ஒரே விமானத்தில் மூன்று கால்பந்து வீரர்கள் - முடிவுக்கு வருகிறதா 100 ஆண்டு பகை? | Neymar gives Messi lift on private jet

வெளியிடப்பட்ட நேரம்: 07:55 (11/11/2016)

கடைசி தொடர்பு:10:48 (11/11/2016)

ஒரே விமானத்தில் மூன்று கால்பந்து வீரர்கள் - முடிவுக்கு வருகிறதா 100 ஆண்டு பகை?

கால்பந்து

உலகுக்கு அந்த இரு நாடுகளும் கால்பந்து வீரர்களை உற்பத்தி செய்து தருகின்றன, அவை பக்கத்து பக்கத்து நாடுகளும் கூட. பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் கால்பந்துதான் வாழ்க்கை. கால்பந்து உலகுக்கு இரு ஜாம்பவான்கள். ஒருவர் பீலே இன்னொருவர் மரடோனா. களத்தில் எப்படி இரு அணி வீரர்களும் மோதிக் கொள்கிறார்களோ அது போலவே இரு ஜாம்பவான்களும் வார்த்தைகளால் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். ஒருவர் நெய்மர்தான் சிறந்தவர் என்றால் இன்னொருவர் மெஸ்சிதான் சூப்பர் என்பார். களத்திலும் இரு அணிகளும் மோதினால் அனல் பறக்கும். இரு அணிகளும் 114 முறை மோதியுள்ளன. பிரேசில் 39 முறையும் அர்ஜென்டினா 37 முறையும் வெற்றிப் பெற்றுள்ளன. கால்பந்து உலகில் கிட்டத்தட்ட 100 ஆண்டு கால பகை இது.

சமீப காலமாக இந்த பகையுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. அதற்கு கிளப் கால்பந்தும் ஒரு காரணம் எனக் கூறலாம்.  அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி,  பிரேசில் கேப்டன் நெய்மர் ஆகிய இருவருமே லாலீகா சாம்பியன் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருபவர்கள்.

அர்ஜென்டினா அணியின் பின்கள வீரர் ஜேவியர் மச்சரானாவும் பார்சிலோனா அணிக்காகத்தான் விளையாடுகிறார். இந்த நிலையில் பிரேசிலின் பெலோ ஹரிசான்டே நகரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டியில்,  பிரேசிலும் அர்ஜென்டினாவும் இன்று மோத உள்ளன. தென்அமெரிக்காவின் 'சூப்பர் கிளாசிகோ' மோதல் என்று இதனைச் சொல்வார்கள். 

இதில் கலந்துகொள்வதற்காக நெய்மர் தனக்கு சொந்தமான விமானத்தில் பார்சிலோனாவில் இருந்து பிரேசில் புறப்பட்டார். மெஸ்சியும் ஜேவியர் மச்சரானோவும் கூட அதேப் போட்டிக்கு அதே நகருக்குத்தான் வர வேண்டும் என்பது நெய்மருக்குத் தெரியும் என்பதால், தனது விமானத்திலேயே அவர்கள் இருவரையும் வந்து விடுமாறு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து மூன்று பேரும் ஒரே விமானத்தில் பெலோ ஹரிசான்டே நகருக்கு சென்றடைந்தனர். விமானத்தில் மூன்று வீரர்கள் பைலட்டுகளுடன் இருப்பது போன்ற இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

-எம்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்