வெளியிடப்பட்ட நேரம்: 08:46 (21/12/2016)

கடைசி தொடர்பு:10:42 (21/12/2016)

இந்திய ஜுனியர் ஹாக்கி அணி கோப்பையைக் கைப்பற்ற உதவிய 'ஆஸ்ட்ரோ டர்ஃப்' #HockeyAstroturf

மீபத்தில் இந்தியாவுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையேயான ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டி உத்தரப்பிரதேசத்தில் நடந்துமுடிந்திருக்கிறது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றியையும் தன்வசப்படுத்தியது. இந்த வெற்றிக்கு காரணம், ஆஸ்ட்ரோ டர்ஃப் என்றழைக்கப்படும் செயற்கைப் புல்வெளியில் இந்திய அணியினர் மேற்கொண்ட பயிற்சி தான். அதென்ன செயற்கைப்  புல்வெளி என்கிறீர்களா? இதுதான் தற்போதைய சர்வதேச ஹாக்கி மைதானத்தின் ஆடுகளமாகப் பயன்படுத்தப்படுகிறது. கிரிக்கெட், கால்பந்து போலவே பேஸ்பால், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகள் 1960 வரை புல்தரையில் தான் விளையாடப்பட்டு வந்தன. அதுவரை வெட்டவெளி மைதானத்தில் நடைபெற்றுவந்த இப்போட்டிகள், ஆயிரம்பேர் இருக்கையில் அமர்ந்து கண்டுகளிக்கக்கூடிய உள்விளையாட்டு அரங்குகளில் நடைபெறத்தொடங்கின. உள்விளையாட்டு அரங்குகளில் மேற்கூரை மூடப்பட்டதால், சூரியவெளிச்சம் தடைபட்டது. இதன் காரணமாக புல்தரைக்குத் தேவையான சூரியவெளிச்சம் கிடைக்காமல் போனது. புல்தரைக்கு இணையாக விளையாட்டு வீரர்கள், மைதானத்தில் ஓடிவிளையாட ஏற்ற ஆடுகளம் வேறெதுவும் அந்தகாலத்தில் இல்லை.  

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள உலகின் முதல் மேற்கூரை வைத்த மிகப்பெரிய உள்விளையாட்டு அரங்கத்தின் பெயர் தான் ஆஸ்ட்ரோடோம். இதில் தான் முதன்முறையாக ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து விளையாட்டை கண்டுகளிக்க வசதி செய்யப்பட்டன. அங்கு 1966-ம் ஆண்டு நடைபெற்ற மேஜர் லீக் பேஸ்பால் போட்டியில்தான்  சிந்தடிக் ரப்பரால் ஆன செயற்கைப் புல்வெளி முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. அதனாலேயே செயற்கைப் புல்வெளிகள் 'ஆஸ்ட்ரோ டர்ஃப்' எனப் பெயர்பெற்றது. அதன் தொடர்ச்சியாக பிட்ஸ்பெர்க்கில் உள்ள  ‘த்ரீ ரிவர்’ அரங்கம், பிலடெல்பியாவில் உள்ள ‘வெடிரான்’ அரங்கம், சின்சினாட்டியில் உள்ள ‘ரிவர்பிரென்ட்’ அரங்கம் உள்ளிட்ட அரங்கங்களில் ஆஸ்ட்ரோ டர்ஃப் பயன்படுத்தப்பட்டது.

ஆஸ்ட்ரோ டர்ஃப்பின் பயன்பாடு மிகவும் எளிமையானது. இது, புல்தரைக்கு இணையாக இலகுவாகவும் அதே சமயத்தில் உறுதியாகவும் இருக்கும். எளிதில் மற்றொரு இடத்துக்குக் கொண்டுசெல்லக்கூடியதாக இருந்ததால், இவை விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்லாமால் அமெரிக்க வீடுகளில் மிதியடிகளாக, லான் விரிப்புகளாக மக்களின் அன்றாட வாழ்க்கை உபயோகப்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டது.


இந்தியர்களின் தேசிய விளையாட்டான ஹாக்கி, முதலில் மண் மற்றும் புல் மைதானங்களில் தான் விளையாடப்பட்டு வந்தது. ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் ஆஸ்ட்ரோ டர்ஃப்பின் பயன்பாடு அதிகமாக இருந்தது. 1928-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில்  ஹாக்கி சேர்க்கப்பட்டது. இதில் இந்தியா உட்பட பல நாடுகள் கலந்துகொண்டன. 1928-1964 வரை நடந்த ஆண்கள் பங்கேற்கும் எட்டு ஹாக்கி போட்டிகளில் ஏழு போட்டிகளில் இந்தியா தங்கம் வென்றது. பிறகு கொஞ்சகாலம் பாகிஸ்தான் ஹாக்கி போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது. எழுபதுகளில் ஆஸ்ட்ரோ டர்ஃப் மற்ற ஆசிய நாடுகளிலும் பிரபலமடையத் தொடங்கியது. சர்வதேச ஹாக்கி போட்டிகளில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள சர்வதேச ஹாக்கி குழு முடிவெடுத்தது. அதன் விளைவாக, ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகள் உட்பட அனைத்து சர்வதேச போட்டிகளிலும் ஆஸ்ட்ரோ டர்ஃப் கட்டாயம் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அர்ஜன்டீனா, ஜிம்பாபே உள்ளிட்ட நாடுகள் சுதாரித்துக்கொண்டு, தங்கள் நாட்டு ஹாக்கி மைதானங்கள்மேல் ஆஸ்ட்ரோ டர்ஃப் பொறுத்தி அதில் விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளித்தது. 


ஹாக்கி மைதானம் முழுக்க பரவிக்கிடக்கும் இந்த பச்சைவண்ண செயற்கைப் புல்விரிப்பில், ஹாக்கி பந்து எந்தவித சிரமமும் இல்லாமல் உருண்டோட உதவியது. மற்றநாட்டு வீரர்கள் ஆஸ்ட்ரோ டர்ஃப்பில் பயிற்சிப்பெற்று, இலக்கை நோக்கி பந்தை நகர்த்திச்செல்லக் கற்றுத்தேர்ந்த நிலையில், இந்திய ஒலிம்பிக் வீரர்கள் புல்தரையிலேயே பயிற்சி பெற்றுவந்தனர். இதனால் அவர்களால் ஒலிம்பிக் போட்டிகளில் ஆஸ்ட்ரோ டர்ஃப் தரையில் மற்றநாட்டு வீரர்களுக்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் போனது. இதனால் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தொடர் தோல்விகளைச் சந்திக்கநேர்ந்தது.

ஆஸ்ட்ரோ டர்ஃப் தயாரிக்க சிந்தடிக் ரப்பர் பாலிமர் பலகட்ட பதப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதற்கான தயாரிப்பு செலவு அதிகம். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம், இதற்கான நிதியைக் கேட்டுப்பெற அனைத்து மாநில விளையாட்டுத் துறையினரும் வரிசைகட்டி நிற்கின்றனர். ஒரு ஏக்கர் பரப்பளவுகொண்ட ஹாக்கி மைதானத்துக்கு ஆஸ்ட்ரோ டர்ஃப் விரிப்பு தயாரித்து, அதனை மைதானம் முழுவதும் பொருத்த, ஐந்து கோடிவரை செலவாகும். தமிழகத்தில் சென்னை ஒய்எம்சிஏ ஹாக்கி மைதானத்தில் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ளத் தயாராகும் ஹாக்கி வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக ஆஸ்ட்ரோ டர்ஃப் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


டிசம்பர் 18, 2016, வரலாற்றுச் சிறப்புமிக்க தினம். 15 வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய ஜூனியர் ஹாக்கி அணி கோப்பையை வென்றுள்ளது. ஜூனியர் ஹாக்கி அணியில் கலந்துகொண்ட 18 ஹாக்கி வீரர்களில் பத்துபேர் பஞ்சாப்பைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். 2005-2012 வரை பஞ்சாப் மாநில விளையாட்டுத்துறை  இயக்குநராகப்  பதவிவகித்த முன்னாள் ஹாக்கி கேப்டன் பர்கத் சிங்கின் முயற்சியால் இந்திய அணியின் பயிற்சிக்கு ஆஸ்ட்ரோ டர்ஃப் கிடைத்துள்ளது. இவர் பஞ்சாப்பின் கிராமப்புரங்களுக்கு ஆஸ்ட்ரோ டர்ஃப்பைக் கொண்டுசேர்க்க உதவினார். இதற்கு மத்திய அரசின் துணை மட்டுமல்லாமல், தனியார் தொண்டுநிறுவனங்களும் உதவின.  புதிதாக ஆஸ்ட்ரோ டர்ஃப் தயாரிக்க அதிக செலவாகும் என்பதால் ஏற்கெனவே பயன்படுத்திய பழைய ஆஸ்ட்ரோ டர்ஃப்களை ஐந்தாறு சிறுபகுதிகளாகப் பிரித்தெடுத்து 20 கிராமப்புற மைதானங்களுக்கு வழங்கினார். இந்த மைதானங்களில் ஆஸ்ட்ரோ டர்ஃப்பைப் பயன்படுத்த வசதியாக கான்கிரீட் தரை போடப்பட்டது. பின்னர் அதன்மேல் டர்ஃப் பொருத்தப்பட்டது. இதன் மூலமாக பஞ்சாப்பின் சிறிய கிராமங்களைப் பூர்வீகமாகக்கொண்ட ஹாக்கி வீரர்கள், ஆஸ்ட்ரோ டர்ஃப் தரையில் ஹாக்கி பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் எத்தனையோ திறமைவாய்ந்த ஹாக்கி வீரர்கள் உள்ளனர். அவர்களது திறமையை சர்வதேசஅரங்கில் பறைசாற்றவும் அவர்களுக்கு உரித்தான பயிற்சிகள் அளிக்கவும், பெருநகரங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் ஆஸ்ட்ரோ டர்ஃப் செயற்கைப் புல்வெளி மைதானங்கள் ஏற்படுத்த மத்தியஅரசு முன்வரவேண்டியது அவசியம்.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்