வெளியிடப்பட்ட நேரம்: 22:18 (10/12/2016)

கடைசி தொடர்பு:22:18 (10/12/2016)

ஐ.எஸ்.எல் அரையிறுதி: ஃபைனலை நெருங்கியது கொல்கத்தா

கொல்கத்தா

மும்பைக்கு எதிரான ஐ.எஸ்.எல். முதல் கட்ட அரையிறுதியில் கொல்கத்தா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஐ.எஸ்.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, கேரளா ஆகிய நான்கு அணிகள் மட்டுமே, முதல் நான்கு இடங்களைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதி ஹோம், அவே என இரண்டு கட்டங்களாக நடைபெறும். இரண்டிலும் சேர்த்து அதிக கோல்கள் அடிக்கும் அணி ஃபைனலுக்கு முன்னேறும். கொல்கத்தாவில் இன்று நடந்த முதல் அரையிறுதியில் அட்லெடிகோ டி கொல்கத்தா மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே கோல் அடித்தது கொல்கத்தா. போர்ஜா கொடுத்த கிராஸை டிடிகா தலையால் முட்ட, அது மும்பை கோல் கீப்பர் அர்மிந்தரை ஏமாற்றி வலைக்குள் புகுந்தது. இதை கொல்கத்தா ரசிர்கள் எதிர்பார்க்கவே இல்லை. ஐந்து நிமிடத்திற்குள் கோல் அடித்த உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.

ஆனால், 11வது நிமிடத்தில் மும்பையின் டீகோ ஃபோர்லன் கொடுத்த லாங் பாஸை மும்பை வீரர் ஒருவர் தலையால் முட்டினார். அது ரீபவுண்ட் ஆனது. அதை லீயோ கோஸ்டா அலட்டாமல் ஒரே டச்சில் கோல் அடித்தார். ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்தது. 19வது நிமிடத்தில் மும்பை அடுத்த கோலை அடித்தது. மும்பைக்கு கிடைத்த ஃப்ரீ கிக்கை டீகோ ஃபோர்லன் எடுத்தார். அளவெடுத்து கொடுத்த கிராஸை தலையால் முட்டி கோல் அடித்தார் கெர்சன்.

ஆட்டத்தின் 38 வது நிமிடத்தில் பெனால்டி பாக்ஸில் இருந்து இயான் ஹியூம் அடித்த ஷாட், கோல் வலைக்குள் சீறிப்பாய்ந்தது. ஆட்டம் 2-2 என மீண்டும் சமநிலை அடைந்தது. 40 நிமிடத்திற்குள் நான்கு கோல்கள் அடிக்கப்பட்டது, இரு அணிகளின் டிஃபன்ஸும் வலுவாக இல்லை என்பதைக் காட்டியது. முதல் பாதி முடிய ஒரு நிமிடமே இருந்தபோது பெனால்டி பாக்ஸில் வைத்து கொல்கத்தா வீரரை மும்பை வீரர்கள் கீழே தள்ளி விட்டனர். இதனால் மும்பைக்கு ஸ்பாட் கிக் வழங்கப்பட்டது. இந்த பெனால்டி கிக்கை இயான் ஹியூம் நேர்த்தியாக கோல் அடிக்க, முதல் பாதியில் கொல்கத்தா 3-2 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் கொல்கத்தாவுக்கு மேலும் இரண்டு சான்ஸ்கள் கிடைத்தன. ஆனால், மும்பை கோல் கீப்பர் அம்ரிந்தர் உஷாராக இருந்ததால், கோல் வாங்கவில்லை. அதேநேரத்தில் 74வது நிமிடத்தில் மும்பை வீரர் டீகோ ஃபோர்லன் பெளல் செய்ததால் அவர் புக் செய்யப்பட்டார். ஏற்கனவே அவர் புக் செய்யப்பட்டிருந்ததால், ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். மும்பை பத்து வீரர்களுடன் விளையாடியது.

78 வது நிமிடத்தில் கொல்கத்தாவின் சமீக் அடித்தது கோல் ஆனது. ஆனால், அதை ரெஃப்ரி ஆஃப் சைட் என அறிவித்தார். முதல் பாதியில் இரு அணிகளும் சேர்த்து ஐந்து கோல்கள் அடித்திருந்தன. ஆனால், பிற்பாதியில் 80 நிமிடம் வரை யாரும் கோல் அடிக்க முடியவில்லை. இத்தனைக்கும் மும்பை பத்து வீரர்களுடன் விளையாடியது.

இஞ்சுரி டைமில் கொல்கத்தா வீரர் இயான் ஹியூம் ஹாட்ரிக் கோல் அடிக்க சான்ஸ் வந்தது. அது ஜஸ்ட் மிஸ் ஆனது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் கொல்கத்தா 3-2 என வெற்றி பெற்றது.

இரண்டாவது கட்ட அரையிறுதி மும்பையில் நடக்கும். இது மும்பைக்கு முக்கியமான போட்டி.

- தா.ரமேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்