வெளியிடப்பட்ட நேரம்: 22:44 (26/11/2016)

கடைசி தொடர்பு:22:42 (26/11/2016)

சென்னையின் அரையிறுதி வாய்ப்பை தகர்த்த அந்த கடைசி நிமிட கோல்!

சென்னை

சென்னை அணியின் நட்சத்திர வீரர் டுடு ஹாட்ரிக் கோல் அடித்து ஒருபுறம் அசத்த, கடைசி நிமிடத்தில் நார்த்ஈஸ்ட் வீரர் செளவிக் கோல் அடித்ததால் ஆட்டம் 3-3 என டிரா ஆனது. கடைசி நிமிடம் வரை தங்கள் கையில் இருந்த வெற்றியை, ஆட்டம் முடியும் நேரத்தில் அவர்கள் கையில் கொடுத்து கெடுத்துக் கொண்டனர். இதனால் சென்னை அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் டிஃபண்டிங் சாம்பியன் சென்னையின் எஃப்.சி. மற்றும் வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. சென்னை அணியின் சக உரிமையாளரான தோனி, மனைவி, குழந்தையுடன் மைதானத்துக்கு வந்திருந்தார்.  

பதினைந்து நிமிடத்திற்குள் சென்னைக்கு கிடைத்த ஃப்ரீ கிக்கை ரிசே எடுத்தார். அட்டகாசமாக அடித்த அந்த ஷாட்டை நார்த்ஈஸ்ட் கோல் கீப்பர் சுப்ரதா பறந்து தடுத்து, சென்னையின் கோல் வாய்ப்புக்கு தடையாக இருந்தார். முதல் அரை மணி நேரத்தில் ஃப்ரீ கிக் ஷாட் தவிர்த்து இரு அணிகளும் சொல்லும்படி சான்ஸ் கிரியேட் செய்யவில்லை. ஒரு வழியாக 34வது நிமிடத்தில் சென்னை கோல் கணக்கைத் தெடங்கியது.

ரைட் விங்கில் இருந்து வாடூ கொடுத்த இஞ்ச் பெர்ஃபெர்க்ட் கிராஸை தலையால் முட்டி கோல் அடித்தார் டுடு. நார்த்ஈஸ்ட் கோல் கீப்பர் மற்றும் டிஃபண்டர்களால் அதை ஒன்றுமே செய்ய முடியவில்லை. சென்னை 1-0 என முன்னிலை பெற்றது. உடனே, சென்னை அணியின் சக உரிமையாளர் அபிஷேக் பச்சன் ஆர்ப்பரித்தார். தோனி தன் மடியில் இருந்த மகளின் பாதத்தை தட்டி, தனக்கே உரிய பாணியில் எளிமையாக கொண்டாடினார்.

ஆனால் இந்த மகிழ்ச்சி ஐந்து நிமிடத்திற்கு மேல் நீடிக்கவில்லை. 38வது நிமிடத்தில் பெனால்டி பாக்ஸுக்குள் பந்துடன் புகுந்த வேலஸ், கோல் கம்பத்தின் இடது மூலையை நோக்கி ஒரு ஷாட் அடித்தார். சென்னை கோல் கீப்பர் கரண்ஜித் டைவ் அடித்துப் பார்த்தார். ஆனால், அதை தடுக்க முடியவில்லை. ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்து சூடு பிடித்தது.

முதல் பாதி முடியும் நேரத்தில் இன்னொரு கோலை அடித்தது சென்னை. இந்த முறை ரைட் விங்கில் இருந்து கோப்ரா கொடுத்த பாஸை 6 யார்டு பாக்ஸில் இருந்து , நார்த்ஈஸ்ட் டிஃபண்டர் ஒருவரை ஏமாற்றி ஒரே டச்சில் கோல் அடித்தார் டுடு. இடைவேளையின்போது சென்னை 2-1 என முன்னிலை பெற்றது. தவிர, இரண்டு சான்ஸ் கிரியேட் செய்தது, பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, கார்னர் கிக் என எல்லாவிதத்திலும் சென்னையின் கையே ஓங்கியிருந்தது.

சென்னை

சென்னை பயிற்சியாளர் மார்கோ மடராசி ஒவ்வொரு போட்டியிலும் மெயின் லெவனை மாற்றிக் கொண்டே இருப்பார். இந்தமுறை டுடுவை பிளேயிங் லெவனில் இருக்கியது பலரை புருவம் உயர்த்த வைத்தது. ஏனெனில் இந்த சீசனில் அவர் பெரிதாக சாதிக்கவில்லை. அதனால் பெரும்பாலும் சப்ஸ்டிட்யூட் வீரராகவே இறங்குவார். மடராசிக்கு எதோ பொறி தட்டி டுடுவை இறக்கி விட்டுள்ளார். அவரும் முதல் பாதியில் இரண்டு கோல்களை அடித்து, தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

ஏற்கனவே முன்னிலை பெற்றிருப்பதால், அதே டெம்ப்போவை மெயின்டன் செய்தால் போதும் என்ற மனநிலையில் களமிறங்கியது சென்னை. ஆனால், நார்த்ஈஸ்ட் அணி வேறொரு பிளான் வைத்திருந்தது. 52வது நிமிடத்தில் சென்னை செய்த டிஃபன்ஸிவ் எரர், நார்த்ஈஸ்ட்டுக்கு சாதகமாக அமைந்தது. இந்த முறையும் அந்த கோலை வேலஸ் அடித்தார். ஆட்டம் 2-2 என சமநிலை அடைந்து, விறுவிறுப்பானது.

தசைப்பிடிப்பு காரணமாக நார்த்ஈஸ்ட் கோல் கீப்பர் சுப்ரதா வெளியேற, அவருக்குப் பதிலாக ரெஹ்னேஸ் களம் புகுந்தார். கடைசி பத்து நிமிடத்தில் கோல் அடிக்க இரு அணிகளும் போராடின. 81 வது நிமிடத்தில் ரைட் விங்கில் இருந்து மெண்டி பக்கவாக ஒரு பாஸ் செட் செய்தார். 6 யார்டு பாக்ஸுக்குள் இருந்த டுடு அதை வாங்க முயன்றபோது, நார்த்ஈஸ்ட் டிஃபண்டர் தடுக்க முயன்றார். அதற்குள் அவர்கள் கோல் கீப்பர் ரெஹ்னேஸும் வந்து மோதினார். எப்படியோ பந்து வலைக்குள் பாய்ந்தது. 3-2 என சென்னை மீண்டும் முன்னிலை பெற்றது.

மீண்டும் ஒருமுறை சென்னை பயிற்சியாளர் மடராசியின் மாஸ்டர் மூவ் வொர்க் அவுட் ஆனது. டிஃபண்டர் மெண்டியை ரைட் விங்கில் விளையாட பணித்தார். அதற்கு சரியான பலன் கிடைத்தது. ஹாட்ரிக் கோல் அடித்த டுடுடுவை மடராசி வெளியே எடுத்தார். அப்போது சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.

ஆட்டம் முடிய ஒரு நிமிடமே இருந்தபோது கார்னர் கிக்கை தலையால் முட்டி கோல் அடித்தார் நார்த்ஈஸ்ட் வீரர் செளவிக். இது முழுக்க முழுக்க சென்னை பின்கள வீரர்கள் செய்த தவறுக்கு கிடைத்த தண்டனை. இதனால் ஆட்டம் 3-3 என சமநிலை அடைந்தது.

தற்போது புள்ளிகள் பட்டியலில் சென்னை 15 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட, அரையிறுதிக்கு முன்னேற முடியாது. கடைசி நிமிடத்தில் சென்னை டிஃபண்டர்கள் அஜாக்கிரதையாக இருந்ததால், செமி ஃபைனல் கனவு தகர்ந்தது.

- தா.ரமேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்