வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (25/11/2016)

கடைசி தொடர்பு:14:01 (25/11/2016)

இ.மு... இ.பி... பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பாட்ஷாவுக்கு பிறந்த நாள்! #HBDImranKhan

இம்ரான் கான்

Either lead from front or push from back. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி சொன்ன வார்த்தைகள் இவை. இந்த இரண்டுமாக இருந்தவர்கள் கிரிக்கெட் வரலாற்றில் சொற்பம். இந்திய கிரிக்கெட்டில் அதற்கு அச்சாரம் செளரவ் கங்குலி எனில், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இம்ரான் கான். 

இம்ரான் கான் என்ற பெயரை  ‛ 'The lion of Pakistan' என கிரிக்கெட் நிபுணர்கள் முன்மொழிந்தால், மறுமொழி பேசாது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும்  அதை, ஆம் என  வழிமொழியும். தங்கள் நாட்டில் கிரிக்கெட்டை மீட்க வந்த மீட்பராக பார்க்கின்றனர் பாகிஸ்தான் ரசிகர்கள். காரணம்...

1987 உலக கோப்பை முடிந்ததும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இம்ரான். அல்லோலப்பட்டது பாகிஸ்தான் கிரிக்கெட். இதைப் பார்த்து அடுத்த ஆண்டே, ‛இம்ரான்  நீ அணிக்குத் திரும்ப வேண்டும்’ என, பாகிஸ்தான் ஜெனரல் ஜியா உல் ஹக் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று அணிக்குத் திரும்பிய இம்ரான், 1992ல் பாகிஸ்தானுக்கு உலக கோப்பை வாங்கித் தந்து, கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்னார். இது ஒன்று போதாதா இம்ரான் கானின்  பெருமை பேச.

இம்ரான் கான்

'பந்துவீசும் போது இம்ரான் கான் ஜம்ப் பார்த்திருக்கிறீர்களா... காற்றில் நிற்பார்' என சிலாகிக்கின்றனர் அந்தகாலத்து கிரிக்கெட் ரசிகர்கள். ஃபாஸ்ட் பெளலர், வேர்ல்ட் கிளாஸ் ஆல் ரவுண்டர், சிறந்த கேப்டன் என ஒற்றை ஆளாக பாகிஸ்தான் கிரிக்கெட்டை தூக்கி நிறுத்தியவர் என்றாலும்,  அவர் விளையாட்டை விட வசீகரம்தான் டாமினேட் பண்ணியது என்பது சீனியர் ரசிகர்களின் கருத்து. இளம் வீரர்களின் திறமையை வெகு விரைவில் கண்டறிந்து அவர்களை வளர்த்து விட்டது அவரது தனி ஸ்டைல். 

"ஒரு விஷயத்தில் இம்ரான்கான் கிரேட். எம்ஜியாரைப் போலவே அவரைப் பற்றியும் பல மித்துகள் அப்போது உலவியது. கல்லூரிகளுக்கு இடையிலேயான போட்டியை காணச்சென்ற இம்ரான், அக்ரமின் பந்து வீச்சைக் கண்டு உடனே தேசிய அணிக்கு அவரைத் தேர்வு செய்தார் என்பார்கள். ஒரு உள்நாட்டுப் போட்டியில் மியாண்டாட்டே திணறும்படி ஒருவர் பந்து வீசியதைக் கண்டு அவரைத் தேர்வு செய்தார். அவர்தான் வக்கார் யூனிஸ் என்பார்கள். வக்கார் யூனிஸின் பந்து வீச்சை அநாயசமாக சமாளித்து ஆடியதற்காகவே இன்ஜமாம் உல் ஹக்கை தேர்வு செய்தார் என்பார்கள். அவருடைய தேர்வுகள் எதுவுமே பொய்த்துப் போனதில்லை’’ என, ட்விட்டரில் பதிவு செய்திருந்தார் அவரின் ரசிகரான முரளிக் கண்ணன். 

1992 உலக கோப்பை இரண்டு முத்துக்களை கிரிக்கெட் உலகுக்கு அடையாளப்படுத்தியது. ஒன்று சச்சின் டெண்டுல்கர். அடுத்து இன்ஜமாம் உல் ஹக். சச்சினுக்கு கொம்பு சீவி விட்டவர் அசார் எனில், இன்ஜமாமுக்கு இம்ரான். இந்த விஷயத்தில் அசார், இம்ரான் இருவரிடமும் ஒரு ஒற்றுமை இருந்தது. இவன் விஸ்வரூபம் எடுப்பான் என அசாருக்கு புரிந்திருந்தது. அதனால்தான், கடைசி வரை அசார், சச்சினை சீண்டவே இல்லை. கடைசி ஓவரை வீச சச்சினை அழைத்ததே அதற்கு சான்று. போலவே, இம்ரான் கான். 

இம்ரான் கான்

இருபது வயதைத் தாண்டாத வாசிம் அக்ரமின் வேகத்துக்கு முன், நம்மால் நிற்க முடியாது என 35 வயது இம்ரான் கானுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.  அதனால்தான் அந்த இளம் புயலை வீச விட்டு வேடிக்கை பார்த்தார் இம்ரான்.  அக்ரமை வளர்த்து விட்டார். அதற்கு இன்றளவும் இம்ரானுக்கு நன்றி சொல்கிறார் அக்ரம். யாரை எப்போது எப்படி எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது இம்ரானுக்கு அத்துப்படி. "இம்ரான் கான் பேசினால், எப்போதுமே டிரஸ்ஸிங் ரூமில் பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும்'’ என்றார் ரமீஸ் ராஜா. 

பாகிஸ்தான் ரசிகர்கள் இன்றளவும் இம்ரான் கானை கொண்டாடக் காரணம் அவரிடம் இருந்த 'ஆர்ட் ஆஃப் மேனேஜ்மென்ட்’. வியூகங்கள் வகுப்பதில் மன்னன். அணி இக்கட்டான சூழலில் இருக்கிறது எனில், தளபதிகளை இறக்காமல் தானே களமிறங்குவார். பலத்தை வெளிப்படுத்துவதை விட பலவீனத்தை மறைப்பது முக்கியம். அந்த விஷயத்தில் இம்ரான் கில்லி. கடைசி காலத்தில் பெளலிங் வேகம் குறைந்து விட்டதை உணர்ந்து பேட்டிங்கில் கவனம் செலுத்தினார். 

இங்கிலாந்துக்கு எதிரான 1992 உலக கோப்பை ஃபைனலில் அமீர் சோகைல் 4, ரமீஸ் ராஜா 8 ஆகிய ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் பத்து ரன்களைத் தாண்டாது அவுட்டாக, ஒன் டவுன் இறங்கிய இம்ரான் 72 ரன்கள் அடித்து நங்கூரம் பாய்ச்சினார். தலைவனாக முன்னின்று அணியை வழி நடத்தியதற்கும், பந்துவீச்சில் வேகம் குறைந்து விட்டதை உணர்ந்து பேட்டிங்கில் கவனம் திருப்பியதற்கும் நல் உதாரணம் அது. எல்லாவற்றையும் விட பாகிஸ்தான் ரசிகர்கள் இம்ரானை கொண்டாடக் காரணம். அவர் இல்லையெனில் பாகிஸ்தானுக்கு உலக கோப்பை கிடைத்திருக்காது. 

சரி இப்ப எதுக்கு இம்ரான் கான் புராணம்? காரணம் இருக்கிறது. இன்று அவர் பிறந்தநாள்.

- தா.ரமேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்