Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 குழந்தைகளின் தாய், ‘நாக் - அவுட்’ நாயகி... சாதனை மனுஷி மேரி கோம்! #HBDMarykom

‘வாழ்க்கை எப்போதும் அழுத்தம் நிறைந்தது. அதை எப்படிக் கையாள்வது என்பதை அவரவர்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.” - இந்த பொன்னான வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் ஒரு தத்துவஞானியல்ல, குத்துச்சண்டை விளையாட்டின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்திருக்கும் வீராங்கனை மேரி கோம் சொன்னது . போர் மேகச்சூழலுக்கு நடுவே பூத்த பூவாக, மணிப்பூர் மண்ணிலிருந்து வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டங்களைச் சந்தித்து, லைம் லைட்டில் பிரகாசிக்கும் மேரி கோம் பிறந்தநாள் இன்று. 

மேரி கோம் - குத்துச்சண்டை வீராங்கனை

இந்தியாவின் மிகச்சிறந்த பாக்ஸர்களில் மேரி கோமுக்கு என்றுமே தனி இடம் உண்டு. 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் கனக்கச்சிதமாக நடந்துகொண்டிருந்த நேரம். நாடே எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருந்தது. காரணம், மேரி கோம். அந்த வருடம் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறுவதற்காக இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு குத்துச்சண்டை வீராங்கனை அவர்மட்டும்தான். விளையாட்டுலக ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கொஞ்சம்கூட வீணடிக்காமல், ஃப்ளைவெயிட் என்னும் பெண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்றார் மேரி. 

இச்சாதனைக்குச் சொந்தக்காரியான மேரி, விளையாட்டுக்குத் துணை நிற்கும் அளவுக்கு வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஏழ்மையான விவசாயக்கூலி குடும்பம்தான் மேரியுடையது. பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் சுதந்திரம் மட்டும் மேரிக்குக் கிடைத்திருந்தது. அதே பள்ளிதான் அவருக்கு விளையாட்டின் மீதான ஆர்வத்தையும், குறிப்பாக குத்துச்சண்டையின் மீதான நேசத்தையும் வளர்த்த பெருமைக்குரியது. மேரி கோம் ரத்தத்தில் இயல்பிலேயே ஸ்போர்ட்ஸ் கலந்திருந்தது. ஈட்டி எறிதல், 400 மீ. ஓட்டத்தில் கில்லி. அந்த சமயத்தில் 1998 ஏசியன் கேம்ஸில் மணிப்பூரைச் சேர்ந்த டிங்கோ சிங் தங்கம் வென்று திரும்ப, ‛நானும் ஒருநாள் குத்துச்சண்டையில் தங்கம் வெல்வேன்’ - சபதம் எடுத்தார் மேரி கோம். அதன்பின், தன் கவனத்தை வேறு எதிலும் சிதற விடாமல் பாக்ஸிங் பக்கம் திருப்பினார்.

துன்பம், துயரம், வறுமை என வாழ்க்கையில் பல்வேறு போராட்டக்களங்களைச் சந்தித்து மீண்ட மேரி கோமுக்கு, குத்துச்சண்டைக்களம் அவ்வளவு கடினமானதாகத் தெரியவில்லை. அதுதான், அந்த இரும்பு மனுஷியை 2001-ல் இருந்து 2014 வரை தொடர்ச்சியாக வெற்றிகளையும், பதக்கங்களையும் குவிக்க வைத்தது. 2000-த்தில் குத்துச்சண்டைதான் தன்னுடைய வருங்காலம் என்று தெளிவாக முடிவெடுத்தார் மேரி கோம்.

அதற்கடுத்த வருடமான 2001-ல், பென்சுல்வேனியாவில் நடைபெற்ற உலகளவிலான பெண்கள் குத்துச்சண்டைப் போட்டியில் கலந்து கொண்ட மேரிகோம், சிறுத்தையாய் சீறிப் பாய்ந்து குத்துச்சண்டைக் களத்தில் சக வீராங்கனையை வீழ்த்த முயன்ற நேரத்தில், முதல் அனுபவம் என்பதால் இரண்டாவது இடத்தையே பிடிக்கிறார். ஆனால், அதற்கு பதிலடியாக 2002, 2005, 2006, 2008, 2010 என 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் (World Amateur Boxing champion) தொடரில் தங்கம் வென்று, தன்னை நிரூப்பித்தார் மேரி. ஆம், ஐந்து முறை உலக சாம்பியன். கூடவே, பங்கேற்ற ஆறு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பதக்கம் வென்றவர் என்ற பெருமை. வேறு எந்தப் பெண் பாக்ஸருக்கும் கிடைக்காத பெருமை. ஆக, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முன்பே, குத்துச்சண்டை உலகில் தனி முத்திரை பதித்துவிட்டார். ஆனால், லைம் லைட்டுக்கு வர ஒலிம்பிக் பதக்கம் தேவைப்பட்டது.

  ‘தங்கத்தை விலை கொடுத்து வாங்காதீர்கள்... அதை உங்கள் உழைப்பின் சம்பளமாக வென்றிடுங்கள்’ என்பது அந்தத் தங்க மங்கையின் தாரக மந்திரம்.

மேரி மணம்புரிந்துகொண்டது, அவருடைய மனத்தைப் புரிந்துகொண்ட கருங் ஆன்லர் என்னும் கால்பந்து வீரரை. இருவருக்கும் இரட்டைக் குழந்தைகளான ரச்சுங்வர், குப்னிவர் மற்றும் ப்ரின்ஸ் என மூன்று ஆண் குழந்தைகள். திருமணத்துக்குப் பிறகு குத்துச்சண்டைக்கு சிறிது இடைவெளி விட்டிருந்த மேரி,  இரட்டை மகன்கள் கைக்குழந்தையாக இருக்கும்போதே மீண்டும் பாக்ஸிங் ரிங்கில் குதித்தார். தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்தார். குழந்தைகளுடனேயே பயணித்து, 2008-ல் சீனாவில் நடந்த உலகளவிலான பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் முதலிடத்தைப் பிடித்தார். பத்மஸ்ரீ, அர்ஜுனா, கேல் ரத்னா என இவருடைய அலமாரியில் ஏகப்பட்ட விருதுகள். ராஜ்யசபா எம்.பி பதவியும் அவரைத் தேடி வந்தது. 

“ஒவ்வொரு முறையும் நான் பெற்ற விருதுகளையும், பதக்கங்களையும், மாபெரும் மனிதர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பார்க்கும்போது இது நானா என்ற சந்தேகம் எனக்குள் எழும். ஆனால், இது போதாது என்பதால்தான் இப்படித் தோன்றுகிறது என்று மீண்டும் உத்வேகத்துடன் குத்துச்சண்டைக்குக் கிளம்பிவிடுவேன்” ஒருமுறை மேரிகோம் உதிர்த்த வார்த்தைகள் இவை. 

பாலிவுட்டில் 2014ம் ஆண்டில் மேரி கோமின் வாழ்க்கை, ப்ரியங்கா சோப்ராவின் நடிப்பில் பயோகிராபியாக வெளிவந்தது. 2013ம் ஆண்டில் வெளிவந்த மேரிகோமின் ஆட்டோபயோகிராபி புத்தகத்தின் பெயர் ‘அன்ப்ரேக்கபிள்’. இன்றுவரை ஒரு வீராங்கனையாக மேரிகோமின் சாதனைகளும் அன்ப்ரேக்கபிள்தான்.

ஹாப்பி பர்த்டே பாக்ஸிங் குயின்!

- பா.விஜயலட்சுமி 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement