கருண் நாயர் முச்சதம்- சாதனை படைத்த இந்தியா 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5-வது டெஸ்ட் போட்யில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் விளாசினார். மேலும் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். அலி 146 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. ராகுலின் சதத்தாலும், கருண் நாயரின் இரட்டை சதத்தாலும் இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது. பின்னர் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் முச்சதம் விளாசினார்.

303 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார் கருண். இதைத் தொடர்ந்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. இந்திய 759 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. தற்போது இந்திய அணி 282 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 7.2 ஓவர்கள் இருப்பதால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாட உள்ளது.

இந்த போட்டியில் தனது முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 727 ரன்களை கடந்த போது, டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களுக்கான தனது முந்தைய சாதனையை முறியடித்தது. முன்னதாக, 2009-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் 726 ரன்கள் எடுத்ததே இந்தியா டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 1997-ஆம் ஆண்டில் இலங்கை, இந்தியாவுக்கு எதிராக 952 ரன்கள் எடுத்ததே டெஸ்ட் போட்டியில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது.

இந்திய வீரர்களில் சேவாக் மட்டுமே இதுவரை இரண்டு முச்சதம் விளாசியுள்ளார். 319, 309 என ரன்கள் குவித்துள்ள சேவாக்கின் சாதனையை கருண் நாயர் முறியடிப்பார் என்று இருந்த நிலையில் 303 ரன்கள் குவித்திருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது. 

இது குறி்த்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சேவாக், "12 ஆண்டு 8 மாதங்கள் தனியாகவே இருந்தேன். தற்போது என்னோடு இணைந்த கருண் நாயருக்கு வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!