ஃபெடரர் vs நடால்... எப்போதும் சளைக்காத முரட்டுக் காளைகளின் இன்னொரு க்ளாஸிக்! #AllTimeClassic | Classic battle between Roger Federer Vs Rafael Nadal

வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (30/01/2017)

கடைசி தொடர்பு:18:04 (02/02/2017)

ஃபெடரர் vs நடால்... எப்போதும் சளைக்காத முரட்டுக் காளைகளின் இன்னொரு க்ளாஸிக்! #AllTimeClassic

பொதுவாக, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி கண் அசந்து தூங்கும் நேரம். நேற்று அப்படி இல்லை. ‛எப்ப இருந்துடா திடீர்னு டென்னிஸ் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சிங்க...’ என வியக்கும் அளவு சோசியல் மீடியாவில் புதிது புதிதாக டென்னிஸ் ரசிகர்கள். ‛ஹை... செம மேட்ச்’ என பெண்களும் உற்சாகமானார்கள். மெல்போர்ன் ராட் லேவர் அரினாவில் 20 ஆயிரம் பேர் திரண்டிருந்தார்கள் எனில், கோடிக்கணக்கானோர் டிவி முன் குத்த வைத்திருந்தனர். காரணம், டென்னிஸ் உலகின் ஜாம்பவான்களான ரோஜர் ஃபெடரர் - ரஃபேல் நடால் மோதல். எப்போதும் சளைக்காத முரட்டுக் காளைகளின் இன்னொரு க்ளாஸிக்! 

ஃபெடரர் vs நடால்...

ஆண்டுதோறும் நான்கு கிராண்ட் ஸ்லாம்  நடக்கிறது; ஆஸ்திரேலிய ஓபன் நடக்கிறது; தவிர, வருடம் முழுவதும் டென்னிஸ் போட்டிகள் நடக்கின்றன... இருந்தாலும், இந்த மேட்ச்சில் மட்டும் என்ன ஸ்பெஷல்? சனிக்கிழமை இரவே சச்சின் டெண்டுல்கர், இந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்க என்ன காரணம்? சச்சின், ஃபெடரர் ரசிகர். ஓகே. ஆனால், ஃபெடரர் விளையாடும் எல்லா போட்டிகளையும் சச்சின் இப்படி எதிர்பார்த்ததில்லையே? இங்குதான் ஃபெடரரை எதிர்த்து விளையாடும்  நடால் முக்கியத்துவம் பெறுகிறார். நடால் - ஜோகோவிச், நடால் - வாவ்ரிங்கா, நடால் - ஆன்டி முர்ரே மோதல் எனில் டென்னிஸ் ரசிகர்கள் மட்டுமே பார்த்திருப்பர். ஃபெடரர் - நடால் என்பதாலேயே டென்னிஸ் ரசிர்கள் கடந்து ஆரவாரம். ஃபெடரர் ஜெயிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு. 

எல்லை கடந்து வசீகரிக்கும் ஆற்றல் ஒரு சிலருக்கே உண்டு. ஸ்விட்சார்லாந்தைக் கடந்து, டென்னிஸ் ரசிர்களைக் கடந்து, ஃபெடரருக்கு உலகெங்கும் ரசிகர்கள். 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் மட்டும் காரணம் அல்ல. அலட்டல் இல்லாத அசாதாரணன். நடால் மட்டும் சளைத்தவரா என்ன?  14 கிராண்ட் ஸ்லாம். களிமண் தரையின் ஈடு இணையற்ற நாயகன். அடிக்கடி காயம் துவைத்து எடுக்க, அதில் இருந்து பளிச் பளிச்சென மின்னும் ‛கம் பேக்’ மன்னன். இருவரும் டென்னிஸின் தூதுவர்கள். இருவருக்கும் டென்னிஸால் பெயர். இவர்கள் ஆடுவதால் டென்னிஸுக்குப் பெயர். இந்த இருவரும் மோதினால் மட்டுமே, டென்னிஸ் ரசிக வட்டம் எல்லை கடந்து விரியும். இப்படி பல காரணங்கள் நடால் - ஃபெடரர் மோதும் போட்டி முக்கியத்துவம் பெற. 

            ஃபெடரர் vs நடால்...

ஐ.சி.சி நடத்தும் கிரிக்கெட் தொடர் எனில், இந்தியா - பாகிஸ்தானை ஒரே குரூப்பில் சேர்த்து, இரு அணிகளுக்கும் இடையே ஒரு பரபரப்பான போட்டிக்கு திட்டம் தீட்டப்படும். டென்னிஸ் அப்படி அல்ல. இரு ஜாம்பவான்கள் லீக் சுற்றில் மோதும்படி எந்த கிறுக்கனும் ‛டிரா’ (போட்டி அட்டவணை) போட மாட்டான். முதல் ரவுண்டில் இருந்து ஜெயித்து வர வேண்டும். ஃபைனலில் இரு ஜாம்பவான்கள் மல்லுக்கட்ட வேண்டும், அல்லது மல்லுக்கட்டுபவர்கள் ஜாம்பவான்கள். இதுதான் டென்னிஸ் தியரி.  

ஆறு மாதங்களுக்கு முன்புவரை நடால், ஃபெடரர் இருவருக்குமே காயம். டென்னிஸ் ராக்கெட்டை கையில் எடுக்க முடியாத அளவு முடக்கம். ஒரு சீசனையே விழுங்கிவிட்டது இஞ்சுரி. ஆனால், இன்று இருவரும் கிராண்ட் ஸ்லாம் ஃபைனலில். அதுமட்டுமல்ல டென்னிஸ் ரசிர்களின் எதிர்பார்ப்புக்கு காரணம். இருவரும் மோதிய கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் நடாலே கிங். 2012 விம்பிள்டன் பட்டத்துக்குப் பின் ரோஜர், கிராண்ட் ஸ்லாம் வெல்லவே இல்லை. ‛அதான் முடியலையே... 35 வயசாயிடுச்சு. பேசாம ரிட்டையர்டு ஆயிடலாமே...’ ஒவ்வொருமுறை ஃபெடரர் கிராண்ட் ஸ்லாம் நாக் அவுட் சுற்றில் தோற்கும்போது எதிர்கொள்ளும் வார்த்தைகள் இவை. ‛ஐ லவ் டென்னிஸ். இன்னும் ஏராளமான டென்னிஸ் மிச்சம் இருக்கிறது’ - இது ஃபெடரர் சொல்லும்  பதில். நேற்று ஆஸ்திரேலிய ஓபன் ஃபைனல் பார்த்த எல்லோருக்கும் ஃபெடரர் சொன்னது எவ்வளவு உண்மை எனப் புரிந்திருக்கும். 

ஃபெடரர் vs நடால்...

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஸ்டான் வாவ்ரிங்கா மூன்று கிராண்ட் ஸ்லாமுக்கு சொந்தக்காரர். அவரை அரையிறுதியில் அசால்ட்டாக வீட்டுக்கு அனுப்பி வைத்தார் ஃபெடரர். மற்றொரு அரையிறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை, நடால் தோற்கடிக்க எடுத்துக்கொண்ட காலம் 5 மணி நேரம். ‛டாப் -10 வரிசையில் இல்லாத ஒருவரை வீழ்த்த நடாலுக்கு, இவ்வளவு நேரம் ஆகிறது எனில், நிச்சயம் ‛ஃபைனலில் ஃபெடரர் வெற்றிக்கொடி நாட்டுவார்’ என்பது ரோஜர் ரசிர்களின் எதிர்பார்ப்பு. அது பொய்க்கவில்லை. 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என நடாலை வீழ்த்தி, 18 வது கிராண்ட் ஸ்லாமை முத்தமிட்டார் ஃபெடரர். 

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் ஸ்ட்ரெய்ட் டிரைவ் செக்ஸி எனில், டென்னிஸில் ரோஜர் ஃபெடரரின் ஒன்ஹேண்ட் பேக்ஹேண்ட் ஷாட்கள் செம ஹாட். அது டென்னிஸ் ரசிகர்களுக்கு நல் விருந்து. ஃபைனலில் 26 ஷாட்கள் வரை நீடித்த ஒரு ரேலியில், கண்ணுக்கு குளிர்ச்சியாக பளிச் பளிச்சென பேக்ஹேண்ட் ஷாட்களில் நடாலை மிரள வைத்தார் ஃபெடரர். நம்மையும்...  அதை விட, அவரது ஏஸ் சர்வ்கள் சொக்கவைக்கும். எப்போதெல்லாம் நடால், ஃபோர்ஹேண்ட் ஷாட்கள் மூலம் திணறடித்தாரோ, அப்போதெல்லாம் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் ஏஸ் சர்வ்களை அடித்து நொறுக்கினார் ஃபெடரர். அப்போது வி.ஐ.பி பாக்ஸில் இருந்து அவர் மனைவி மட்டுமல்லாது, ஒட்டுமொத்த அரங்கமும் ஆர்ப்பரித்தது. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ஏஸ் சர்வ் அடித்திருந்தார் ஃபெடரர். ஒவ்வொருமுறையும் கைதட்டலில் அரங்கம் அதிர, ‛தேங்க்யூ, தேங்க்யூ...’ என ரசிகர்களின் உற்சாகத்துக்கு கடிவாளம் போட்டார் சேர் அம்பயர்.

ஃபெடரர் vs நடால்...

அதேபோல முதல் சர்வில் பாயின்ட் எடுப்பது ஃபெடரரின் பியூட்டி. அதைத் தடுப்பதற்காக ஒவ்வொருமுறையும் பேஸ்லைனில் இருந்து சில மீட்டர் தூரம் தள்ளி நின்று சர்வை எடுத்தார் நடால். முதல் செட்டில் இருந்து ஐந்தாவது செட் வரை, நடால் அப்படித்தான் நின்றிருந்தார். ஆனாலும், அசராமல் சர்வ் செய்து, நடாலை அசரடித்தார் ஃபெடரர்.  நடாலும் சளைத்தவர் அல்ல. முதல் செட்டை எளிதாக வென்று, இதனால்தான் நான் கிராண்ட் ஸ்லாம் நாயகன் என ஃபெடரர் நிரூபித்தார் எனில், இரண்டாவது செட்டை ஈஸியாக கைப்பற்றி, நான் மீண்டு வருவதில் மன்னன் என உரக்கச் சொன்னார் ரஃபா என செல்லமாக அழைக்கப்படும் நடால்.

முதல் செட் ஃபெடரர், இரண்டாவது செட் நடால், மூன்றாவது செட் ஃபெடரர், நான்காவது செட் நடால் வரிசையில், ஐந்தாவது செட் ஃபெடரருக்குத்தானே வர வேண்டும். ரசிகன் மனம் இப்படித்தான் எதிர்பார்த்தது. ஆனால், நடால் வேறு பிளான் வைத்திருந்தார். ஃபெடரர் சர்வை பிரேக் செய்து, தன் சர்வை ஹோல்ட் செய்து, முன்னிலையில் இருந்தார் நடால். ஐந்தாவது செட்டில் ஒவ்வொரு சர்வீஸும், ஒவ்வொரு நகர்வும், ஒவ்வொரு புள்ளியும், ஒவ்வொரு கேமும், ஒவ்வொரு சொட்டு வியர்வையும் முக்கியத்துவம் பெற்றது. உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. ‛அட அட அட... இதான்டா மேட்ச். அதனாலதான் இவங்க சாம்பியன்’ என்கிற ரீதியில் ட்வீட் செய்தார் லியாண்டர் பயஸ்.

140 கி.மீ., வேகத்தில் வரும் பந்தை உடம்பை எல்லாம் முறுக்கிக் கொண்டு புல் ஷாட் மூலம் டீப் மிட் விக்கெட் திசையில் பவுண்டரி அடிக்கும் பேட்ஸ்மேன் போல இருந்தது நடாலின் ரிட்டர்ன். ஆனால், சுழற் பந்தில் ஸ்லிப்பில் ஆள் இல்லாத நேரத்தில் கீப்பருக்குப் பின்னால் பவுண்டரி தட்டி விடுவது போல அலட்டாமல் இருந்தது ஃபெடரரின் ஏஸ் சர்வ். அதுவும் ஒரே கேமில் அடுத்தடுத்து ஏஸ் சர்வ் அடிக்கும்போது நடாலால்தான் என்ன செய்துவிட முடியும், அதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர்த்து... ஐந்தாவது செட்டில்,தேவைப்படும் நேரத்தில் எல்லாம் அப்படி சர்வ் செய்யத்தவறவில்லை ஃபெடரர்.  ‛நெவர் கிவ் அப்’ ரகமான  நடால், இந்தமுறை மீளமுடியவில்லை. அதுவும் 2-0 என முன்னிலையில் இருந்தும் கோட்டை விட்டார். இறுதியில் ஃபெடரர் வெற்றி. ஆனால், செம மேட்ச்.

ஃபெடரர் vs நடால்...

ஒரு வழியாக, ஃபெடரர், நடாலை ஜெயித்து விட்டார்; அதுவும் கிராண்ட் ஸ்லாம் ஃபைனலில் ஜெயித்து விட்டார்; ஸ்பெயினை ஜெயித்து விட்டார்; நீண்ட இடைவெளிக்குப் பின் ஆஸ்திரேலிய ஓபன் ஜெயித்து விட்டார்; கிராண்ட் ஸ்லாம் ஜெயித்து விட்டார்;  தன் மீதான விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்; ஆல் டைம் கிரேட் என நிரூபித்து விட்டார்; டென்னிஸ் வரலாற்றில் தன் பெயரை அழுந்தப் பதிவு செய்து விட்டார். 

‛‛என் கையில் இருக்கும் இந்தக் கோப்பை (ரன்னர் அப்) அழகாக இருக்கிறது. ஆனால், இதை விட அது (வெற்றிக்கோப்பை) இன்னும் அழகாக இருக்கிறது. அந்தக் கோப்பைக்கு என்னை விட ஃபெடரர் தகுதியானவர். ஒருவகையில், இந்த டோர்னமென்ட் எனக்கு ஸ்பெஷல். என்னையே மீட்டுத் தந்திருக்கிறது. என் ஆட்டத்தைப் புரிய வைத்திருக்கிறது. நன்றி’’ என, சிரித்தபடியேதான் சொன்னார் நடால்.


பதிலுக்கு ஃபெடரர்  ‛‛நீண்ட இடைவெளிக்குப் பின் கிராண்ட் ஸ்லாம் வென்றதில் மகிழ்ச்சி. டென்னிஸ் கடினமான ஆட்டம். டென்னிஸில் டிரா என்ற அம்சம் இல்லை. ஒருவேளை டிரா என்ற முடிவு இருந்திருந்தால், இன்று டிரா அடைவதில் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். இந்த கோப்பையை நடால் உடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் அடைந்திருப்பேன்’’ என புன்னகைத்தார் ஃபெடரர்.

களத்தில் மோதும் எல்லோருமே நண்பர்களாக இருப்பார்களா எனத் தெரியவில்லை, களம் கடந்தும் ஃபெடரர் - நடால் நல்ல நண்பர்கள். ஆல்டைம் சாம்பியன்கள்!


- தா.ரமேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close