ஓட்டல் ஊழியரின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட சச்சின்..!

யாராவது சுட்டிக்காட்டும் வரை நம் குறை நமக்குத் தெரிவதே இல்லை. இல்லையா? சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 34,000 ரன்களைக் குவித்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கும் ஒரு குறை இருந்தது. அதை ஓர் ஓட்டல் ஊழியர் சுட்டிக் காட்டிய பின்பே, சச்சின் அதை சரி செய்தார். என்ன குறை அது?

மும்பையில் ‘Sachin by Spartan’ என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் சச்சின் பேசியதாவது:

ஹோட்டல் ஊழியரின் அட்வைஸ் கேட்ட சச்சின்

’’யாரிடம் இருந்தும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால், பல விஷயங்களில் நாம் மேம்படலாம். சென்னையில் ஓர் ஓட்டலில் தங்கியிருந்தேன். அப்போது ஒரு ஊழியர் (waiter) என்னிடம் வந்தார். தயங்கியபடியே ‛நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்றால், அவமதிப்பாக நினைக்க மாட்டீர்கள் என்றால், நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்’ என்றார். ‛சொல்லுங்கள்’ என்றேன். ‛உங்கள் பேட் ஸ்விங் செய்வதற்கு elbow guard தடையாக இருக்கிறது போல தெரிகிறது’ என்றார். அவர் சொன்னது 100 சதவீதம் உண்மை.

ஏதோ ஒரு விஷயம் அசெளகர்யமாக இருப்பது தெரிந்தது. ஆனால், அது என்னவென்று எனக்கு பிடிபடாமல் இருந்தது. இந்த எல்போ கார்டு உறுத்தலாக இருப்பது எனக்கு தோன்றவே இல்லை. இரண்டு முறை பந்து எல்போ கார்டில் தாக்கியிருக்கிறது. அவர் சொன்ன பிறகுதான், எல்போ கார்டு தரமின்றி இருப்பதை உணர்ந்தேன். உடனடியாக அதை ரீடிசைன் செய்தேன். அதன்பிறகு பேட் ஸ்விங் செய்வதில் எந்த பிரச்னையும் இருக்கவில்லை. நம் நாட்டில் அடகுக்கடைக்காரர் முதல் ஒரு கம்பெனியின் சி.இ.ஓ வரை யார் வேண்டுமானாலும் உங்களுக்கு அறிவுரை சொல்லலாம். நல்ல அறிவுரை யாரிடம் இருந்து வந்தாலும், அதை ஏற்க தயாராக இருக்க வேண்டும்’’ என்றார் சச்சின்.

சச்சின் டெண்டுல்கர்

பேட் உள்பட பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவதில் சச்சின் கில்லி. எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துவார். சச்சின் அடிக்கடி பேட்டை விரல்களால் டொக், டொக்கென தட்டிப் பார்த்து, அதை தரம்பிரிப்பார். ஐ.பி.எல் சமயத்தில், சச்சின் பேட்டை இப்படி தட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து, ‛இதென்ன பழக்கம்’ என கேட்டனர் டுவைன் பிராவோ மற்றும் பொல்லார்டு. அதற்கு சச்சின் ‛எங்களுக்கென ஒரு பாஷை இருக்கிறது. நான் பேட்டிடம் பேசிக் கொள்வேன்’ என்றார். ‛அப்படியா?’ எனச் சொல்லி விட்டு, சச்சினுக்கு ஒரு டெஸ்ட் வைத்தனர் அந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். மேற்கொண்டு நடந்ததை இதோ சச்சினே சொல்கிறார்.

‛‛டிரெஸ்ஸிங் ரூமில் ஒரு நாற்காலிக்குப் பக்கத்தில் இருந்த நான்கு பேட்களை எடுத்து வந்தார் பிராவோ. ‛இதில் எந்த பேட்டை இன்று நான் பயன்படுத்த வேண்டும்’ எனக் கேட்டார். வழக்கம்போல, நான் பேட்டை விரல்களால் தட்டிப் பார்த்து, சத்தத்தை உன்னிப்பாக கவனித்தேன். சோதித்துப் பார்த்த பின், ‛எல்லாமே நன்றாக இருக்கிறது. ஆனால், சிறந்த பேட் என்று எதுவும் இல்லை’ என்றேன். அதோடு, தரமான பேட்களை வரிசைப்படுத்தினேன்.

பிராவோ இன்னொரு பேட்டைக் கொடுத்து, ‛இது என் பிராக்டிஸ் பேட். இது எப்படி இருக்கிறது எனச் சொல்லுங்கள்’ என்றார். சோதித்துப் பார்த்தேன். ‛இது சூப்பர் பேட்’ என்றேன். இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். உண்மையில் பிராக்டிஸ் பேட் என்று சொன்ன பேட்தான், அவர் மேட்ச்சுக்குப்  பயன்படுத்தும் பேட். நான் சரியான பேட்டைத்தான் தேர்வு செய்திருக்கிறேன். அவர்கள் என்னை சோதித்திருக்கின்றனர். ‛நான் பேட்டிடம் பேசுவேன்’ என்று மீண்டும் ஒருமுறை அவர்களிடம் சொன்னேன். அவர்கள் அதை ஆமோதித்தனர்’’ என்றார் சச்சின். 

- தா.ரமேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!