதில் பங்கேற்பதற்காக ரியல் மாட்ரிட் அணியினருடன் வார்ஸாவுக்கு வந்திருந்தார் ரொனால்டோ. தகவல் அறிந்து ரொனால்டோவை சந்திப்பதற்கான அப்பாயின்ட்மென்ட் வாங்கி வைத்திருந்தனர், டேவிட்டின் பெற்றோர்.

போட்டி தொடங்குவதற்கு முன், ரொனால்டோ அந்த சிறுவனை சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டார். டேவிட் கொண்டு வந்திருந்த புத்தகம், ஜெர்ஸியில் கையெழுத்துப் போட்ட ரொனால்டோ, டேவிட்டின் முன்னேற்றம் குறித்து மொழிபெயர்ப்பாளர் சொல்வதை ஆவலுடன் கேட்டறிந்தார்.  ‛‛டேவிட் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறான், நன்கு தேறி விட்டான். அவன் இயல்பாக இருப்பதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது’’ என்றார் ரொனால்டோ. இந்த வீடியோவை ரியல் மாட்ரிட் கிளப் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்