வெளியிடப்பட்ட நேரம்: 19:14 (19/12/2016)

கடைசி தொடர்பு:09:51 (22/12/2016)

முச்சத நாயகன் கருண் நாயர் பற்றிய இந்த 10 தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா? #KarunNair

தான்  விளையாடிய மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே, குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மூன்றாவது இன்னிங்ஸிலேயே முச்சதம் அடித்து முத்திரை பதித்திருக்கிறார் கருண் நாயர்.  கிரிக்கெட் உலகையே ஒரே நாளில் திருப்பி பார்க்க வைத்திருக்கும் இந்த நாயகன் யார்? இவர் பின்னணி என்ன? 

1. மலையாள வம்சாவளியைச் சேர்ந்த கருண் நாயர் பிறந்தது ராஜஸ்தானில் தான், ஆனால் வளர்ந்தது, கிரிக்கெட் ஆடியது எல்லாமே கர்நாடகாவில். பதினைந்து  வயதிலேயே கர்நாடக அணிக்குள் நுழைந்த பெருமை இவருக்கு உண்டு. 

2. 2012ஆம் ஆண்டு விஜய் ஹஸாரே கோப்பையில் ஆடியது தான் கருண் நாயர்  முதன் முதலில் விளையாடிய முதல் தர போட்டி. அதன் பின்னர்  ரஞ்சி போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்.

கருண்

3. ரஞ்சி போட்டியில் முதல் சீசனிலேயே ஆறு போட்டிகளில் விளையாடி 494 ரன்களை குவித்தார். கருண் நாயரின் ஸ்டைலான டிரைவ்களை பார்த்த ராகுல்  டிராவிட் அவரை 2014 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு  ஏலத்தில் எடுக்க பரிந்துரை செய்தார்.  75 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதன் பின்னர் கருண் நாயருக்கு  கேரியர் பிரகாசமானது.

4. 2014 ஐ.பி.எல்  தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 11 போட்டிகளில் ஆடி 330 ரன்கள் குவித்தார். அதில் மூன்று அரைசதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத் தக்கது. அந்த தொடரில் பல போட்டிகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு முக்கிய துருப்புச் சீட்டாய் அமைந்தார். சஞ்சு சாம்சன், கருண் நாயர் இருவரும்  சிறந்த பேட்ஸ்மேன்கள், பெரிய உயரத்துக்குச் செல்வார்கள் என அப்போதே கணித்துச் சொன்னார்  ராகுல் டிராவிட் 

5.  2015 ஆம் ஆண்டு கர்நாட அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாடினார். இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. தமிழகமும் கர்நாடகமும் மோதின. தமிழ்நாடு முதல் இன்னிங்ஸில் 134 ரன்களை எடுத்தது. பெங்களூரு அணி 31/4 என தத்தளித்தது, பின்னர் 84/5 என்றானது. கருண் நாயரும், லோகேஷ் ராகுலும் இணைந்தார்கள். அந்த போட்டியில் அவர்கள் ஆடிய விதம் மிரட்டல் இன்னிங்ஸ். ராகுல் 188 ரன்களை குவித்தார். கருண் நாயரோ 872 நிமிடங்கள் களத்தில் நின்று 560 பந்துகளைச் சந்தித்து 46 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உதவியுடன் 328 ரன்கள் குவித்தார். ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றிலேயே இறுதிப் போட்டியில் முச்சதம் எடுத்த ஒரே வீரர் கருண் நாயர் மட்டும் தான். அந்த மேட்சில் பெங்களூரு 762 ரன்களை குவித்தது. தமிழ்நாடு 411 ரன்னுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது. இன்னிங்ஸ் மற்றும் 217  ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று அசத்தியது. 1988ஆம் ஆண்டுக்கு பிறகு கோப்பையை வெல்லவே முடியாத சோகத்துடன் வெளியேறியது தமிழ்நாடு. 

6.  சூதாட்ட புகார் தொடர்பாக  ராஜஸ்தான் அணி  இடைநீக்கம் செய்யப்பட்டதால், கருண் நாயர் மீண்டும் ஏலத்துக்கு வந்தார். இந்த  ஆண்டு சுமார் நான்கு கோடிக்கு அவரை  டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனில் மூன்று  அரை  சதங்களோடு டெல்லி அணிக்காக அதிக ரன்கள்  அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம்  பிடித்தார் கருண்.

7. கடந்த ஜூன் மாதம்  ஜிம்பாப்வே நாட்டில் நடந்த தொடரில் முதன் முறையாக  இந்திய அணிக்காக விளையாடினார் கருண் நாயர். கருண் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதை டிராவிட் நேரடியாக அவருக்குச் சொல்லியிருந்தார். அந்த நொடியே இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது எனச் சொல்கிறார் கருண். 

8. கடந்த நவம்பர் மாதம் மொகாலி டெஸ்டில் டெஸ்ட்  அணிக்குள் வந்தார் கருண். லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு ஏற்பட்ட காயங்கள் கருண் நாயருக்கு வாய்ப்பைத் தந்தது. முதல் இன்னிங்ஸிலே விராட் கோஹ்லி செய்த ஒரு சிறு தவறால் 4 ரன்னில்  ரன் அவுட் ஆனார். மும்பை டெஸ்டில் 13 ரன்னில் அவுட் ஆனார்.  இதையடுத்து சென்னை டெஸ்டில் 211/3  என்ற நிலையில் இந்தியா இருந்தபோது களமிறங்கினார். ராகுலுடன் சேர்ந்து அற்புதமாக விளையாடினார். அதன் பின்னர் விஜய், அஷ்வின், ஜடேஜா, உமேஷ் ஆகியோருடனும் பார்ட்னர்ஷிப் போட்டு சிறப்பாக ஆடினார்.  அவர் விளையாடிய மூன்றாவது இன்னிங்ஸில் மெய்டன் 50. மெய்டன் 100, மெய்டன் 150, மெய்டன் 200, மெய்டன் 250, மெய்டன் 300 என அத்தனை சாதனைகளையும் படைத்தார். 

9. வீரேந்திர ஷேவாக்குக்கு பிறகு முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் கருண் மட்டும் தான். முச்சதம் அடித்து நாட் அவுட்டாக இருந்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையும் கருண் வசம் தான்  இருக்கிறது. ஒருவேளை கோஹ்லி வாய்ப்புத் தந்திருந்தால் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே சென்னை மண்ணில் ஷேவாக் நிகழ்த்திய  319  ரன் சாதனையையும் கருண் நாயர் கடந்திருக்க கூடும். 

10 .உலகிலேயே முதல்  சதத்தையே, முச்சதமாக்கிய வீரர்கள் மூன்றே பேர் தான். கேரி சோபர்ஸ், சிம்ப்சன் ஆகியோருக்கு பிறகு அந்த பெருமையைப் பெற்றிருக்கிறார் கருண் நாயர். 

வாழ்த்துகள் கருண் நாயர் 

- பு.விவேக் ஆனந்த் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்