புற்றுநோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுடன் யுவராஜ்சிங்!

கட்டாக்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அபாரமாக விளையாடி 150 ரன் குவித்து ஆட்டநாயகனான யுவராஜ் சிங், புவனேஸ்வரில் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளைச் சந்தித்து உரையாடி, அவர்களுடன் நேரத்தை செலவிட்டார்.

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் ஆட்டக்காரரான யுவராஜ் சிங், அண்மைக்காலமாக பெரிய அளவில் ரன் குவிக்காமல் இருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை கட்டாக் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கிரிக்கெட் ரசிகர்கள், யுவராஜ் சிங்கின் பழைய அதிரடி ஆட்டத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். முன்னாள் கேப்டன் தோனியும், யுவராஜ் சிங்கும் அடித்த சதத்தால், அந்தப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்று, ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டிக்காக, கொல்கட்டா புறப்பட்டுச் செல்வதற்கு முன், யுவராஜ் சிங், புவனேஸ்வரில் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளான ஏராளமான குழந்தைகளைச் சந்தித்துப் பேசினார். அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு வருகைதந்த அந்தக் குழந்தைகளுடன் சில மணி நேரம் கழித்தார். இதனால், அந்தக் குழந்தைகளும், அவர்களின் உறவினர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தைகளை யுவராஜ் சிங் மகிழ்ச்சிப் படுத்தியும், அவர்களுடன் விளையாடியும் மகிழ்ந்தார்.

இந்த நிகழ்ச்சியை முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர்களான தேபஷிஷ் மொகந்தி, சிவ் சுந்தர் தாஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகி பின்னர் சிகிச்சை பெற்று, அந்நோயில் இருந்து குணம் அடைந்தவர் யுவராஜ் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!