அஷ்வின் VS கோலி... தொடர்நாயகன் சர்ச்சை! உங்கள் ஓட்டு யாருக்கு?

அஷ்வின்

பவுலிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த  தொடரில் அசத்தல் ஆட்டம் ஆடியவர் அஷ்வின். ஆனால் அவருக்கு தொடர்நாயகன் விருது இல்லையா? தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் அஷ்வினுக்கு  சொந்த மண்ணில் தொடர் நாயகன் விருது கிடைக்கும் என எதிர்பார்த்து ஆர்வத்துடன் வந்தோம். ஆனால் அது மிஸ்ஸிங் என உச் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் அஷ்வின் ரசிகர்கள். வாட்ஸ்அப்பில் இந்த விவாதங்கள் தீயாய் பரவுகின்றன . 

என்ன நடந்தது? 

இங்கிலாந்து - இந்தியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட தொடர்  கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கியது. முதல் போட்டி ராஜ்காட்டில் நடந்தது, அதன் பின் விசாகப்பட்டினம், மொகாலி, மும்பை ஆகிய இடங்களில் அடுத்தடுத்த போட்டிகள் நடந்தன. கடைசி டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது. 

ராஜ்காட் டெஸ்ட்டை பொறுத்தவரை முதல் இன்னிங்ஸில் 537 ரன்களை குவித்தது இங்கிலாந்து. அதில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார் அஷ்வின். பேட்டிங்கில் 70 எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டும், 32  ரன்களும் எடுத்தார் அஷ்வின். 

விசாகப்பட்டினம் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தியது உட்பட எட்டு விக்கெட்டுகளோடு  ஒரு அரை  சதமும் விளாசினார் அஷ்வின். மொகாலியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஒரு அரைசதம் எடுத்து, பவுலிங்கிலும் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மும்பை டெஸ்டில்  டக் அவுட் ஆகியிருந்தாலும், இரண்டு இன்னிங்ஸிலும் தலா ஆறு விக்கெட் வீழ்த்தி மொத்தமாக 12 விக்கெட்டுகள் வீழ்த்திய கவுரவத்துடன் மேன் ஆப் தி மேட்ச்  விருது பெறுவதற்காக காத்திருந்தார். ஆனால் அந்த போட்டியில் விராட் கோலி இரட்டை சதம் அடித்தார் என்பதை காரணம் காட்டி கோலிக்கு  ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

சென்னை டெஸ்டில் ஒரே ஒரு விக்கெட் தான் வீழ்த்தினார் என்றாலும் கூட, நான்காவது நாளில் கருண் நாயருடன் சேர்ந்து அவர் ஆடிய  இன்னிங்ஸ் அபாரம். 149 பந்துகளில் 67 ரன்கள்  குவித்தார். ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஐந்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் அரை சதம் எடுத்திருக்கிறார் அஷ்வின். ஒவ்வொரு முறை டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் சரியும்போதும் முட்டுக்கொடுத்து அணியை தூக்கிவிட்டதில் அஷ்வினுக்கு பெரும் பங்கு இருப்பதை மறுக்க முடியாது. பேட்டிங்கில் மட்டுமல்ல, பவுலிங்கிலும் இந்த தொடரில் அஷ்வின்  தான் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்.  ஆனால் இவ்வளவு சாதனைகள் படைத்த அஷ்வினுக்கு ஐந்து டெஸ்ட் போட்டியில் ஒரு  முறை கூட ஆட்டநாயகன் விருதும் கிடைக்கவில்லை, தொடர் நாயகன் விருதும் கிடைக்கவில்லை. 

virat kohli

இந்த ஆண்டு விராட் கோலி  தான் பேட்டிங்கில் பாகுபலியாக நின்று அணியை காப்பாற்றினார்.  ஆனால் பவுலிங்கில் அஷ்வின் செய்த  சாதனைகள் உச்சக்கட்டம். இதுவரை  எந்தவொரு இந்திய பவுலரும் ஒரே ஆண்டில் , இந்தாண்டு அஷ்வின் படைத்தது போன்ற சாதனைகளை படைத்ததில்லை. விராட் கோலிக்கு இந்த இங்கிலாந்து தொடரை எடுத்துக் கொண்டால் கூட, சதமடித்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் அவருக்குத் தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. தொடர் நாயகன் விருதும் அவருக்குத் தான் கொடுத்திருக்கிறார்கள். தமிழக கிரிக்கெட் சங்கத்துடன் பிசிசிஐக்கு இருக்கும் மனக்கசப்பு தான்  சென்னையில் அஷ்வினுக்கு விருது கிடைப்பதை தடுத்திருக்கிறது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். 

சரி விராட் கோலி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? 

அஷ்வின் சாதனைகள் படைத்தார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அஷ்வினால் பேட்டிங்குக்கு ஓரளவு சாதகமாக இருந்த  கான்பூரிலும் சரி, சென்னையிலும் சரி பெரிய அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தமுடியவில்லை. ஆனால் மெதுவான ஆடுகளங்கள், சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களில் கூட விராட் கோலி மிகச்சிறப்பாக ஆடினார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் விராட் கோலியின் கேரியரில்யே அவர் விளையாடிய சிறந்த டெஸ்ட் தொடர் இது தான். 8 இன்னிங்ஸ்களில் 655 ரன்கள் வெளுத்துக் கட்டியிருக்கிறார், சராசரி 109.17.  இதற்கு மேல் என்ன வேண்டும்?  அஷ்வின் இந்தியாவுக்காக விளையாட ஆரம்பித்த காலத்தில் இருந்து, இந்திய மண்ணில் நடந்த தொடர்களில் அதிக முறை தொடர் நாயகன் விருதை ஜெயித்தவர் அஷ்வின் தான்.  இந்தியா ஜெயித்த ஏழு தொடர்களில் ஐந்து தொடர்களில்  அவர் தான் தொடர் நாயகன். 

Kohli

"விராட் கோலி கேப்டன்சி பொறுப்பேற்ற பிறகு தான் அஷ்வின் வேறு லெவல் ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார். கோலி தலைமையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தியா வென்ற இலங்கை தொடர், தென்னாப்பிரிக்கா தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர், நியூசிலாந்து தொடர், இங்கிலாந்து தொடர் போன்றவற்றில்  இந்த தொடரை தவிர்த்து மற்ற அனைத்திலும் அஷ்வின் தான் தொடர் நாயகன் விருதை ஜெயித்திருக்கிறார்.  அஷ்வின் இல்லாமல், கோலி இல்லாமல் இந்த வெற்றிகள் இந்திய அணிக்கு சாத்தியப்பட்டிருக்காது. யாரோ அவர்களுக்கு சிண்டு முடியும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள், இது தேவையற்றது. இது அணிக்கும் நல்லதல்ல, இதை இருவரும் விரும்பவும்  மாட்டார்கள் " என்கிறார் பிசிசிஐச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவர். 

இங்கிலாந்து தொடரின் தொடர்நாயகன் யார்..? உங்கள் ஓட்டைப் பதிவு செய்யுங்களேன்..!

 

 

- பு.விவேக் ஆனந்த் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!