குறை பிரசவம்... படகு விபத்து...கலவரமூட்டும் கருண் நாயரின் ஃப்ளாஷ்பேக்! #TripleTonKarun

கருண்

தான் விளையாடிய மூன்றாவது இன்னிங்ஸிலேயே முச்சதம் அடித்து முத்திரை பதித்திருக்கிறார் கருண் நாயர்.  உலகிலேயே முதல் சதத்தையே, முச்சதமாக்கிய வீரர்கள் மூன்றே மூன்று பேர்தான். கேரி சோபர்ஸ், சிம்ப்சன் உள்ளிட்ட அந்த வரிசையில் இடம் பிடித்து வரலாறு படைத்திருக்கிறார் கருண். இந்திய வீரர்களில் வீரேந்திர சேவாக்கிற்கு பிறகு முச்சதம் அடித்ததுடன் நாட் அவுட் ஆகாதவர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார். ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த கருண் நாயர் இன்று உயிருடன் நம்முடன் உலவிக் கொண்டிருப்பதே  அதிர்ஷ்டத்தால்தான்.  

கடந்த ஜூலை மாதத்தில் கேரளத்தில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நடந்தது.  ஆழப்புலா மாவட்டத்தில் உள்ள செங்கானூர்தான் கருண் நாயரின் சொந்த ஊர். வல்ல சத்யா எனப்படும் படகு போட்டி அங்கே ரொம்ப பாப்புலர். செங்கானுரில் உள்ள பார்த்தசாரதி கோயில் விழாவை முன்னிட்டு, இந்த படகுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். கர்நாடகத்தில் செட்டில் ஆகி விட்டாலும் ஒவ்வொரு ஆண்டும் சொந்த ஊரில் நடைபெறும் கோயில் விழாவில் பங்கேற்பதும் படகு போட்டியை காண்பதும் கருண் நாயரின் வழக்கம். 

கடந்த ஜூலையில் செங்கானூருக்கு கருண் நாயர் சென்றார். ஜூலை 17-ம் தேதி  பாம்பு படகு ஒன்றில் கருண் நாயர் உள்ளிட்ட 100 பேர் பம்பா நதியில் சென்று கொண்டிருந்தனர். காலை 11.45 மணியளவில் கருண் நாயர் சென்ற பாம்பு படகு நதியில் திடீரென்று கவிழ்ந்தது. ஆரனமுல்லா கோயில் அருகே நடந்த இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் தண்ணீருக்குள் விழுந்து உயிருக்கு போராடினர். 

உடனடியாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டனர். நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி உயிர் தப்பினர். கருண் நாயருக்கோ நீச்சல் தெரியாது. தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.  கைகள் தட தடவென அடிந்து ஓய்ந்தன. நீருக்குள் மூழ்கத் தொடங்கினார். அந்த சமயத்தில்தான் மீட்புப்படையை சேர்ந்த ஒருவர், கருண் நாயரின் தலையை பிடித்து இழுத்து தூக்கி படகில் போட்டார். அப்போது கருண் நாயரை மீட்டவருக்கு கருண் நாயரை யார் என்று தெரியாது. இந்த விபத்தில் தண்ணீரில் மூழ்கி இருவர் பலியானார்கள். படகு கவிழ்ந்த அடுத்த நிமிடமே மீட்புக்குழுவினர்  சம்பவ இடத்துக்கு விரைந்ததால், கருண் நாயர் உள்ளிட்ட 98 பேரை பத்திரமாக மீட்க முடிந்தது. 

அதிர்ஷ்டவசமாக கடந்த ஜூலை மாதத்தில் உயிர் பிழைத்த கருண் நாயர் சென்னையில் இங்கிலாந்து அணியின் உயிரை எடுத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். கேப்டன் குக் பதவியை ராஜினாமா செய்து விடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமே நடு நடுங்கிக் கொண்டிருக்கிறது. 

சென்னை சேப்பாக்கத்தில் கருண் நாயர் முச்சதம் சதம் அடிப்பதை அவரது பெற்றோர் நேரில் கண்டனர். தாயார் பிரேமா மகன் குறித்துக்  கூறுகையில், 'கருண் குறைப்பிரசவத்திலேயே பிறந்து விட்டான். அதனால், நான் மிகுந்த வருத்தத்தில் இருந்தேன். அப்போது மருத்துவர்கள் என்னிடம் இது போன்ற குழந்தைகள் தனித் திறமையுடன் வளர்வார்கள். அதனால் வருத்தப்பட ஒன்றுமில்லை. சந்தோஷமாக இருங்கள் என்று தைரியமூட்டினார்கள். அதனால்தான், நானும் என் கணவரும் எப்போதும் அவனை கண்காணித்துக் கொண்டேதான் இருப்போம். சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டினான். அவன் விருப்பப்படி விட்டு விட்டோம். எப்போது பார்த்தாலும் மட்டையும் கையுமாகத்தான் அலைவான். இப்போது அவனை பெற்றதற்கான பலனை அடைந்து  விட்டேன் '' என்கிறார். 

கருணின் தந்தை எம்.கே.டி. நாயர், ''எனது மகன் விளையாடுவதை பெரும்பாலும், மைதானத்துக்குச் சென்று நாங்கள் பார்ப்பதில்லை. விதிவிலக்காக இந்த போட்டியைப் பார்க்க வேண்டுமென்று எங்களுக்குள் தோன்றியது. அதனால்தான் பெங்களூருவில் இருந்து சென்னை வந்தோம். சதம் அடிப்பான் என்று எதிர்பார்த்தோம். ஆனால் முச்சதம் அடித்து எங்களை பெருமைப்பட வைத்து விட்டான்.  அவனது கிரிக்கெட் வாழ்க்கையில் இது நிச்சயமாக ஒரு மைல்கல். ராகுல் 199ல் அவுட் ஆனது போல கருண் 299ல் அவுட் ஆகி விடக் கூடாது என்ற பதற்றம் எனக்குள் இருந்தது ' என தெரிவித்தார். 

சென்னை சேப்பாக்கத்தில் போட்டி முடிந்ததும் படகு விபத்தில் உயிர் பிழைத்த அனுபவம் குறித்து கருண் நாயர் பகிர்ந்து கொண்டார். ''உண்மையிலேயே எனக்கு நீச்சல் தெரியாது. படகு கவிழ்ந்ததும் அவ்வளவு வேகத்தில் எங்கிருந்துதான் மீட்புக்குழுவினர் வந்தார்களோ என்று தெரியவில்லை.  தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த என்னை தலையைபிடித்து படகில் இழுந்துப் போட்டனர்.  இல்லையென்றால் என்னை உயிருடன் பார்த்திருக்க முடியாது. அந்த சம்பவம் எனக்கு மறுபிறப்பு''  என்றார் அவர்.

- எம்.குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!