வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (03/01/2017)

கடைசி தொடர்பு:20:30 (03/01/2017)

பிராட்மேன் சாதனையை சமன் செய்த ஆஸ்திரேலியாவின் சேவாக்! #Warner #CricketUpdates

டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் உணவு இடைவேளைக்கு முன்னாலேயே மின்னல் வேக சதம் எடுத்து பிராட்மேன் சாதனையை சமன் செய்தார் டேவிட் வார்னர். 

ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னிலும் நடந்தது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் தோற்றது. 2-0 என ஆஸ்திரேலியா தொடரை வென்ற நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் தொடங்கியது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்  ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்  செய்வதாக அறிவித்தார். இந்திய அணியின் சேவாக்கை போல முதல் ஓவரில் இருந்தே அடித்து ஆட தொடங்கினார் வார்னர். இதனால் ஆஸ்திரேலிய அணியின்  ரன் விகிதம் எகிறியது. முதல் மூன்று ஓவர்களிலேயே 25 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. நடப்பது டெஸ்ட் போட்டியா அல்லது ஒருநாள் போட்டியா என சந்தேகம் வரும் அளவுக்கு அபாரமான தொடக்கம் தந்தது வார்னர் -  ரென்ஷா இணை. இந்த இடது கை பேட்ஸ்மேன்களிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு பட்டனர் பாகிஸ்தான் பவுலர்கள். 42 பந்தில் அரை சதம் எடுத்த வார்னர் அதன் பின்னரும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். 21 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி நூறு ரன்களை கடந்தது. வேகம், ஸ்பின், ஸ்விங், பவுன்சர் என எந்தவிதமான பவுலிங்கும் பலனளிக்காததால் நொந்து போனார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல்ஹக். 

பிராட்மேன் சாதனையை சமன் செய்தார் டேவிட் வார்னர் . david warner

26.2 ஓவரில் ஆஸ்திரேலியா 122 ரன்னை எடுத்திருந்தபோது சதமடித்து அசத்தியிருந்தார் வார்னர். 78 பந்துகளில் இந்த சதத்தை எடுத்தார் வார்னர். இது அவரின் 18 வது டெஸ்ட் சதம் ஆகும். சிட்னியில் நடக்கும் போட்டிகளில் தொடர்ந்து வார்னர் சிறப்பாக ஆடி சதம் அடித்து வருவது கவனிக்கத்தக்கது. கடைசியாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஒருவர்  முதல் நாளில் உணவு  இடைவேளைக்கு முன்பே சதம் அடித்த பெருமை டான் பிராட்மேனுக்கு உண்டு. அந்தச் சாதனையை சமன் செய்திருக்கிறார் வார்னர். டெஸ்ட் போட்டிகளில் காலையில் களமிறங்கி உணவு இடைவேளைக்கு முன்னர் சதமடித்தவர்கள் வார்னருக்கு முன்பு பிராட்மேன் உட்பட  நான்கு பேர் மட்டும் தான்.

பிராட்மேன் உள்ளிட்ட நான்கு பேரும் இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தச் சாதனையை நிகழ்த்தியது கிடையாது. அந்த வகையில் வார்னர் மட்டும் தான் ஆஸ்திரலிய மண்ணில் முதல் நாளில் உணவு இடைவேளைக்கு முன்பாக சதம்  கண்ட ஒரே வீரர் ஆவார். பிராட்மேன் உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லோரும் இதற்கு முன்னதாக ஒரே ஒருமுறை மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். வார்னருக்கு வயது 30 தான் ஆகிறது, இன்னும் நான்கைந்து ஆண்டுகளாவது குறைந்தபட்சம் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் திறன்உள்ளதால், மீண்டும் இது போல அதிவேக சதம் எடுத்தால் உலக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கலாம்.

reninshaw scores maiden 100

உணவு இடைவேளைக்கு பிறகு வார்னர் அவுட்  ஆனார். 95 பந்துகளில் 17 பவுண்டரிகள் உதவியுடன் 113 ரன்கள் குவித்திருந்த போது வஹாப் ரியாஸ் பந்துவீச்சில் சர்ஃப்ராஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் வார்னர். அதன் பின்னர் உஸ்மான்  கவாஜா, ஸ்மித் ஆகியோரும் முறையே 13, 24 ரன்களில் அவுட் ஆயினர். மாட் ரென்ஷா நிலைத்து நின்று விளையாடி சதம் எடுத்தார். இது அவருக்கு முதல் சதம் ஆகும். முதல் நாள் முடிவில் 365/3  என்ற  வலுவான நிலையில் இருக்கிறது ஆஸ்திரேலியா. ரென்ஷா 167  ரன்களுடன் களத்தில் இருக்கிறார். மறுமுனையில்  பீட்டர் ஹாண்ட்காம்ப் 40  ரன்களுடன் அவுட் ஆகாமல் இருக்கிறார். ஆஸ்திரேலியா நாளைய தினம் மேலும் சுமார் 150 -200 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் இந்த டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான்  தோல்வியை நோக்கி பயணிக்க வேண்டியதிருக்கும்.

உணவு இடைவேளைக்கு முன்பு சதம் விளாசியவர்கள் :-

1. விக்டர் ட்ரம்பர் (ஆஸ்திரேலியா) இங்கிலாந்து எதிராக மான்செஸ்டரில் 1902 ஆம் ஆண்டு சதம் அடித்திருந்தார்.

2. சார்லஸ் மெக்கார்ட்னி (ஆஸ்திரேலியா) இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸ் டெஸ்டில் 1926 ஆம் ஆண்டு சதம் கண்டார்.

3. டான் பிராட்மேன் 1930 ஆம் ஆண்டு லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அதிவேக சதம் கண்டார்.

4. மஜித்கான் (பாகிஸ்தான்) கராச்சியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 1976 ஆம் ஆண்டு சதம்  எடுத்தார்.

5. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) 2017ல் சிட்னியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 78 பந்தில் சதம் அடித்திருக்கிறார்.

சாதனையை  தவற விட்ட ஷேவாக் :-

2006 ஆம் ஆண்டு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது ஒரு டெஸ்ட் போட்டியில், முதல் நாள்  முதல் இன்னிங்ஸில்  அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார் ஷேவாக். 33வது பந்தில் சிக்ஸர் வைத்து அரை சதம் எடுத்து மிரட்டியிருந்தார், மறுமுனையில் வாசிம் ஜாபர் அமைதியாக ஆடிக்கொண்டிருந்தார். லாரா ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியதால், 25வது ஓவரிலேயே உணவு இடைவேளைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. 24 ஓவர் முடிவில் இந்தியா 133 ரன்களை  எடுத்திருந்தது. ஷேவாக் 71 பந்தில் 93  ரன் எடுத்திருந்தார். 

சாதனையை  தவற விட்ட ஷேவாக்

வரலாற்றுச் சாதனை படைப்பாரா ஷேவாக் என  டென்ஷன்  நிலவியது.  25 வது ஓவரை  காலிமோர் பந்து வீசினார். முதல் பந்தில்  ஷேவாக் ரன் எதுவும் அடிக்கவில்லை, இரண்டாவது பந்தை கொஞ்சம் லென்த் குறைவாக வீசப்போகிறார் என்பதை காலிமோர் ஓடிவரும் போதே கணித்துவிட்டார் ஷேவாக். அந்த பந்தை அப்பர் கட் செய்து அட்டகாசமாக ஸ்லிப்பில் ஒரு பவுண்டரி அடித்தார் ஷேவாக். நான்கு பந்தில் மூன்று ரன் எடுத்தால் சாதனை என்ற நிலை. அந்த ஓவரில்,  மூன்றாவது பந்தில் ஒரு ரன் 

எடுத்தார் ஷேவாக். நான்காவது பந்தில் ஜாபர்  ரன் எதுவும் எடுக்கவில்லை, ஐந்தாவது பந்தில் ஜாபர் ஒரு  ரன் எடுத்தார். கடைசி பந்தை அட்டகாசமாக வீசினார் காலிமோர், அந்த பந்தில் ஒரு ரன் மட்டுமே ஷேவாக்கால் எடுக்க முடிந்தது மேலும் அதிர்ஷ்டவசமாக அந்த பந்தில் ரன் அவுட் ஆகும் வாய்ப்பில் இருந்தும் தப்பிப் பிழைத்தார் ஷேவாக். 99* ரன்களுடன் உணவு இடைவெளிக்குச் சென்றார் ஷேவாக்.

சாதனை வாய்ப்பு கழுவினாலும், அதைப் பற்றி கவலைப்படாமல்  உணவு இடைவேளைக்கு பிறகு சதம் அடித்தது மட்டுமின்றி அந்த இன்னிங்ஸில் 180 ரன்கள் குவித்து அசத்தினார் ஷேவாக். பிரையன் லாராவின் நுட்பமான முட்டுக்கட்டை சதத்தால் அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியில் இருந்து தப்பியது. ஷேவாக் தவறவிட்ட வாய்ப்பை பதினோரு ஆண்டுகள் கழித்து வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் வார்னர்.

வாழ்த்துகள் வார்னர்.

- பு.விவேக் ஆனந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்