வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (01/03/2017)

கடைசி தொடர்பு:17:26 (01/03/2017)

இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்ஷர்ஷிப்... ஸ்டார் இந்தியா விலகியது ஏன்?

இன்றும் கூட நம்மில் பல பேருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி என்றால் சஹாரா லோகோவுடன் இருக்கும் ப்ளூ கலர் ஜெர்ஸிதான்  நினைவுக்கு வரும். இந்திய அணியின் அந்த ஜெர்ஸிகளை அதுவும் குறிப்பாக 10-ம் நம்பர் பொறிக்கப்பட்ட சச்சின் ஜெர்ஸியை அணிந்து பலரும் கெத்தாக சுற்றியிருப்போம்.

ஜெர்ஸி ஸ்பான்ஷர்ஷிப்... ஸ்டார் இந்தியா விலகல்

ஆனால் சஹாராவுக்குப் பின் டிசம்பர் 2013-ல் இருந்து இந்திய அணியின் ஸ்பான்சராக மாறியது ஸ்டார் இந்தியா நிறுவனம். ஆண்கள் சீனியர் அணி மட்டுமல்லாது, ஜுனியர் அணிகளுக்கும் பெண்கள் அணிக்கும் ஸ்டார் இந்தியாதான் ஜெர்ஸி ஸ்பான்சர். 

‘ஸ்டார் இந்தியா’-வின் லோகோ பொறிக்கப்பட்ட முதல் ஜெர்ஸியை இந்திய அணி, கடந்த 2014-ல் நியூஸிலாந்து தொடரின்போது அணிந்தது. ஒவ்வொரு பெரிய தொடர்களின்போதும் ஜெர்ஸியை, லோகோவை கலர்ஃபுல்லாக மாற்றுவதில் தீவிர முனைப்பு காட்டியது ஸ்டார் இந்தியா. கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின்போது இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தாயார் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்ஸியை அணிந்து விளையாடினர். இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. இப்படி ஜெர்ஸி விஷயத்தில் பல புதுமைகளைப் புகுத்திய இந்த ஸ்டார் இந்தியா, இந்திய கிரிக்கெட் அணியுடனான உறவை வெகு விரைவில் முடித்துக் கொண்டது. ஆம், பி.சி.சி.ஐ உடனான ஸ்டார் இந்தியாவின் ஜெர்ஸி ஸ்பான்ஷர் ஒப்பந்தம், இந்த மார்ச் மாதத்துடன் முடிகிறது. அதாவது ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன்...

எப்போதும் நூற்றுக்கணக்கான கோடிகளில் ஏலம் போகும் இந்த ஸ்பான்சர்ஷிப் ஜூனியர், சீனியர், பெண்கள் என மூன்று கிரிக்கெட் அணிகளுக்கும் சேர்த்ததுதான். தங்களது ஒப்பந்தம் முடியவுள்ள இந்நிலையில் ‘மீண்டும் ஸ்டார் இந்தியா ஏலத்தில் பங்குபெறாது’ என அறிவித்துள்ளது அந்த நிறுவனம். அந்நிறுவனத்தின் சி.இ. ஓ உதய் சங்கர் ‘‘இந்திய அணியின் ஜெர்ஸியில் எங்கள் பெயர் இருந்ததை எண்ணிப் பெருமைப்படுகிறோம். ஆனால் இப்போது இருக்கும் நிச்சயமற்ற சூழலில் நாங்கள் ஏலத்தில் பங்குபெறவிரும்பவில்லை. மேலும் பி.சி.சி.ஐ-யின் கோரிக்கைகள் தெளிவற்றதாகவும் குழப்பமாகவும் உள்ளன.’’ என குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்பான்சர் விஷயங்களில் பி.சி.சி.ஐ நிலைப்பாடும்,  ஐ.சி.சி நிலைப்பாடும் தெளிவற்றதாகவும், முரண்பாடாகவும் உள்ளதாலேயே, ஸ்டார் நிறுவனம் இதில் இருந்து பின்வாங்கியதாக சொல்லப்படுகிறது. மேலும், ‘இந்திய அணியின் எதிர்கால அட்டவணைகள் சரியாக முடிவு செய்யப்படவில்லை. ஐ.சி.சி அட்டவணை முறைகளில் குழப்பம் இருக்கிறது’ என்றும் அவர் தெரிவித்திருந்தார் .எனவே இந்த நிச்சயமற்ற சூழலில் மிகப்பெரிய தொகையை இதில் முதலீடு செய்ய ஸ்டார் இந்தியா தயங்குகிறது. விரைவில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவுள்ள நிலையில் ஸ்டார் இந்தியாவின் இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் பி.சி.சி.ஐ நிர்வாகத்தில் உச்ச நீதிமன்றம் அடுத்தடுத்து உத்தரவுகள் பிறப்பித்து வருவதால், மற்ற நிறுவனங்கள் ஸ்பான்ஷர் விஷயத்தில் ரொம்பவே யோசிக்கின்றன. 

எது எப்படி இருந்தாலும், இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாகவே மாறிவிட்டதால், இந்த முறையும் ஏதாவது ஒரு நிறுவனம் இந்த ஸ்பான்சர்ஷிப்பை பெரும்தொகையில் ஏலத்தில் எடுக்கப்படத்தான் போகிறது. இம்முறை இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் ரீசார்ஜ் நிறுவனமான Paytm அல்லது சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ போன்ற முன்னணி நிறுவனங்களுக்குள் பெரும் போட்டியிருக்க வாய்ப்பிருக்கிறது.

 

-ம.காசி விஸ்வநாதன்
(மாணவ பத்திரிகையாளர்).
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்