வெளியிடப்பட்ட நேரம்: 22:01 (19/12/2016)

கடைசி தொடர்பு:21:54 (19/12/2016)

கருண் நாயர் முச்சதம் அடித்த அந்த நொடியில் யாரைத் தேடினார் தெரியுமா?

கருண் நாயர்


கேமராமேன்கள்  அந்த கொண்டாட்ட தருணத்தின் சரியான ஷாட்டுக்காக காத்திருக்கின்றனர். மீடியா பாக்ஸில் எல்லா நிருபர்களும், கிரிக்கெட் இணையதளங்களில் இதற்கு முந்தைய 300 ரன் குறித்த ரிக்கார்டுகளை அலசிக் கொண்டிருக்கின்றனர். ஒரு நிருபர் ட்விட்டரில் ‛சேவாக்குக்கு அடுத்ததாக முச்சதம் அடித்த இந்திய வீரர்’ என டைப் செய்து  Enter  பட்டனை  தட்ட காத்திருக்கிறார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் மெய்மறந்து, இரு கம்பிகளுக்குள் முகம் புதைத்து கிரவுண்டை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனர். பிரஸ் பாக்ஸில், கேண்டீனில் பணியாற்றும் ஊழியர்கள் பணி மறந்து டிவியை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

பி.சி.சி.ஐ. மீடியா மேனேஜர்கள், மேட்ச் முடிந்ததும் பிரஸ் மீட்டுக்கு கருண் நாயரை அழைத்து வருவது குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.  ஸ்கோர் போர்டு ஊழியர்கள் கருண் நாயர் பெயருக்கு நேராக 3,0,0 எண்களை எடுத்து மாட்ட தயாராக நிற்கின்றனர். ஹெச் ஸ்டேண்டில் இருந்து இந்திய தேசியக் கொடி  ஒன்று பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. அதீத எதிர்பார்ப்பில் தன்னவனின் தோளில் தலை சாய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஒரு யுவதி.  கிட்டத்தட்ட எல்லா கேலரியில் இருந்த ரசிகர்களும் எழுந்து நிற்கின்றனர். அதில் இங்கிலாந்து ரசிகர்களும் அடக்கம். 

உமேஷ் யாதவ் சிங்கிள் தட்டி விட்டு வந்ததும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கும்  மைதானத்தில் ஒரு மயான அமைதி. கருண் நாயர் 299 ரன்னில் இருக்கிறார், அவரால் முச்சதம் அடிக்க முடியுமா என வர்ணனையாளர்கள் அலறுகின்றனர்.  இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், அனைத்து ஃபீல்டர்களையும் உள் வட்டத்தில் நிறுத்துகிறார். நேற்று கே.எல்.ராகுல் 199ல் அவுட்டானது போல ஆகிடுமோ என ஒருவித பதற்றத்துடன் இருக்கின்றனர் ரசிகர்கள்.  

ரஷீத் வீசிய அந்த 191வது ஓவரின் மூன்றாவது பந்தை ஸ்வீப் செய்கிறார் கருண் நாயர். ஸ்வீப் செய்வது நாயருக்கு அசால்ட். ஆனால், இந்நேரத்தில் அது ரிஸ்க். எல்பிடபுள்யு என அப்பீல் செய்கின்றனர் இங்கிலாந்து ரசிகர்கள். அம்பயர் பிடி கொடுக்கவில்லை. நாயர் தப்பிப் பிழைத்தார். அடுத்த பந்து. ஆஃப் சைடில் வருகிறது. அதை கட் செய்கிறார். கவர் திசையில் இருந்து பாய்ண்ட் திசை நோக்கி பாய்கிறார் குக். அவரைக் கடந்து பந்து பவுண்டரிக்கு செல்கிறது. நான் ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு வரும் முன், பந்து எல்லைக் கோட்டைக் கடந்து விட்டதா என்பதை உற்றுப் பார்க்கிறார் நாயர். ஆம். கடந்து விட்டது. சடசடசடவென  கரவொலி. எஸ்... கருண் நாயர் முச்சதம் அடித்து விட்டார். சேவாக்குக்குப் பின் ஒரு வழியாக இந்தியர் ஒருவர் 300 அடித்து விட்டார். அதுவும் நம் சென்னையில் அடித்து விட்டார். முதல் சதத்தை முச்சதமாக மாற்றி விட்டார்.  நாயர் ஹெல்மட்டைக் கழற்றி பேட்டை உயர்த்தி மைதானத்தின் எல்லா ஸ்டேண்டுகளிலும் ஒருமுறை காட்டுகிறார். குறிப்பாக பட்டாபிராமன் கேட் எண்டில், லெவல் - 1ல் இருந்த எஃப் ஸ்டேண்டை நோக்கி ஓரிரு நிமிடம் அழுத்தி காண்பிக்கிறார். ஏனெனில் அங்கு அவர் பெற்றோர் இருக்கின்றனர். 

கைதட்டல் சத்தம் இன்னும் ஓயவில்லை. எதிர்முனையில் இருந்த உமேஷ் யாதவ் வந்து கட்டியணைத்து வாழ்த்துகிறார்.  குக் வந்து  வாழ்த்துகிறார். ஜோ ரூட் வந்து வாழ்த்துகிறார். ஒவ்வொரு இங்கிலாந்து வீரரும் வந்து வாழ்த்துகின்றனர். இந்தியாவின் முதல் இன்னிங்சை டிக்ளேர் என அறிவிக்கிறார் கோஹ்லி. களத்தில் இருந்து இரு அணி வீரர்களும் டிரஸ்ஸிங் ரூம் நோக்கி நகர்கின்றனர். ஓய்வறையில் இருந்த விராட் கோஹ்லி முதல் ஆளாக வந்து பாராட்டுகிறார். அதன்பின் வரிசையாக ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் நாயரை உச்சிமுகர்ந்து பாராட்டுகின்றனர். அடுத்த சில நிமிடங்களில் இந்திய அணி ஃபீல்டிங் செய்ய தயாராகி விட்டது. களைப்பாக இருந்ததால் கருண் நாயர் களமிறங்கவில்லை. இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விட்டது.  எல்லாமே சகஜ நிலைக்கு வந்து விட்டது. ஆனால், அந்த பத்து நிமிட இடைவெளியில் இருந்த ‛த்ரில்’ இன்று சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்திருந்தவர்களின் நினைவில்  காலம் முழுக்க  நிலைத்து நிற்கும். 

அதுதான் ‘டெஸ்ட்’ கிரிக்கெட்!

- தா.ரமேஷ் 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்