வெளியிடப்பட்ட நேரம்: 19:03 (15/12/2016)

கடைசி தொடர்பு:19:03 (15/12/2016)

'இங்கிலாந்தில் விளையாட வேண்டும்..!' விராட் கோஹ்லியின் ஆசை

விராட் கோஹ்லி

2018 ல் இந்திய அணி இங்கிலாந்து செல்கிறது. அந்த சுற்றுப் பயணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக, இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோஹ்லி.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் சென்னையில் நாளை தொடங்குகிறது. இந்தியா ஏற்கனவே 3-0 என டெஸ்ட் தொடரை வென்று விட்டது. இங்கிலாந்து ஆறுதல் வெற்றிக்கு முயற்சிக்கிறது எனில், இந்தியா நீண்ட கால செயல் திட்டத்தை நோக்கி பயணிக்க உள்ளது. அது என்ன திட்டம் என்பது உள்பட, பிரஸ் மீட்டில் விராட் கோஹ்லி பல கேள்விகளுக்கு நிதானமாக பதிலளித்தார்.

விராட் கோஹ்லி தலைமை ஏற்ற பின் நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்ரிக்கா, இலங்கை, இங்கிலாந்து என அடுத்தடுத்து ஐந்து டெஸ்ட் தொடர்களில் இந்தியா முத்திரை பதித்துள்ளது. சென்னை டெஸ்டிலும் இந்தியா வெல்லும் பட்சத்தில் கோஹ்லியின் கிராப் இன்னும் எகிறும்.  இருந்தாலும் தற்போது தன் கையில் இருக்கும் அணி, வெளிநாட்டு மண்ணில் குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் களமிறங்கும்போதுதான் உண்மையான சவால் காத்திருக்கிறது என்பதையும் கோஹ்லி நன்றாகவே புரிந்து வைத்துள்ளார். 

அதனால்தான் ‛தோற்கடிக்க முடியாத அணியாக உள்ளதா இந்தியா?’ என கேள்வி கேட்டதும் ‛நான் அப்படி நினைக்கவில்லை. நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால், தோற்கடிக்க முடியாத அணி என்று கருதவில்லை. நாங்கள் எதிரியை மதிக்கிறோம். ஒவ்வொரு போட்டியிலும் எங்களுக்கு நெருக்கடி இருப்பதையும், எதிரணி எங்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதையும் உணர முடிகிறது. அதை ஏற்று, அதை சரி செய்ய முயற்சித்து வருகிறோம். உலகம் முழுவதும் இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். இந்த ஒரு குறிப்பிட்ட காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு நாங்கள் செயல்படவில்லை. சமீப காலத்தில் புதிதாக ஒரு அணி உருவாகி, அடுத்தடுத்து நாங்கள் வெற்றிகள் குவிப்பது சந்தோஷமே. ஆனால், இதை அதீத தன்னம்பிக்கையாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.  தற்போதைய வெற்றி ஒரு பிராசஸ் மட்டுமே. அடுத்து ஏழெட்டு ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் நாங்கள் கொடி கட்டிப் பறக்க வேண்டும் எனில், இந்த வெற்றிகளைத் தக்க வைத்து,  தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்’’ என்றார் கோஹ்லி.

மேலும் ‛‛டெஸ்ட்டில் மட்டுமல்ல, மூன்று ஃபார்மட்டிலும் இந்த முத்திரையைப் பதிக்க வேண்டும்.  ஆனால், அதற்கு உறுதி, திறமை, ஃபிட்னஸ், கடின உழைப்பு போன்றவை முக்கிய காரணியாக அமையும். இவைதான் ஒரு வலுவான அணி அமைய காரணமாக இருக்கும்’’ என்றார்.

கோஹ்லி இந்த ஆண்டு டெஸ்டில் மூன்று இரட்டைச் சதங்கள் அடித்து விட்டார். இந்த தொடரில் 640 ரன்கள் விளாசியுள்ளார். டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஐ.பி.எல்.களத்திலும் பல சாதனைகளை படைத்துள்ளார். ஆனால், தன் பேட்டிங் திறமை குறித்து அடக்கியே வாசித்தார். ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் என கோஹ்லி கருதுகிறார். இந்த நால்வரும், போட்டி போட்டு ஒருவரையொருவர் மிஞ்சுவதை கோஹ்லி ரசிக்கிறார்.

‛‛ஆரோக்கியமான போட்டி கிரிக்கெட்டுக்கு நல்லது. ரசிகர்கள் இதைப் பற்றி விவாதிக்கின்றனர். உண்மையில் இந்த விவாதம் நல்லது. இந்த விவாதத்தில் என்னையும் சேர்த்திருப்பது பெருமை. பலரும் என்னிடம் ‛நீங்கள் நான்கு பேரும் கிரிக்கெட்டை ரசித்துப் பார்க்க வைத்துள்ளீர்கள்’ என தெரிவித்தனர். குறிப்பிட்ட அளவிலான வீரர்கள் சிறப்பாக செயல்படுவதால், ஆரோக்கியமான போட்டி நிலவுவதைக் கடந்து, கிரிக்கெட் சர்வதேச அளவில் பிரபலமாகும் என்பதும் நல்ல விஷயம்’’ என இடைவெளி விட்டார். 

‛‛இருந்தாலும், தனிப்பட்ட முறையில் இந்த போட்டிக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை. அப்படி முக்கியத்துவம் தந்தால் கவனம் சிதறி விடும். எல்லாம் சரியாகச் சென்றால் ரேங்கிங் உயரும், மக்கள் நம்மைப் பற்றியே பேச ஆரம்பிப்பர், இதையெல்லாம் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கும். இந்த பாராட்டுக்கு அடிமையாகி விட்டால், எல்லாமே மாறி விடும். நாம் கொஞ்சம் சொதப்பினாலும், எல்லாம் தலைகீழாக மாறும். அது ஆட்டத்தையும் பாதித்து விடும். அதனால், இந்த மூன்று வீரர்களையும், என்னை விட ஒரு படி மேலேதான் நினைக்கிறேன். குறிப்பாக டெஸ்டில். ஏனெனில் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள்  சிறப்பாக ஆடி வருகின்றனர்’’ என கோஹ்லி சொன்னதை ஆழ்ந்து கவனித்தனர் நிருபர்கள்.

‛‛என் எல்லையைப் புரிந்துள்ளேன். டெஸ்ட் ஃபார்மட்டில் அவர்களை மிஞ்ச நினைத்ததில்லை. அஃப் கோர்ஸ்... லிமிட்டட் ஓவர் ஃபார்மட்டில் நன்றாக ரன் குவிக்கிறேன். டெஸ்டிலும் முடிந்தவரை அதிக ரன் குவிப்பது எப்படி என்பதை புரிந்து கொண்டேன். என்னால் முடிந்தவரை அணியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். ஜோ ரூட், ஸ்மித், வில்லியம்சனை மிஞ்சுவது அல்ல. நான் அவர்களை மதிக்கிறேன். அதே நேரத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். நாங்கள் எல்லோரும் எங்கள் ஆட்டத்தைப் புரிந்துள்ளோம்’’ என்றார். 

கோஹ்லி ஆஸ்திரேலியாவில், தென் ஆப்ரிக்காவில், இலங்கையில், கரீபிய மண்ணில் ரன் குவித்து விட்டார். இங்கிலாந்து மட்டும்தான் பாக்கி. 2014ம்  ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றப் பயணம் சென்றிருந்தபோது கோஹ்லி 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்தியாவும் 3-1 என தொடரை இழந்தது. இந்தியா அடுத்து, 2018 ல் இங்கிலாந்து செல்கிறது. அது எல்லா வகையிலும் கோஹ்லிக்கு சவால் அளிக்கும் சுற்றுப்பயணம்.

இதை மனதில் வைத்து இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த நிருபர் ஒருவர், ‛2018 சுற்றுப் பயணத்துக்கு முன்னதாக, நீங்கள் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறீர்களா’ என கேள்வி எழுப்பினார். கேள்வியை முடிப்பதற்குள் கோஹ்லி ‛‛வாய்ப்பு கிடைத்தால், நான் அதை விரும்புவேன். சுற்றுப் பயணத்துக்கு ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதத்துக்கு முன்னதாக, அங்குள்ள சூழல், பிட்ச் இவற்றைப் புரிந்து விளையாட வேண்டும் என்பது என் விருப்பம். இதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது குறித்துதான்  சிந்தித்துக் கொண்டிருந்தேன்.  அந்த நேரத்தில் சூழல் எப்படி இருக்கும் என்பதையும் ஆராய வேண்டும். இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால் கவன்டி கிரிக்கெட்டில் விளையாடுவேன்’’ என முடித்தார். 

- தா.ரமேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்