‘பிளாஸ்டிக் ஜெர்சி’ அகமதிக்கு கிடைத்த அபூர்வ வாய்ப்பு... வாவ் மெஸ்சி!

பிளாஸ்டிக் ஜெர்சி

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 6 வயது சிறுவன் மொர்டஷா அகமதி. கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோ மெஸ்சியின் தீவிர ரசிகன். அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி 10ம் எண் ஜெர்சி அணிந்து விளையாடுவது வழக்கம். சிறுவன் அகமதி, லயனல் மெஸ்சி அணிவது போன்ற ஜெர்சி ஒன்றை வாங்கித் தருமாறு தந்தையிடம் அடம் பிடித்து கேட்டுக்கொண்டிருந்தான். அகமதியின் தந்தைக்கோ, லியோ மெஸ்சி அணிவது போன்ற ஜெர்சியை வாங்கிக் கொடுக்க முடியாத நிலை. இதையடுத்து பிளாஸ்டிக் பை ஒன்றை எடுத்து அதில் அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜெர்சி போன்று மெல்லிய நீலம் மற்றும் வெள்ளைக் கோடுகளை உருவாக்கி 10ம் எண் பொறித்து 'மெஸ்சி' என எழுதி அகமதியிடம் கொடுத்துவிட்டார்.

இதையடுத்து, அந்த பிளாஸ்டிக் ஜெர்சியை அணிந்து அகமதி விளையாடத் தொடங்கினான். கடந்த 11 மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. அகமதி மெஸ்சியின் பிளாஸ்டிக் ஜெர்சி அணிந்து விளையாடுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. இந்த தகவல் பார்சிலோனா ஸ்டார் மெஸ்சிக்கு தெரிய வந்தது. இதையடுத்து மெஸ்சியின் நண்பர்கள் சிலர் காபூல் வந்து அகமதியை சந்தித்தனர். மேலும் அவனுக்கு கால்பந்து, பூட் மற்றும் பார்சிலோனாவின் மெஸ்ஸி ஜெர்சியையும் வழங்கினார்.  ஆப்கானிஸ்தான் தேசிய அணியுடன் விளையாடும் வாய்ப்பும் அகமதிக்கு கிடைத்தது. பிற்காலத்தில் மெஸ்ஸி போலவே ஒரு கால்பந்து வீரனாக வேண்டுமென்பது அகமதியின் கனவும் கூட. காபூலில் மெஸ்ஸியின் நண்பர்கள் அகமதியை சந்தித்த பிறகு அல்ஜஸிரா தொலைக்காட்சி சிறுவனிடம் பேட்டி கண்டது.

அப்போது, ''மெஸ்ஸியையும் கால்பந்தையும் நேசிக்கிறேன். என்றாவது ஒருநாள் மெஸ்ஸியை சந்திப்பேன்'' என அகமதி கூறியிருந்தான். தற்போது அகமதியின் கனவும் உண்மையாகியுள்ளது. 

 

 

ஆம்... தோகா நகரில் நடந்த நட்புரீதியிலான கால்பந்து போட்டியின் போது சிறுவன் அகமதியை பார்சிலோனா சூப்பர் ஸ்டார் மெஸ்சி சந்தித்தார். வருகிற 2022ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு பிரமாண்ட கால்பந்து மைதானங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பிரபலப்படுத்தும் நோக்கில்  நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி பங்கேற்றது. அல் அலி அணியுடனான அந்த போட்டியை காண பார்சிலோனா அணியின் முன்னாள் கேப்டன் ஜேவியும் அரங்கத்திற்கு வந்திருந்தார். இந்த போட்டித் தொடங்குவதற்கு முன்னதாக மெஸ்சியை சிறுவன் அகமதி சந்தித்தான். 

பின்னர், மெஸ்சியின் கையை பிடித்துக் கொண்டு  மைதானத்திற்குள் அழைத்து வந்தான். பார்சிலோனா அணி குழு போட்டோ எடுக்கும் போதும் மெஸ்சியுடன் அகமதி இடம் பெற்றிருந்தான். தொடர்ந்து மைதானத்தின் நடுவில் பந்தை வைக்கும் வாய்ப்பும் அகமதிக்கு வழங்கப்பட்டது. தனது ஹீரோவை சந்தித்து விட்ட மகிழ்ச்சியில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த அகமதியை போட்டித் தொடங்குவதற்கு முன் நடுவர்கள் மைதானத்திற்கு வெளியே அழைத்து சென்றனர். சிறுவனின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸிக்கு கால்பந்து ரசிகர்கள் கரகோஷமிட்டு நன்றி தெரிவித்தனர்.  

2022ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் ஆர்கனைசிங் கமிட்டி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. கால்பந்தை ஏன் beautiful game என்று சொல்கிறார்கள் என இப்போது புரிகிறதா என நெட்டிசன்ஸ் புகழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

-எம்.குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!