வெளியிடப்பட்ட நேரம்: 16:58 (17/02/2017)

கடைசி தொடர்பு:18:49 (17/02/2017)

கொத்தனார்கள் உலகத்தில் புகுந்த இன்ஜினியர்... டிவில்லியர்ஸ்! #HBDABD

நன்றாக நினைவிருக்கிறது! பத்து ஆண்டுகளுக்கு முன்பு கரீபிய மண்ணில் நடந்த உலகக்கோப்பைத் தொடர் அது. சச்சின், சேவாக், டிராவிட், தோனி, யுவராஜ், கங்குலி, ஜாகீர் என அத்தனை நட்சத்திர வீரர்களும் இந்திய அணியில் இருந்த காலகட்டம். `இந்தமுறை இந்தியாதான் உலகக் கோப்பையை வெல்லும்’ என நம்பியது கிரிக்கெட் உலகம். ஏனெனில், அசுர வலிமையுடன் வெஸ்ட் இன்டீஸுக்கு புறப்பட்டிருந்தது இந்தியா. `2003-ல் உலகக்கோப்பையை நூலிழையில் தவறவிட்டது போல, இம்முறை மிஸ் செய்யவே செய்யாது’ என்ற அபாரமான நம்பிக்கையில் கோடிக்கணக்கான ரசிகர்களும் டிவி முன் அமர்ந்தார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கும் கிரிக்கெட் ஜுரம். எனக்கோ தேர்வு ஜுரம். 

மார்ச் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் உலகக் கோப்பை தொடங்கியபோது, தேர்வா, கிரிக்கெட்டா என்ற கேள்வி வந்தபோது கிரிக்கெட்தான் முக்கியம் என தேர்வை புறக்கணித்து, வீட்டில் உட்கார்ந்த எத்தனையோ லட்ச மாணவர்களில் நானும் ஒருவன். இந்தியா தன் முதல் போட்டியில் வங்கதேசத்தைச் சந்தித்தது. அதிர்ச்சித் தோல்வி இந்தியாவுக்கு! நானும் அதிர்ந்தேன். ஆனால் இரண்டே நாளில் ஆறா கொதிப்புக்கு மயிலிறகால் வருடி மருந்து போட்டனர் இந்திய வீரர்கள். பெர்முடா அணியின் பவுலிங்கை நொறுக்கித் தள்ளி 413 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது புலிகளின் தேசம். அந்த மகிழ்ச்சி இந்தியர்களுக்கு நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஒரு வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தொடங்கிய இந்தியா - இலங்கைக்கு இடையேயான போட்டியில், சச்சின், தோனி போன்ற வீரர்கள் `டக் அவுட்’ ஆக 255 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் படுதோல்வி அடைந்து, உலகக்கோப்பை தொடரில் இருந்தே வெளியேற்றப்பட்டது நம் அணி. 

கொத்தனார்கள் உலகத்தில் புகுந்த இன்ஜினியர்... டிவில்லியர்ஸ் !

ஒரு மாதம் நடக்க வேண்டிய கிரிக்கெட் கொண்டாட்டம், ஒரே வாரத்தில் முடிந்தது. மோசமான தோல்வியைத் தாங்கிக் கொள்ளாமல் தோனி, யுவராஜ் போன்றோர்களின் வீட்டில் கல் எறிந்து அநாகரிகமாக நடந்து கொண்டனர் ரசிகர்கள். 'ச்ச... இந்தியா இல்லேல்ல' என்ற துக்கத்துடன் அந்த உலகக்கோப்பைத் தொடரை டிவியில் பார்ப்பதையே பலரும் நிறுத்தியிருந்தார்கள். ரசிகர்களின் அந்த அபத்தமான செயலை நியூஸ் சேனல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பின. கடுப்பில்  சேனலை மாற்றும்போது ஒரு 23 வயது தென் ஆப்பிரிக்க இளைஞன், ஆஸ்திரேலியாவின் நாதன் பிராக்கனின் பந்தை `டீப் மிட் விக்கெட்’ திசையில் ஒரு சிக்ஸர் விளாசினார். செம செக்ஸியான ஷாட் அது!

அதன் பின்னர்தான் அது என்ன மேட்ச் என கவனித்தேன். உலகக்கோப்பை லீக் போட்டியொன்றில் தென் ஆப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் மோதின. தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 378 ரன்கள் தேவை. கிரீம் ஸ்மித்துடன், டிவில்லியர்ஸ் தொடக்க வீரராக களமிறங்கியிருந்தார். முதல் ஓவரிலேயே பவுண்டரியும், சிக்ஸருமாக அமர்க்களப்படுத்திய அந்த இளைஞன் டிவில்லியர்ஸ். தொடர்ந்து மேட்ச்சை கவனித்தேன். பிராக்கன், ஷான் டேயிட், கிளென் மெக்ராத் என ஒரு பவுலரையும் விடாமல் உரித்தார் டிவில்லியர்ஸ். குறிப்பாக மெக்ராத்தின் ஓர் ஓவரில் `ஹாட்ரிக்’ பவுண்டரிகள் விளாசி அதிர வைத்தார் ஏ.பி.டி. 

ஒரு பொடிப்பையன் தன் பந்துவீச்சை நொறுக்குவதை பார்த்து வெறுத்துப் போனார் மெக்ராத். 5.3 ஓவரில் ஐம்பது ரன்களையும், 13.1 ஓவரில் நூறு  ரன்களையும், இருபதாவது ஓவரில் 150 ரன்களையும் கடந்தது தெ.ஆப்பிரிக்கா. 21வது ஓவரின் கடைசி பந்தில், அணிக்காக இரண்டாவது  ரன் ஓடும் போது  ரன் அவுட் ஆனார் ஏ.பி.டி. அப்போது அணியின் ஸ்கோர் 160. டிவில்லியர்ஸின் ஸ்கோர் 70 பந்துகளில் 14 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களுடன் 92  ரன்கள். இரண்டு ஆண்டுகளாக அணியில் இருந்தும் ஒரு சதம் கூட அப்போது வரை அவர் அடித்திருக்கவில்லை. டிவில்லியர்ஸின் அந்த இன்னிங்ஸ் எனக்கு ஷேவாக்கை நினைவு படுத்துவதாக அமைந்தது. ஆஃப் சைடில் போடப்படும் ஒரு பந்தை, எளிதாக கவர் திசையில் ஆடி விடலாம்தான். அப்படித்தான் கிரிக்கெட் புத்தகம் சொல்லித் தருகிறது. ஆனால் அதை வேறு விதமாக ஷாட் ஆடும் வழக்கம்தான் டிவில்லியர்ஸின் பழக்கம். 

டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸுக்காக அந்த உலகக்கோப்பையைக் கவனிக்க ஆரம்பித்தேன். அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் `டக் அவுட்’ ஆனார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 15 ரன்னில் அவுட் ஆனார். இந்தியாவை போலவே தென் ஆப்பிரிக்காவும் வங்கதேசத்திடம் தோல்வியைத் தழுவியது. அடுத்த மேட்ச்சில் வெஸ்ட் இண்டீசுடன் தெ.ஆ மோதியது.  சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்துவது என்பது அவ்வளவு சுலபமல்ல. காலிமோர், டேரன் பவல், பிராட்ஷா, பிராவோ, கெயில், பொல்லார்டு, சந்திரபால், லாரா, சர்வான், ராம்தின் என டெர்ரர் அணியாக கோலோச்சியது வெ.இ. வலிமையான பந்துவீச்சை எதிர் கொண்டு அந்த போட்டியில் முதல் சதத்தைப் பூர்த்திச் செய்து 146 ரன்கள் விளாசினார் டிவில்லியர்ஸ். அந்த முதல் சதத்துக்குப் பிறகு அவர் வேற லெவல் ஆட்டக்காரர் ஆனது வரலாறு அறியும். கிரிக்கெட்டில் பலர் சாதனைகள் செய்வார்கள். ஆனால் சாதனைகள் படைப்பதில் சாதனை புரிவது ஒரு சிலர் தான். இவர் இரண்டாவது ரகம். 

ஒருநாள் போட்டியில் 31 பந்தில் சதமெடுக்கவும் தெரியும், அதே சமயம்  டெஸ்ட் போட்டியில் அணிக்குத் தேவைப்பட்டால் மேட்சை டிரா செய்ய 297 பந்துகளைச் சந்தித்து 43 ரன்களை எடுக்கவும் தெரியும். சமகாலத்தில் இப்படி இரண்டு எதிரெதிர் பாணி ஆட்டத்திலும் கில்லியாக இருக்கக்கூடிய ஒரே வீரர் டிவில்லியர்ஸ் மட்டும் தான்.

 டிவில்லியர்ஸுக்கு இன்னொரு பெருமை உண்டு. ஆசிய கண்டத்துக்கு அப்பால் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் இந்திய மண்ணில் விளையாடுவது என்றாலே `ஜெர்க்’ அடிப்பார்கள். குக், காலிஸ் என  விரல் விட்டு எண்ணக்கூடிய வீரர்கள்தான் இங்கே  சிறப்பாக  ஆடியிருக்கிறார்கள். தொடர்ந்து இந்திய மண்ணில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் ஏ.பி.டி. 

ஐ.பி.எல் தொடர் ஆடுவதற்கு முன்னரே டெஸ்ட் போட்டியில் அகமதாபாத்தில் இரட்டைச் சதம் அடித்துச் சரித்திரம் படைத்தவர். சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தபோது ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று சதங்கள் விளாசினார். சென்னை மண்ணில், கடும் வெக்கைக்கு இடையே ஒரு பக்கம் அணி சரிந்து கொண்டிருந்தபோது அபாரமாக ஆடி சதம் எடுத்த இன்னிங்ஸை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

டிவில்லியர்ஸ் - கிரிக்கெட்டின் ஏலியன்

டிவில்லியர்ஸை நன்றாக கவனித்தால் ஒரு விஷயம் புரியும். பெரும்பாலான போட்டிகளில் அவர் எடுத்தவுடன் பவுண்டரி, சிக்ஸரை விளாச முற்படமாட்டார். முதல் பத்து - பதினைந்து பந்துகளில்  தன்னை நிலைப்படுத்திக் கொள்வார். மைதானம் எந்த விதமான பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கிறது என கவனிப்பார். கணிப்பார். அதற்கேற்ப ஆட்டத்தின் பாணியை மாற்றிக் கொள்வார். நிலைமை சீராக இருக்கிறது, கியரை மாற்றலாம் என அவருக்குத் தோன்றிவிட்டால், தடாலடியாக நான்காவது, ஐந்தாவது கியரை போட்டு சிக்ஸர் மற்றும் பவுண்டரி மழையைப் பொழிவார். இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, அவரது கேரியருக்கும் பொருந்தும். ஆரம்ப காலங்களில் சுமாராக ஆடியவர் அதன் பின்னர் நடத்திய வேட்டை வெறித்தனம்.

இவர் இப்படித்தான் ஆடுவார் என கணிக்க முடியாது; இவர் இந்த திசையில் தான் பந்தை விளாசுவார் என ஃபீல்டிங் நிறுத்தவும் முடியாது; என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடியாது. இப்படி ரசிகர்ளுக்கும், கேப்டன்களுக்கும், ஃபீல்டர்களுக்கும், பவுலர்களுக்கும் புரியாத புதிராக விளங்குவார் டிவில்லியர்ஸ். ஆனால் நிமிடங்களில் முடிவுகளை, நிலைமைக்கேற்ப மாற்றி எடுக்கும் திறன் கொண்டவர்.

அவர் சார்ந்த அணி ஒரு இலக்கைத் துரத்துகிறது  என வைத்துக் கொள்வோம். இவர் களத்தில் நிற்கிறார் எனில் எதிரணியின் இதயத்துடிப்பு நார்மலாக இருக்காது. அந்த பயம்தான் ஏ.பி.டிவில்லியர்ஸ். பேட்டிங்கில் அவருக்கு `வீக் ஜோன்’ என்ற ஒன்று கிடையவே கிடையாது. டெஸ்ட், ஒருநாள் இரண்டிலும் ஐம்பது ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் முக்கியமான வீரர்; அதிவேக அரைசதம், அதிவேக சதம், அதிவேக 150 ரன்கள், அதி மெதுவான நாற்பது ரன்கள் என எத்தனையோ சாதனைகள் அவர் பக்கம் இருக்கின்றன . இன்னும் பல சாதனைகள் அவரால் உடைக்கப்படுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், சாதனைகள் பற்றிக் கேட்டால் மெல்ல சிரிக்கிறார்.  

“விளையாட்டில் ஒரு வீரனின் பங்கு என்பது அவன் சார்ந்த அணியை வெற்றி பெற வைக்க முயற்சிப்பதுதான். அதில் தனி நபர் சாதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. ஒருவேளை நான் ஓய்வு பெற்று வீட்டில் உட்காரும்போது, வயதான காலத்தில் இந்த சாதனைகளை நினைத்து நான் மட்டும் பெருமை பட்டுக்கொள்ளலாம், அதைத் தவிர வேற எதற்கும் சாதனைகள் உதவாது. உரிய நேரத்தில் அணிக்கு முப்பது ரன்கள் தேவைப்படும்போது அந்த ரன்களை அடித்து அணியை வெற்றிப் பெற வைத்தால் கிடைக்கும் மகிழ்ச்சி அளவில்லாதது. அதுதான் நான் விரும்புவது!" என பக்குவமாகச் சொல்கிறார்.

டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸின் எண்ணமெல்லாம் அவரது நாட்டுக்கு உலகக்கோப்பையை வாங்கித் தருவது தான். 2015 உலகக் கோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா தோற்றபோது இந்தியாவே அதிர்ச்சி அடைந்தது. டிவில்லியர்ஸ் கண்ணோரத்தில் கண்ணீர் துளிகள் துளிர்த்த போது, இங்கேயும் சிலர் கலங்கினார்கள். இந்தியாவுக்கு அடுத்தபடியாக டிவில்லியர்ஸ்காக தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என இந்தியர்கள் விரும்பினார்கள். அது அப்போது நடக்கவில்லை. 2019 உலகக்கோப்பையில் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பாப்போம். “என் கரியரை வெற்றியுடன் நிறைவு செய்ய விரும்புகிறேன்" எனச் சொல்லியிருக்கிறார் டிவில்லியர்ஸ். விராட் கோஹ்லியை கிரிக்கெட்டின் ரொனால்டோ எனச் சொன்னால் நாட்டுக்காக கோப்பையைத் தூக்க துடிக்கும் டிவில்லியர்ஸ் தான் கிரிக்கெட்டின் மெஸ்ஸி.

இன்றைய பிறந்தநாளில் அவர் கனவுகள் நிறைவேற வாழ்த்துகளை பகிர்வோம்.

- பு.விவேக் ஆனந்த் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்