வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (02/02/2017)

கடைசி தொடர்பு:12:53 (02/02/2017)

“என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு” - யுவராஜ் சிங்கை வஜ்ரமாக்கிய அந்த திமிர்!

ஆறு வருடங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த கிரிக்கெட் மேட்ச் அது. 2011 உலகக்கோப்பையின் கடைசி லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்திய அணியில் எல்லோரும் திணற, தனி ஆளாக சதமடித்து, பவுலிங்கில் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வாங்கினார் யுவராஜ். 

பெரும் மகிழ்ச்சியோடு  உறங்கச்சென்ற யுவராஜுக்கு அந்த இரவு அவ்வளவு இனிமையானதாக அமையவில்லை. நள்ளிரவு திடீரென மூச்சு விட சிரமப்பட்டார்; சில நிமிடங்களில் ரத்த வாந்தி எடுத்தார். மருத்துவர் அறிவுரைப்படி மாத்திரைகளைச் சாப்பிட, அடுத்த அரைமணிநேரத்திலேயே பிரச்னை முடிவுக்கு வந்தது. தனக்கு ஏதோ ஒரு மிகப்பெரிய பிரச்னை இருக்கிறது என்பதை மட்டும் அப்போதைக்கு யுவராஜால் உணர முடிந்தது. சச்சினும், தோனியும் ''ரெஸ்ட் எடு யுவராஜ்'' எனச் சொல்ல, "எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை சம்திங் ஃபுட் பாய்சன்னு நினைக்கிறேன்'’ எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். யுவராஜின் கான்பிடன்ஸ் தோனிக்கு நம்பிக்கைத் தர, சரி விளையாடட்டும் என விட்டுவிட்டார்.

யுவராஜ்

அடுத்ததாக காலிறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவின் சகாப்தத்தை அன்றைய தினம் இந்தியா முடித்து வைத்தது. அந்தப் போட்டியிலும் இந்தியாவை வெற்றிபெற வைத்த ஆட்ட நாயகன் யுவி தான். இறுதிப்போட்டியில் தோனிக்கு உறுதுணையாக மறுமுனையில் ஆடி, அந்த வின்னிங் மொமெண்ட்டை களத்தில் கொண்டாடியதும் யுவியே! உலகக்கோப்பையை ஜெயித்தது மட்டுமின்றி தொடர் நாயகன் விருதும் போனஸாக அவருக்குக்  கிடைத்தது. 

ஆனால் இந்த மகிழ்ச்சி எல்லாம் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கூட நீடிக்கவில்லை. மீண்டும் மூச்சுத்திணறல், இரத்த வாந்தி என அவஸ்தைகள் தொடர்ந்தன. ஆனால் இம்முறை இதெல்லாம் நடந்தது யுவராஜ் சிங்கின் வீட்டில்! 

பதறினார்கள் பெற்றோர்கள். யுவராஜ் சிங்க்கு ரத்த பரிசோதனை உட்பட சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. யுவராஜூக்கு நுரையீரலில் புற்றுநோய் ஏதும் இருக்கிறதா என ஒருமுறை செக் செய்து பார்த்துவிடலாம் என மருத்துவர்கள் சொல்ல, அதிர்ந்தார்கள் பெற்றோர்கள். ஏனெனில் அப்போதுதான் யுவராஜ் சிங் ஐ.பி.எல் தொடரில் புனே அணிக்கு கேப்டனாக விளையாடிக்கொண்டிருந்தார். தனது மகன்,  கேரியரில் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும்போது இப்படியொரு சோதனையா என  நொறுங்கிப்போனார் தந்தை யோக்ராஜ் சிங். ஐ.பி.எல் முடிந்த பிறகு பரிசோதனை குறித்து யுவராஜ் சிங்கிடம் மெல்ல பேச்சை எடுத்தார் யோக்ராஜ், "எனக்கும் கேன்சரா இருக்கலாம்னு டவுட் இருக்கு, வாங்க போய் எதுக்கும் செக் பண்ணிப்பார்த்திடுவோம்" என கூலாக சொல்லிவிட்டு பரிசோதனைக்கு செல்ல, அவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஸ்டேஜ் -1  என்றது ரிசல்ட்.

யுவராஜ்

அந்தக் கணம் நொறுங்கிப்போனார் யுவி, ஆனால் புற்றுநோய்க்கு சிகிச்சை இருக்கிறது, குணப்படுத்திவிட முடியும் என நம்பிக்கை தந்தார்கள் மருத்துவர்கள். "புற்றுநோயால் ஒருவேளை என் வாழ்க்கை முடிவுக்கு வரலாம், ஆனால் நான் இருக்கும்வரை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், இந்திய அணிக்காக ஆட வேண்டும், இந்த விஷயத்தை இப்போதைக்கு  வெளியில் சொல்லாதீர்கள்" என பெற்றோரிடம் சொல்லிவிட்டு இங்கிலாந்து டூருக்கு ரெடியானார். என்ன பதில் சொல்வதே என்றே தெரியாமல் கண்ணீரோடு வழி அனுப்பி வைத்தார் அம்மா ஸ்வப்னம் சிங். 

இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் , இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட். அவ்வளவுதான் யுவராஜ் சிங்கால் விளையாட முடிந்தது. புற்றுநோயின் தீவிரம் அதிகமானது; மூச்சுத்திணறல் தொடந்த்தது; புற்றுநோய் ஸ்டேஜ்-2 வை நெருங்கிவிட்டது. இனிமேல் தாமதிக்க வேண்டாம். சிகிச்சையை தொடங்கியே ஆக வேண்டும் என மருத்துவர்கள் சொல்ல, 2011 நவம்பரில் சிகிச்சைக்கு அமெரிக்காவுக்கு புறப்பட்டார். "நான் திரும்ப வருவேணான்னு தெரியல, டிரீட்மென்ட்டுக்கு பிறகு எப்படி என் உடல்நிலை இருக்கும்னு தெரியல, ஒருவேளை உயிரோட வந்தா, நான் திருப்பி இந்தியாவுக்கு ஆடுவேன். அது நிச்சயம்" என சச்சின் உட்பட இந்திய அணியில் உள்ள நெருங்கிய நண்பர்களிடம் சொல்லிவிட்டு பறந்தார்.

யுவராஜ்

‛கீமோதெரபி’ உட்பட ஐந்து மாத கடுமையான சிகிச்சைக்குப் பிறகு மொட்டைத்தலையுடன் ஆளே மாறிப்போய் மீண்டும் இந்தியாவுக்கு வந்தார். ஆட்ட நாயகனாக மிளிர்ந்த யுவராஜ் சிங் ஒரே ஆண்டில் பரிதாப நாயகனாக மாறிப்போனார். இந்திய மக்கள் ‛உச்’ கொட்டி யுவராஜ் மீது பரிதாபப்பட்டனர். இது யுவிக்கு பிடிக்கவில்லை. "யுவி....யுவி என்ற அந்த உற்சாக குரல்களை மீண்டும் கேட்க வேண்டும், என்னைப் பார்த்து யாரும் பரிதாபப்படத் தேவையில்லை" எனச் சொல்லிவிட்டு மீண்டும் பேட்டைத் தூக்கினார். புற்றுநோய் சிகிச்சை எடுத்தால் பொதுவாக உடலில் வலு குறைந்தது போன்ற உணர்வு இருக்கும், எடை அதிகமான பொருட்களை தூக்க முடியாது. ஆனால் யுவி கடுமையாக பயிற்சி செய்தார், வலி தாங்கினார். வழி பிறந்தது.

யுவராஜ்

பழைய ஷாட்டுகளை விளையாட உடல் ஒத்துழைக்கவில்லை. குறிப்பாக இன்ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வதில் கொஞ்சம் பிரச்னை இருந்தது. புதிதாக கிரிக்கெட் கற்றுக்கொள்ளும் வீரனைப் போல டெக்னிக்குகளை மாற்றிப் பயிற்சி செய்ய ஆரம்பித்தார். அதிரடி பாணியில் இருந்து பக்குவப்பட்ட இன்னிங்ஸ் ஆட ரெடியானார். ஆனால் அது அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ரசிகர்கள் அவரிடம்  பழைய அதிரடியை எதிர்பார்தார்கள். 

புற்றுநோய் சிகிச்சையால் பத்துமாத  இடைவெளிக்கு பிறகு முதல் தர போட்டிகளில் ஆடத் துவங்கினார். 2012 அக்டோபர் துலீப் டிராபி அரையிறுதியில் களமிறங்கி 33 பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் உட்பட 208 ரன்களை எடுத்து 'நான் வந்துட்டேன்னு சொல்லு' என மிரட்ட, 'இவன் வேற மாதிரி' என இந்திய ரசிகர்களுக்கு புரிந்தது.

இந்திய அணியில் சீனியர்கள் களையெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் கடும் போட்டிகளுக்கு மத்தியில்மீண்டும் இடம் பிடித்தார். ஆனால் உள்ளூர் போட்டிகளில் ஆடும் அளவுக்கு இந்திய அணிக்காக மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆட முடியவில்லை. 2014 டி20 உலகக்கோப்பை இறுதியில் யுவராஜ் ஆடிய ஆமை வேக இன்னிங்ஸால் தான் இந்தியா தோற்றது. யுவராஜை இனிமேல் டீமிலேயே சேர்க்கக் கூடாது என கோபத்தில் கத்தினான் ரசிகன்.

யுவராஜ்

யுவி மீது ரசிகர்கள் நம்பிக்கை இழந்தாலும், போதும்ப்பா... கிரிக்கெட்டை விட்ருப்பா என எல்லோரும் அறிவுரை சொன்னாலும் 'என் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு' என்ற அந்த திமிர் அவரை செறிவாக இயக்கியது. ஒரு தொடருக்கு இந்திய அணிக்கு எடுக்கப்படுவதும், உடனே உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மீண்டும் இடம் பிடிப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார் யுவராஜ் சிங். 

பேர், புகழ், பணம், கோப்பைகள் என ஒரு கிரிக்கெட் வீரன் சாதிக்க  வேண்டிய அனைத்தையும் முப்பது வயத்துக்குள்ளாகவே சாதித்தாகி விட்டது. இனியும் இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா என கேட்டால், "அது வேற யுவராஜ் சிங், இது கேன்சரில் இருந்து மீண்ட யுவராஜ் சிங். கிரிக்கெட்டில், இவன் தடுமாறிக்கொண்டுதான் இருக்கிறான், இன்னும் சாதிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன" என பக்குவமாகச் சொல்கிறார்.

கடந்த ஆண்டு யுவராஜ் சிங்கிற்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது,  ஆஸ்திரேலிய தொடர், ஆசிய கோப்பை, உலகக்கோப்பை, ஐ.பி.எல் என டி20 பார்மெட்டில் மெல்ல மெல்ல தனது ஃபார்மை மீட்டெடுத்தார். அதேசமயம் டெஸ்ட் போட்டிகளிலும் வேற லெவல் இன்னிங்ஸ் ஆடினார். கடந்த ஆண்டு  ரஞ்சி உட்பட முதல் தர கிரிக்கெட்டில் எட்டு போட்டிகளில் ஆடி 724 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் ஒரு இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்து மிரட்டினார். இப்படி, இப்போதைய இளம் வீரர்களுடனும் போட்டி போட்டு திறமையை நிரூபித்த பிறகுதான் யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.

யுவராஜ்

தோனி கேப்டனாக இல்லாமல் ஒரு பேட்ஸ்மேனாக தொடர, தோனிக்கு பக்கபலமாக மிடில் ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேனாக யுவி ஆட பத்து வருடத்துக்கு முந்தைய நிகழ்வுகள் மீண்டும் நிழலாடுகின்றன. 29 வயதில் இந்திய அணிக்காக விளையாடி சதம் அடித்த யுவராஜ் சிங் இதோ 35 வயதில் மீண்டும் வந்து ஒருநாள் போட்டிகளில் மிரட்டல் இன்னிங்ஸ் ஆடி சதமடித்து யுவி எப்பவும் யங் தான் என நிரூபித்திருக்கிறார்.

கட்டாக்கில் 25/3 என இந்தியா தடுமாறியது அரிதிலும் அரிதான நிகழ்வு. விராட் கோஹ்லியே கைவிட்டாலும் வின்டேஜ் இன்னிங்ஸால் யுவராஜும், தோனியும் இந்திய ரசிகர்களுக்கு செம விருந்து படைத்தார்கள். இருவரும் அடுத்தடுத்து சதம் கண்டார்கள். இந்த இரண்டு ஜாம்பவான்கள் இணைந்ததில் எங்கே பந்து போடுவது என தெரியாமல் குழம்பிப்போனார்கள் பெளலர்கள். 2,132 நாள்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்காக சதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றிருக்கிறார் யுவராஜ் சிங். 

இதோ  டி20 தொடரில், கோப்பை யாருக்கு என நிர்ணயிக்கும் முக்கியமான போட்டியில், சிக்ஸர்களாக சாத்தி இந்திய அணி சிறப்பான ஸ்கோர் குவிக்க உதவியிருக்கிறார். பதினெட்டாவது ஓவரில் யுவராஜ் சிங் எடுத்த விஸ்வரூபம், பத்து வருடத்துக்கு முன்பு இதே இங்கிலாந்துக்கு எதிராக  பத்தொன்பதாவது ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த இன்னிங்ஸை லேசாக நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது. களத்தில் தல டோனி, தளபதி யுவராஜ் இப்போ வாங்க பங்காளிகளா என இந்திய ரசிகர்கள் குஷியாகியிருக்கிறார்கள்.

யுவராஜ் மற்றும் தோனி

தோனிக்கும் சரி, யுவராஜ் சிங்கிற்கும் சரி இந்த சீஸனில் இருந்து அவரது கேரியரில் மூன்றாவது இன்னிங்ஸ் தொடங்கிவிட்டது. புல் ஷாட்டோ, ஹெலிகாப்டர் ஷாட்டோ அவரவர்  கேரியரை மெகா சிக்ஸரோடு  இந்தியாவுக்கு மீண்டும் உலகக்கோப்பை வாங்கித்தந்து  நிறைவு செய்ய வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு. தல தளபதிகள் கவலைப்படாமல் இணைந்து கலக்க வேண்டிய தருணமிது! 

- பு.விவேக் ஆனந்த் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்