''இந்தியா உஷார்... உலகத்துக்கே நாங்கள் யார் எனத் தெரியும்!'' - முஷ்ஃபிகுர் ரஹீம்

வங்கதேச கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐசிசி டெஸ்ட் அணிக்கான அந்தஸ்தைப் பெற்ற வங்கதேசம், முதன்முறையாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி, ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் வங்கதேச வீரர்கள், நேற்று முன்தினம் ஐதராபாத் வந்தடைந்தனர். இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, அபினவ் முகுந்த் தலைமையிலான இந்திய ‘ஏ’ அணியுடன் 2 நாள் பயிற்சிப் போட்டியில் வங்கதேச அணி விளையாடுகிறது. ஜிம்கானா மைதானத்தில் நடக்கும் இந்த பயிற்சிப் போட்டி, நாளை காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டி குறித்து வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் முஷ்ஃபிகுர் ரஹிம் கூறியதாவது:

இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்

''இந்திய மண்ணில் எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை, இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல் உலக கிரிக்கெட்டுக்குச் சொல்ல விரும்புகிறோம். டெஸ்ட் அந்தஸ்து பெற்று பல ஆண்டுகள் கழித்து, இந்தியா வந்து விளையாடுவதைப் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. நாங்கள் விளையாடும் விதத்தைப் பார்த்து, இந்தியா எங்களை மீண்டும் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை விளையாட அழைக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்த விரும்புகிறோம். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி என நான் நம்பவில்லை. அதுபோன்று அழைப்பதும் சற்று ஆச்சர்யமான விஷயமாகவே உள்ளது. என்னைப் பொறுத்தவரை, இது வங்கதேச அணி பங்கேற்கும் மற்றுமொரு டெஸ்ட் போட்டி, அவ்வளவே. 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அணி போல இல்லாமல், இப்போது இந்தியா வந்திருக்கும் வங்கதேச அணி மிகவும் வலிமையானது. போதுமான வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்களுடன் சேர்த்து ஆழமான பேட்டிங்கும் எங்களிடம் உள்ளது. சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள், தங்களது பார்மை தக்க வைத்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்

இதனுடன் கடந்த காலங்களில் சிறப்பாகச் செயல்படாத வீரர்களும் இம்முறை தங்கள் கணக்கை வெற்றிகரமாகத் தொடங்கவும் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா வலுவான அணி. சொந்த மண்ணில் அவர்கள் எப்போதுமே சிறப்பாக விளையாடுவார்கள். சூழ்நிலை இந்தியாவுக்குச் சாதகமாகவே இருந்தாலும், நாங்கள் பலம் பொருந்திய அணியாகவே இருக்கிறோம். எங்களது பேட்ஸ்மேன்களால் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சுக்குக் கடும்சவால் கொடுக்க முடியும் என்றே கருதுகிறேன். பந்துவீச்சைப் பொறுத்தவரையில், எங்களது வீரர்களுக்கு அனுபவம் போதாது. ஆனால் சில வீரர்கள் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாகவே செயல்பட்டார்கள். ஒரு அணியாக சிறந்த திறனை நாங்கள் வெளிப்படுத்தும் பட்சத்தில், எந்த ஒரு சிறந்த அணிக்கு எதிராகவும் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும். இந்தியாவும் அதற்கு விதி விலக்கு அல்ல. வெறும் 2 அல்லது 3 நாளில் போட்டியை முடிக்க நாங்கள் விரும்பவில்லை. ஏனெனில் இந்தியாவுக்கு எதிராக 5 நாட்களும் முழுதாக விளையாடவே விரும்புகிறோம்'' என்றார். 

வங்கதேச பெளலர் முஸ்டாபிஸுர் ரஹ்மான்

வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முஸ்டாபிஸுர் ரஹ்மான், தோள்பட்டை காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடாதது, அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது. ஏனென்றால் போட்டி நடைபெறும் ஐதராபாத் மைதானம், அவருக்கு நன்கு பரிட்சயமானது. இங்குதான் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காகக் கடந்த சீசனில் விளையாடினார். புவனேஸ்வர் குமாருடன் இணைந்து விக்கெட்டுகளை அள்ளி, அணி கோப்பை வெல்லவும் காரணமாக இருந்தார். இவருக்குப் பதிலாக ஷஃபியுல் இஸ்லாம் அணியில் இடம்பிடித்துள்ளார். காயம் காரணமாக நியுஸிலாந்துக்கு அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத வங்கதேச அணியின் கேப்டன் முஸ்ஃபிகுர் ரஹிமுடன், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான மோமினூல் ஹாக், இம்ரூல் கெய்ஸ் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான லிட்டன் தாஸ் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். 

 - ராகுல் சிவகுரு.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!