‛சாஹலிடம் முடியாது என்ற வார்த்தையே வராது!’ - கோஹ்லி புகழாரம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய கடைசி டி-20 போட்டி பெங்களுரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலையில் வெற்றிபெற்றிருந்ததால், இந்த ஆட்டம் முக்கியமானதாக கருதப்பட்டது.  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது.

முதலில் பேட் செய்தது இந்திய அணி. ஓபனிங் பேட்ஸ்மேன் விராத் கோஹ்லி ரன் அவுட்டானது ஏமாற்றத்தை அளித்தாலும், அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். இந்தமுறை தோனி விஸ்வரூபம் எடுத்திருந்தார். அவர் சந்தித்த 36 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் சேர்த்தார். இது சர்வதேச டி-20 போட்டிகளில் அவர் அடிக்கும் முதல் அரைசதம். யுவராஜ் சிங் தன்  பங்கிற்கு 3 சிக்ஸர்கள் விளாசி 27 ரன்களை அடித்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது,  சவாலான சேஸ்சை இங்கிலாந்து அணிக்கு அளித்தது. 

சாஹலுக்கு கோஹ்லி பாராட்டு

இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே ஏமாற்றம். சாஹல் பந்தில் சாம் பில்லிங்ஸ் டக் அவுட்டானார்.  அடுத்து, ஜேசன் ராய், ஜோ ரூட், மார்கன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 119 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மன்கள், சஹலின் சுழலுக்குத் தாக்கு பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாக 127 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து அணி. இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. நான்கு ஓவர்களில் 25 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சாஹல், ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகன் விருதும் அவருக்கே. 

யார் அந்த சாஹல்? 
ஹரியானாவின் இளம் ஸ்பின் பெளலர் யுஸ்வேந்திரா சாஹல். 23 ஜூலை 1990-ல் பிறந்தவர். இவர் கிரிக்கெட்டில் மட்டுமல்லாது செஸ் போட்டியிலும் கில்லி. சர்வதேச செஸ் கூட்டமைப்பு தளத்தில் இவர் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. செஸ், கிரிக்கெட் இரண்டிலும் கலக்கும் ஒரே இந்தியர்.

கடந்த ஆண்டு ஜிம்பாப்வேக்கு சுற்றுப் பயணம் சென்ற இந்திய அணியில் சாஹல் இடம்பெற்றார். இதுதான் இந்திய அணியில் அவரது அறிமுகம். ஒருநாள் மற்றும் டி-20 என இரு ஃபார்மட்டிலும் சேர்த்து இதுவரை 9 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். அஷ்வின், ரவீந்திர ஜடேஜா இருவரும் ஓய்வில் இருப்பதால்தான், சாஹல் நேற்று பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க முடிந்தது. 
கடந்த 2009ம் ஆண்டில் இருந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்தாலும், அங்கும் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. எட்டு ஆண்டுகளில் 27 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ரஞ்சி டிராபி போட்டிகளில் ஹரியானா அணிக்காக ஆடுகிறார். ஆனால், சக வீரரான அமித் மிஸ்ரா அணியில் இடம்பிடித்தால், சாஹலுக்கு இடம் கிடைக்காது. தண்ணீர்தான் சுமக்க வேண்டும். அவர் ராசி அப்படி.

ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடியபோதும் சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மும்பை அணி சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்ற போட்டியில், 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். இருந்தாலும் 2011 முதல் 2013 வரை மொத்தம் ஏழு போட்டிகளில்தான் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. பின் பெங்களூரு அணி அவரை ஏலத்தில் எடுத்தது. பெங்களூரு அணிக்காக முதல் சீசனில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்த சீசனில் அது இரு மடங்கானது. கடந்த சீசனில் 21 விக்கெட்டுகளை சாய்த்து, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீரர்  என பெயர் பெற்றார். ஆனால், பெங்களூரு அணியின் கோஹ்லி, ஏபி டிவில்லியர்ஸின் புகழ் வெளிச்சத்தில் சாஹல் பெயர் மங்கலானது. 

பாராட்டு மழையில் சாஹல்

சாஹலின் திறமையை அடையாளம் காட்டியதில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு பெரும் பங்கு உண்டு. கடந்த மூன்று சீசன்களாக பெங்களுரு அணிக்காக விளையாடி வருகிறார். பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோஹ்லிதான், தற்போது இந்திய அணியின் கேப்டன். ஸோ... சாஹல் பற்றி கோஹ்லிக்கு எல்லாமே அத்துப்படி. ‛‛ஐ.பி.எல் போட்டிகளிலும் பலமுறை, சாஹலை பயன்படுத்தி இருக்கிறேன். மிடில் ஓவரில் பந்துவீசச் சொன்னாலும் தயங்க மாட்டார், புதிய பந்தைக் கொடுத்தாலும் தயங்க மாட்டார். எந்த சூழ்நிலையிலும் அவரிடம் இருந்து ‛முடியாது’ என்ற வார்த்தை வரவே வராது. இதுபோன்ற வீரர்கள் அணியில் இருப்பது சிறப்பு’’ என சாஹலுக்கு சர்டிஃபிகேட் கொடுத்தார் விராட் கோஹ்லி.

ஐ.பி.எல். போட்டிகளைக் கடந்து, முதல்முறையாக இந்திய அணிக்காக ஜொலித்துள்ளார் சாஹல். ஒரேநாளில் ‛யார் அந்த சாஹல்’ என பாப்புலராகி விட்டார். இங்கிலாந்துக்கு எதிராக நேற்று ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி,  டி-20 வரலாற்றில் ஐந்து விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய  வீரர் என்ற பெருமைபெற்றார். ஒட்டுமொத்தத்தில் ஐந்து விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்திய மூன்றாவது வீரர்.

ஒருவழியாக, காத்திருப்போர் பட்டியலில் இருந்து பிளேயிங் லெவனில் இடம்பிடித்து விட்டார். இடம் பிடித்தது மட்டுமல்லாது, வாய்ப்பு கிடைத்தால் விக்கெட்டுகளை அள்ளுவேன் என நிரூபித்தும் விட்டார். விராட் கோஹ்லியின் குட்புக்கிலும் இடம்பிடித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் மற்றுமொரு வெள்ளைப் பக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. அதை பொன்னெழுத்துகளால் நிரப்ப வேண்டியது இனி சாஹல் பொறுப்பு.

இப்படித்தான் ஜெயித்தது இந்தியா! 12 திருப்புமுனைத் தருணங்கள் #PhotoStory


-தார்மிக் லீ 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!