ரஞ்சியில் 48 பந்துகளில் சாதனைச் சதம்! யார் இந்த ரிஷப் பன்ட்? | Rishabh Pant slams fastest century in domestic cricket

வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (08/11/2016)

கடைசி தொடர்பு:16:41 (08/11/2016)

ரஞ்சியில் 48 பந்துகளில் சாதனைச் சதம்! யார் இந்த ரிஷப் பன்ட்?

ரிஷப் பன்ட்

ரஞ்சி டிராபியில், டெல்லியைச் சேர்ந்த 19 வயது ரிஷப் பன்ட், ஜார்கண்ட் அணிக்கு எதிராக 48 பந்துகளில் சதம் அடித்து, முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என சாதனை படைத்துள்ளார். 

பி.சி.சி.ஐ. நடத்தும் ரஞ்சி டிராபி தொடரின் ஐந்தாவது சுற்றுப் போட்டிகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள டெல்லி - ஜார்கண்ட் அணிகள் மோதும் போட்டி தும்பாவில் நடக்கிறது. 

ஜார்க்கண்ட் அணியின் இஷான் கிஷன் 273 ரன்கள் விளாச, முதல் இன்னிங்சில் அந்த அணி 493 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணியின் கேப்டன் உன்முக்த் சந்த் 109, ரிஷப் பன்ட் 117 ரன்கள் எடுத்து உதவ, டெல்லி  முதல் இன்னிங்சில் 334 ரன்கள் அடித்தது. 

ஃபாலோ ஆன் பெற்ற டெல்லி அணி இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்தது. தொடக்க வீரர்கள் உன்முக்த் சந்த் 63, துருவ் ஷாரி 91 ரன்கள் விளாச, மிடில் ஆர்டரில் வெளுத்து வாங்கினார் ரிஷப் பன்ட். சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசிய ரிஷப் 48 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். கடைசியில் 135 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்தவர் என்று சாதனை படைத்தார். இதற்கு முன் ஆர்.கே.போரா மற்றும் வி.பி.சந்திரசேகர் இருவரும் 56 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

முதல் இன்னிங்சில் ரிஷப் 82 பந்தில் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் ரஞ்சி டிராபியில்  முதல் இன்னிங்சில் அதிவேகமாக சதம் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமை பெற்றிருந்த நிலையில், தற்போது இரண்டாவது இன்னிங்சில் அதிவேகமாக சதம் அடித்து, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையையும் தன் மீது திருப்பியுள்ளார்.  

விக்கெட் கீப்பரான ரிஷப்பின் வயது 19 என்பதால், ஒரு நாயகன் உருவாகி வருவதாக பி.சி.சி.ஐ. டொமஸ்டிக் மேட்ச்களை உன்னிப்பாக கவனித்து வருபவர்கள் கணிக்கின்றனர்.  இந்த ரஞ்சி சீசனில் ரிஷப் கடைசி ஆறு இன்னிங்ஸில் 146, 308, 24, 60, 117, 135 ரன்கள் அடித்ததும் அதற்கு ஒரு காரணம். 

 


சேவாக் ரோல் மாடல்

மகாராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி போட்டியின்போது முச்சதம் அடித்தபோதே, ‛ரிஷப் பன்ட்: தி ரெக்கார்ட் பிளேயர்’ என இந்தியன் எக்ஸ்பிரஸ் பெரிய எழுத்துகளில் எதிர்கால நாயகனை வரவேற்றது. அது வீண் போகவில்லை. ரிஷப்பின் ரோல் மாடல் சேவாக். ரஞ்சியில் அவருடன் இணைந்து,  அவரைப் போலவே ஆட வேண்டும் என்பது ரிஷப் விருப்பம். சேவாக், ஹரியானா அணிக்கு மாறியதால், ரிஷப் ஆசை நிறைவேறவில்லை. இதை சேவாக்கிடம் சொன்னபோது ‛கவலைப்படாதே, தொடர்ந்து என்னைப் போலவே ஆடு’ என உற்சாகம் தந்தார் சேவாக். மகாராஷ்டிராவுக்கு எதிராக முச்சதம் விளாசியதும், சேவாக் முதல் ஆளாக ட்விட்டரில் ரிஷப்புக்கு வாழ்த்து தெரிவித்தார். இப்போதும் முதல் ஆளாக, ரிஷப்பின் அதிவேக சத சாதனையை ட்விட் செய்துள்ளார் சேவாக். 

ரிஷப் முச்சதம் விளாசிய போட்டியில் மகாராஷ்டிரா கேப்டன் ஸ்வப்னில் கக்லேவும் 351 ரன்கள் அடித்திருந்தார். ஆனால், தன் இன்னிங்ஸை விட ரிஷப் அடித்த முச்சதம் தான் பெரிது என பாராட்டினார் ஸ்வப்னில். ‛‛தனி ஆளாக அவர் ஆட்டத்தை மாற்றி விட்டார். நாங்கள் பேட் செய்தபோது சரியான பார்ட்னர்ஷிப் அமைந்தது. எல்லோரும் சரிவிகிதத்தில் ரன் அடித்தோம். ஆனால், ரிஷப் அப்படி அல்ல. தனி ஆளாக மிரட்டினார்’’ என்றார் ஸ்வப்னில். ‛‛பிரமிக்கத்தக்க இன்னிங்ஸ்’ என சிலாகித்தார் மகாராஷ்டிரா பயிற்சியாளர் ஸ்ரீகாந்த் கல்யாணி.

‛‛ரிஷப் டைபிகல் பிக் ஹிட்டர் அல்ல. ஆனால், வேகப்பந்து வீச்சை பவுண்டரிக்கு விரட்டி, சுழற்பந்தை தூாக்கி அடிப்பதில் வல்லவர். ரிஷப் சர்வதேச அளவில் மெச்சும் வகையில் ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன் அல்ல, ஆனால், ரசிகர்களை திருப்திப்படுத்தும் ஆட்டக்காரன். சர்வதேச அளவிலான பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வான் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், அவன் எதையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பான். இது அவன் பலம்’’ என பாராட்டுப் பத்திரம் வாசித்தார் டெல்லி பயிற்சியாளர் கே.பி.பாஸ்கர்.
‛‛நானும் விக்கெட் கீப்பர், அவரும் விக்கெட் கீப்பர், நானும் இடது கை பேட்ஸ்மேன், அவரும் இடது கை பேட்ஸ்மேன் என்பதால், எனக்கு ஆரம்பத்தில் ஆடம் கில்கிறிஸ்டை பிடிக்கும். அடுத்து விராட் கோலி போல பேட்டிங் செய்யவும், தோனி போல விக்கெட் கீப்பிங் செய்யவும் கற்றுக் கொண்டேன்.  இந்திய அணிக்காக விளையாடுவதுதான் என் விருப்பம். இப்போதைக்கு ரஞ்சி டிராபியில் கவனம் செலுத்தி வருகிறேன்’’ என்பது ரிஷப் ஸ்டேட்மென்ட்.

ஏற்கெனவே,  ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணி சார்பிலும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி சார்பிலும் முத்திரை பதித்திருந்ததால், ரிஷப் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அந்த நம்பிக்கையை இந்த ரஞ்சி  சீசனில் நிறைவேற்றி வருகிறார். 

‛‛ஆரம்பத்தில் என் பெயரை அப்படியே எழுதினேன். ஆனால், இது இன்ட்ரஸ்டிங்காக இல்லை. வீட்டில் உட்கார்ந்து எழுதி எழுதிப் பார்த்தேன். இப்போது ஆட்டோகிராப் போட பழகி விட்டேன்’’ என, அடுத்த இன்னிங்ஸுக்கு தயாராகி விட்டார் ரிஷப்.

முன்பு ஒருமுறை, மும்பை வான்கடே மைதானத்தில், நிருபர்கள் ரிஷப்பிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது, ரிஷப் பெயரை சொல்லி கத்திக் கொண்டிருந்தனர் ரசிகர்கள். அவர்களிடம் சென்று செல்ஃபி எடுத்துவிட்டு, வரிசையாக ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருந்தார் ரிஷப். அதில் ஒரு சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் இருந்தன.


முதல்தர கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்தியர்கள்

48 ரிஷப் பன்ட் 2016 - 17
56 ஆர்.கே. போரா 1987 - 88
56 வி.பி.சந்திரசேகர் 1988 -89 
60 ரூபன் பால் 1995 - 96 

முதல்தர கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள்
23 - காலின் முன்ரோ - 2015
21 - ரிஷப் பன்ட் - 2016
20 - ஆன்ட்ரூ சைமண்ட்ஸ் - 1995 

- தா.ரமேஷ்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்