‘எதிர்பாக்கலைல... திருப்பி அடிப்போம்னு எதிர்பாக்கலைல...!’ ஆஸ்திரேலியாவின் பதிலடி | Australia set to win first test match against india

வெளியிடப்பட்ட நேரம்: 20:12 (24/02/2017)

கடைசி தொடர்பு:20:16 (24/02/2017)

‘எதிர்பாக்கலைல... திருப்பி அடிப்போம்னு எதிர்பாக்கலைல...!’ ஆஸ்திரேலியாவின் பதிலடி

ஆஸ்திரேலியாவை இந்திய அணி ‘வாஷ் அவுட்’ ஆக்கும் என நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு முதல் டெஸ்டின் இரண்டாவது நாளிலேயே ஆப்பு வைத்திருக்கிறது ஆஸி. வெகு காலத்துக்குப் பிறகு சொந்த மண்ணிலேயே வெறும் 105 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி கதிகலங்கி நிற்கிறது இந்திய அணி. 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. நேற்றைய தினம் எடுத்த 256/9 என்ற ஸ்கோருடன்  இன்று ஆட்டத்தைத் துவங்கியது ஆஸ்திரேலியா. முதல் நாளுக்கும், இரண்டாவது நாளுக்கும் இடையே பிட்சில் பெரிய அளவில் மாற்றங்கள் தெரிந்தது. பந்துகள் நன்றாக திரும்ப ஆரம்பித்தன. இன்று அஷ்வின் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி அடித்ததோடு ஸ்டார்க் அவுட் ஆனார். இதையடுத்து 260 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் முடிந்தது. 

முரளி விஜய்யும், ராகுலும் இந்திய இன்னிங்ஸை தொடங்கினார்கள். ஸ்டார்க் முதல் ஓவரில் இருந்தே அச்சுறுத்தும் வகையில் வீசினார். காலையிலே ‘ரிவர்ஸ் ஸ்விங்’ நன்றாக எடுபட்டது. ஹாஸில்வுடின் அபாரமான ஸ்விங் பந்தில் முரளி விஜய் முதல் விக்கெட்டாக விழுந்தார். இதையடுத்து ஸ்டார்க் வீசிய தப்பிக்கவே முடியாத ஒரு பவுன்சரில் பரிதாபமாக விக்கெட்டை பறிகொடுத்தார் புஜாரா. ரசிகர்களின் கரகோஷங்களுக்கு நடுவே களமிறங்கினார் விராட் கோலி. தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே அவுட் ஆனார். ‘ஆஃப் ஸ்டம்ப்’-க்கு அப்பால் ஒரு பந்தை ஸ்டார்க் வீச, தேவையற்ற முறையில் ஷாட் ஆட ஆசைப்பட்டு விக்கெட்டை இழந்தார் கோலி. அவரின் விக்கெட்டை எடுத்ததும் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் ஆர்ப்பரித்தது. 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட்

இதன் பின்னர் ராகுலும், ரஹானேவும் இணைந்து சரிவை மீட்கப் போராடினார். ரஹானே ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சைச் சிறப்பாக சமாளித்தார். ராகுல் அநாயசமாக பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார். மெள்ளமெள்ள இந்திய அணி மீண்டு கொண்டிருந்த சூழ்நிலையில், ஸ்டீவ் ஓ கீஃப் ஒரு மாயாஜால ஓவரை வீசினார். 32 ஓவர் முடிவில் இந்திய அணி 94/3 என்ற நிலையில் இருந்தது. 33-வது ஓவரின் இரண்டாவது பந்தை தேவையே இன்றி ‘ஷாட்’ ஆட முயன்று ‘லாங் ஆன்’-ல் டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ராகுல். அப்போது அவரின் ஸ்கோர் 64. லோகேஷ் ராகுலின் பொறுப்பற்ற ஷாட்டுக்கு பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்தன 

அதே ஓவரின் இரண்டாவது பந்தில் ரஹானேவுக்கு ஒரு அற்புதமான பந்தை வீசினார் ஸ்டீவ். அதை ரஹானேவும் சிறப்பாகவே ஆடினார். எனினும் ஹேண்ட்ஸ்கோம் அட்டகாசமாக கேட்ச் பிடிக்க,  ரஹானே மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதே ஓவரில் ஆறாவது பந்தில் சாகாவும் அவுட் ஆனார். அதற்கடுத்த ஓவரை நாதன் லியான் வீசினார். இந்த ஓவரில் மூன்றாவது பந்தில் அஷ்வின் முட்டுக்கட்டை போட நினைத்த பந்து ஒன்று,  அவரின் ஷூவில் பட்டு எட்ஜ் ஆக, அதை ஹேண்ட்ஸ் கோம்  பாய்ந்து கேட்ச் பிடித்தார். 94/3 என்றிருந்த இந்திய அணியின் ஸ்கோர் 95/7 என்றானது.

ஜடேஜா, ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ் என யாரும் இந்திய அணியைக் காப்பாற்ற முன்வர வில்லை. இறுதியில் வெறும் 40 ஓவர்களில் 105 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது இந்திய அணி. கடைசி ஏழு விக்கெட்டுகளை வெறும் 11 ரன்களுக்கு இழந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்திய அணி தனது கடைசி ஏழு விக்கெட்டுகளை இவ்வளவு குறைவான ரன்களுக்கு இழப்பது இதுதான் முதன்முறை. பிட்ச் சுழற்பந்துக்கு சாதகமாக இருந்தது உண்மை தான் என்றாலும் நாக்பூர் பிட்ச் போல பந்துகள் மிக மோசமாக திரும்பவில்லை.  சரியான கால் நகர்த்தல்கள் இல்லாமல் விளையாடியதால் பெரும்பாலான விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. நாதன் லயான், ஓ கீஃப் இருவரும் தொடர்ந்து வெவ்வேறு கோணத்தில், வெவ்வேறு லெந்த்தில் வீசி கடும் சவால் அளித்தனர். வெகு காலத்துக்கு பிறகு மிகச்சிறந்த சுழற்பந்தை சமாளிக்க முடியாமல் திணறியது இந்திய அணி.

ராகுல் ரன்கள் குவித்தாலும் சில இடங்களில் தடுமாறவே செய்தார். இந்திய அணித் தரப்பில் ரஹானே 55 பந்துகள் சந்தித்து 13 ரன்கள் குவித்திருந்தார். ஆனால் அவர் மட்டுமே ஆஸ்திரேலியாவின் சுழற்பந்தை ஓரளவு நன்றாக சமாளித்தார். 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட்

155 ரன்கள் முன்னிலையுடன் கெத்தாக இன்னிங்ஸை தொடங்கியது ஆஸ்திரேலியா. முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசிவிட்டு அஷ்வின் பந்தில் அவுட் ஆனார் வார்னர். ஷான் மார்ஷ் இருபது பந்துகளைச் சந்தித்தும் ‘டக் அவுட்’ ஆனார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் மிகவும் பொறுமையாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனும், ஆஸ்திரலியாவின்  கேப்டனுமான ஸ்டீவன் ஸ்மித். அவருக்கு பக்கபலமாக ரென்ஷா ஆடினார். 

இருபது வயது இளைஞர் ரென்ஷா இப்போது தான் இந்திய மண்ணில் ஆடுகிறார். ஆனால் புனே மாதிரியான பிட்சில் ஒரு பேட்ஸ்மேன் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு உதாரணம் சொல்லும் அளவிற்கு மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 31 ரன் எடுத்திருந்த போது ஜெயந்த் யாதவ் பந்தில் வீழ்ந்தார். தற்போது மிச்செல் மார்ஷும், ஸ்மித்தும் களத்தில் இருக்கின்றனர். இரண்டாவது நாள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்திருக்கிறது ஆஸ்திரேலியா. ஒட்டுமொத்தமாக 298 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது ஆஸ்திரேலியா.

இந்திய மண்ணில் பொதுவாகவே நான்காவது இன்னிங்ஸ் ஆடுவது மிகவும் கடினம். இதுவரை 250 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கை மூன்று முறை மட்டுமே வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்டுள்ளது. 1987-88 சீசனில் டெல்லி டெஸ்டில்,  இந்திய அணி  நிர்ணயித்த 276 ரன்கள் எனும் இலக்கை  வெஸ்ட் இண்டீஸ் சேஸ் செய்தது. 1964/65 சீசனில் மும்பை டெஸ்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 256 ரன்களை சேஸ் செய்தது இந்திய அணி. கடத்த 2008 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 387 ரன்களை ஷேவாக்கின் அதிரடி மற்றும் சச்சினின் பொறுப்பான சதத்தால் இந்தியா சேஸ் செய்தது. இது நடந்த சென்னை மண்ணில்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட்

சென்னை சேப்பாக்கம் மைதானம் அப்போது பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்தது. தற்போதைய புனே பிட்ச் சென்னை பிட்ச் போல இல்லை .இங்கே ரன்கள் விளாசுவது கடினமாக இருக்கிறது. அதுவும் துல்லியமான பந்துவீச்சாளர்கள், துடிப்பான ஃபீல்டர்கள் என அசத்திக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா. பொதுவாக இது போன்ற பிட்சில் 200 ரன்களை சேஸ் செய்வதற்கே மிகவும் கஷ்டப்பட வேண்டியதிருக்கும். ஆஸி அணி,  நாளை மிகச்சிறப்பாக விளையாடி 400 ரன்கள் என்ற இலக்கை,  நிர்ணயித்தால் இந்தியாவின் நிலைமை மோசமாகிவிடும்.

இதுவரை எதிரணி முதல் இன்னிங்ஸில் நூறு ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்ற டெஸ்ட் போட்டிகளில், இரண்டு முறை மட்டுமே இந்தியா மீண்டு வந்து வெற்றி பெற்றிருக்கிறது. 2001 கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் 274 ரன்கள் பின்தங்கியிருந்தும் மீண்டு வந்து அசாத்தியமான ஒரு இன்னிங்ஸ் ஆடி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மாபெரும் வெற்றியை பெற்றது.  இந்த டெஸ்டிலும் அப்படி எந்த பேட்ஸ்மேனாவது மேஜிக் இன்னிங்ஸ் ஆடினால் மட்டுமே வெற்றியைப் பற்றி யோசிக்க முடியும். இல்லையெனில், சுமார் 200 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் படு தோல்வியைத் தழுவ நேரிடும். கடந்த 12 ஆண்டுகளாக இந்திய மண்ணில்  ஒரு டெஸ்ட் போட்டியை கூட ஜெயிக்காத ஆஸ்திரேலியா முதல் வெற்றியை நெருங்கியிருக்கிறது. சிந்தாமல் சிதறாமல் வெற்றியைச்  சுவைக்க வேண்டியது இப்போது ஆஸ்திரேலியாவின் கையில்தான் இருக்கிறது.

கோலி டக் அவுட் முதல் ஓ கீஃப் விக்கெட் வேட்டை வரை... 10 படங்களில் மேட்ச் ரிப்போர்ட்டைக் காண

- பு.விவேக் ஆனந்த் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close