பிசிசிஐ சரிவு தொடங்கியது எங்கே? ஓர் அலசல்... | The Falldown of BCCI, a detailed report

வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (02/01/2017)

கடைசி தொடர்பு:16:17 (02/01/2017)

பிசிசிஐ சரிவு தொடங்கியது எங்கே? ஓர் அலசல்...

பிசிசிஐ

புத்தாண்டில் முதல் சிக்ஸரை அடித்துள்ளது சுப்ரீம் கோர்ட். நீதிபதி லோதா கமிட்டியின் பரிந்துரைகளைப் பின்பற்றாததால், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே இருவரையும் பதவியில் இருந்து நீக்கியுள்ளது உச்ச நீதிமன்றம். பரிந்துரையைப் பின்பற்ற மறுக்கும் மற்ற மாநில கிரிக்கெட் சங்க  நிர்வாகிகளும் வீட்டுக்குச் செல்லலாம் என எச்சரித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த ஆண்டின் முதல் பிரேக்கிங் நியூஸ் இதுதான். சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி நடவடிக்கையால், கட்டுப்பாட்டை இழந்து நிற்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். சரிவு தொடங்கியது எங்கே? ஒரு ஃபிளாஷ்பேக்...

மே 2013, ஸ்பாட் ஃபிக்ஸிங் ஊழல்
2013 ஐ.பி.எல். தொடரின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த், அங்கித் சர்மா, அஜித் சண்டிலா ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது. வீரர்கள், புக்கிகள், தரகர்கள் மட்டுமல்லாது சி.எஸ்.கே. அணியின் குருநாத் மெய்யப்பன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பல பிரிவுகளில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

அக்டோபர் 2013, முக்தல் கமிட்டி நியமனம்
சூதாட்ட வழக்கு மற்றும் பி.சி.சி.ஐ. விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி முகுல் முக்தல் தலைமையிலான குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்.

நவம்பர் 2014, சி.எஸ்.கே. ராஜஸ்தான் ராயல்ஸ் மீது குற்றச்சாட்டு
ஐ.பி.எல். சி.ஓ.ஓ சுந்தர் ராமன், குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் சக உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் இருப்பதை உறுதி செய்தது முக்தல் கமிட்டி. இந்த விதிமீறல் குறித்து நன்கு தெரிந்து வைத்திருந்தும் அவர்கள் மீது, பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த என்.சீனிவாசன் நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார் என அறிக்கை தாக்கல் செய்தது முக்தல் கமிட்டி.

ஜனவரி 2015, லோதா கமிட்டி நியமனம்
ஐ.பி.எல். ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டவர்களுக்கான தண்டனை விவரங்களை  உறுதி செய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் ஒரு குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம். அதோடு பி.சி.சி.ஐ.யில்  சீர்திருத்தங்கள் செய்வது குறித்து பரிந்துரைக்கவும் அந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. 

ஜூலை 2015, சி.எஸ்.கே. ராஜஸ்தான் அணிகளுக்கு தடை
ஸ்பாட் ஃபிக்சில் தொடர்புடைய சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை  இரண்டு ஆண்டுகள், ஐ.பி.எல்.போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தது லோதா கமிட்டி. அந்த அணியின் உரிமையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. ஆனால், மற்ற அணிகளில் விளையாட அந்த இரு அணி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

ஜனவரி 2016, பி.சி.சி.ஐ.யில் முழு மாற்றத்துக்கு பரிந்துரை
ஒட்டுமொத்த பி.சி.சி.ஐ.,யின் அதிகாரத்தையும் மாற்றி அமைக்க பரிந்துரைத்தது லோதா கமிட்டி. ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு, மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு வயது வரம்பு, 70 வயதுக்கு மேற்பட்டவர் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் நீடிக்கத் தடை என நீண்டது அந்த புரிந்துரை. 

ஃபிப்ரவரி 2016, பி.சி.சி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் கெடு
ஜனவரி 31-ம் தேதிக்குள் லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என பி.சி.சி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால், பி.சி.சி.ஐ. அதைப் பின்பற்றவில்லை. மாறாக, சட்ட சிக்கலைச் சீர்க்க ஒரு குழு அமைத்தது. மீண்டும் மார்ச் 3-ம் தேதி வரை டெட்லைனை நீட்டித்தது பி.சி.சி.ஐ. இதற்கும்  பி.சி.சி.ஐ. மசியவில்லை.

மார்ச் 2016, அறிக்கைக்கு எதிராக பி.சி.சி.ஐ. விளக்கம்
பி.சி.சி.ஐ. சார்பில் 55 பக்க பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. லோதா கமிட்டியின் சில பரிந்துரைகளை மட்டுமே ஏற்க முடியும். பல பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக  பி.சி.சி.ஐ. வாதம் செய்தது.

ஏப்ரல் 2016, நிதி பரிவர்த்தனைக்கு எதிர்ப்பு
விதிமுறைகளை மீறி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பி.சி.சி.ஐ. நிதி ஒதுக்கீடு செய்யும் முறையை சுப்ரீம் கோர்ட் கடுமையாக விமர்சித்தது. அதோடு, ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு மட்டுமே என்ற கமிட்டியின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பி.சி.சி.ஐ.யின் கோரிக்கையை நிராகரித்தது.

மே 2016, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை
பி.சி.சி.ஐ.யின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை, ஸ்திரமான நிலைப்பாடு இல்லை என விளாசிய சுப்ரீம் கோர்ட், இந்த கட்டமைப்பை மாற்றாமல் எதுவும் சரியாகாது என கொந்தளித்தது.

செப்டம்பர் 2016, வழிக்கு வரவும், இல்லையெனில்...
‛லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி பி.சி.சி.ஐ. தலைவரை நீக்க தயங்க மாட்டோம்’ என கண்டித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், ‛‛தங்களுக்கென்று ஒரு சட்டம் இருப்பதாக பி.சி.சி.ஐ. கருதுகிறது. அவர்கள் தங்களை கணவான்கள் போல நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. வழிக்கு வரவும். இல்லையெனில் நாங்கள் வழிக்குக் கொண்டு வருவோம்’’ என எச்சரித்தார்.

அக்டோபர் 2016, பண பரிவர்த்தனைக்குத் தடை
அவசரக் கூட்டம் நடத்தி, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு 1,100 கோடி ஒதுக்குவதாக பி.சி.சி.ஐ. முடிவெடுத்தது. ஆனால், பண பரிவர்த்தனையை நிறுத்தச் சொல்லி வங்கிகளுக்கு லோதா கமிட்டி உத்தரவிட்டது. இதனால், இந்தியா - நியூஸிலாந்து டெஸ்ட் தொடருக்கு சிக்கல் ஏற்பட்டதாக பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாக்கூர் பேட்டியளித்தார். இதையடுத்து, அன்றாட பரிவர்த்தனைக்கு லோதா கமிட்டி அனுமதி அளித்தது.

அக்டோபர் 2016, தாக்கூருக்கு கோர்ட் உத்தரவு
லோதா கமிட்டி பரிந்துரை விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இருந்து கடிதம் கோரினார் அனுராக். இதற்கு விளக்கம் அளிக்குமாறு, அனுராக் தாக்கூருக்கு  கோர்ட் சம்மன் அனுப்பியது. 
இதற்கிடையே, சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், கமிட்டியின் சில பரிந்துரைகளை ஏற்பதாக பி.சி.சி.ஐ. முடிவெடுத்தது. இருப்பினும் வயது வரம்பு, ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு போன்ற விஷயங்களில் சீர்திருத்தம் செய்ய முடியாது என பிடிவாதமாக இருந்தது.

நவம்பர் 2016, தலைவரை நீக்க குழு பரிந்துரை
பிசிசிஐ சொன்ன பேச்சு கேட்காமல் அடம்பிடித்ததை அடுத்து, பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் அனைவரையும் உடனடியாக நீக்குமாறு லோதா கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து பி.சி.சி.ஐ. நகர்வுகளை கண்காணிக்க முன்னாள் உள்துறை செயலர் கோபால் கிருஷண பிள்ளையை நியமித்தது உச்ச நீதிமன்றம்

டிசம்பர் 2016, பி.சி.சி.ஐ. மீண்டும் அடம்
‛எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை’ என, லோதா கமிட்டியை சந்தித்த பின் சொன்னார் பிசிசிஐ செயலர் அஜய் ஷிர்கே. ஹைதராபாத், விதர்பா, திரிபுரா ஆகிய மாநிலங்கள் மட்டுமே கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்க சம்மதித்தது.

டிசம்பர் 2016, தாக்கூருக்கு மீண்டும் எச்சரிக்கை
இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. தலையிட வேண்டும் என அனுராக் கோரியதற்கு, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. அதோடு ‛நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால், சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும்’ என தாக்கூரை எச்சரித்து, அடுத்த விசாரணையை 2017, ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 

ஜனவரி 2, 2017,  தலைவர் அனுராக், செயலர் ஷிர்கே நீக்கம்
லோதா கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்க மறுத்ததால், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே இருவரையும் பொறுப்பில் இருந்து நீக்கியது உச்ச நீதிமன்றம். ‛‛இது கிரிக்கெட்டின் வெற்றி. நிர்வாகிகள் வருவார்கள், போவார்கள். தனிநபர்களை விட கிரிக்கெட்தான் முக்கியம்’ என நீதிமன்றம் தெரிவித்தது. அதோடு, லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தும் விவகாரத்தில், பின்னடைவு ஏற்படுத்த ஐ.சி.சி.யிடம் இருந்து கடிதம் பெற முயற்சித்ததற்காகவும், அந்த கடித விவகாரத்தை மறைத்ததற்காகவும், அனுராக் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாய்ந்தது. 

- தா.ரமேஷ் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்