வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (03/03/2017)

கடைசி தொடர்பு:13:55 (03/03/2017)

‘சச்சின், சச்சின்... இப்போதும் கேட்கிறது’ என்ன தவம் செய்தேனோ!’ - நெகிழும் டெண்டுல்கர்

‘வேட்டையாடு விளையாடு' படத்தில் ஒரு காட்சி. கமலிடம், ‘அவங்க இல்லாத வாழ்க்கை எப்படியிருக்கிறது?' என ஜோதிகா கேட்பார். கமல், கண்ணை மூடிக்கொள்வார். நினைவுகள் சுழலும். ஓய்வுக்குப் பின் சச்சின் எதிர்கொள்ளும் ஒவ்வொரு கேள்வியிலும், அவர் நினைவில் நிழலாடுகிறது, கிரிக்கெட்.

ஓய்வுக்கு பிறகு சச்சின் வாழ்க்கை

புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை, ஓய்வுக்குப் பிறகு என்னசெய்வது என்பதே. சச்சின் போன்ற சாதனை வீரர்களின் நிலையோ இன்னும் பரிதாபம். எவ்வளவு பெரிய விளையாட்டு வீரராக இருந்தாலும், காலம் ஒருநாள் அவர்களை ஓய்வை நோக்கித் தள்ளிவிடும். 

சச்சின் ஓய்வுபெற்ற தினத்தில், அவர் மனைவி அஞ்சலி இப்படிச் சொன்னார்... ‘சச்சின் இல்லாத கிரிக்கெட்டை என்னால் நினைத்துப் பார்க்க முடியும். கிரிக்கெட் இல்லாத சச்சினை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது.’ அதானே... கிரிக்கெட் இல்லாத சச்சின் எப்படி இருக்கிறார்? 

சச்சின் ஓய்வுபெறும்போது, அவர் வயது 38. கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கிரிக்கெட் மைதானத்திலேயே கிடந்தவர். ‘இனிமேல் கிரிக்கெட்டே  விளையாடப் போவதில்லை' என்ற நினைப்பே அவரை என்னவோ செய்திருக்கும்தானே! கிரிக்கெட் இல்லாத அந்த வாழ்க்கையையும் அவர் எதிர்கொண்டுதானே ஆக வேண்டும். இதோ ஓய்வுக்குப் பின் கிரிக்கெட் இல்லாத தன் வாழ்க்கை எப்படி இருக்கிறது என, சச்சின் தெரிவித்துள்ளார். LinkedIn-ல் Influencer என்ற பெயரில் இணைந்துள்ள சச்சின், 'My Second Innings' என்ற தலைப்பில் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதன் விவரம். 

‘ஒரு விளையாட்டு வீரர் ஓய்வு பெற்ற பின் செய்ய நிறைய விஷயங்கள் இருக்கின்றன. வெற்றிகள், தோல்விகள், கொண்டாட்டங்கள், அழுகை, மெளனம், சவால் என பல ஆண்டுகள் கடந்துவிட்டன. என் முதல் இன்னிங்ஸ் இப்படி முடிந்துவிட்டது. 2011-ல் இந்தியா உலகக் கோப்பை வென்றபின், என் கனவு நனவாகிவிட்டது. என் முதல் இன்னிங்ஸ் கனவுகளைத் துரத்துவதில் கழிந்துவிட்டது எனில், இரண்டாவது இன்னிங்ஸ் திருப்தியாக உள்ளது. எனக்கு எல்லாமுமாக இருந்த விளையாட்டுக்கும், இந்த சமூகத்துக்கும் என்னால் முடிந்த அளவு திருப்பிக்கொடுக்கும் நேரம் இது. அதனால்தான், கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களைவைத்து, அமெரிக்காவில் ஒரு தொடருக்கு ஏற்பாடு செய்தோம்’ என குறிப்பிட்டுள்ளார். 

சச்சின்

ஓய்வு முடிவு குறித்து எழுதுகையில், ‘பொதுவாக, என் காலைப் பொழுது ஜிம்மில்தான் இருக்கும். 24 ஆண்டுகளாக இதைத் தொடர்ந்து வந்தேன். ஆனால், டெல்லியில் 2013-ல் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடந்த சமயம், திடீரென ஒருநாள் காலை, எழுந்து பயிற்சி செய்வது சிரமமாக இருப்பதாக உணர்ந்தேன். ஒரு சிறு தயக்கம். இதுதான் ஓய்வுக்கான அறிகுறியா? பொறி தட்டியது. 

சுனில் கவாஸ்கர் என் பால்ய கால ஹீரோ. ஓய்வு குறித்த சிந்தனை தனக்கு வந்த விதத்தை ஒருமுறை என்னிடம் இவ்வாறு பகிர்ந்து கொண்டார். ‘மைதானத்தில் இருக்கும்போது லஞ்ச், டீ டைமுக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என வாட்ச்சை பார்க்க ஆரம்பித்து விட்டோமோ... அப்போதே நம்  உடல்நிலை ஓய்வுக்குத் தயாராகிவிட்டது என்று அர்த்தம்’ என்றார். இது என் நினைவுக்கு வந்தது. நானும் ஓய்வு குறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டேன்’’ என சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

சச்சினைப் பொறுத்தவரை ஓய்வுக்குப் பிறகு முடங்கிவிடவில்லை. எம்பி-யாக மக்கள் பணியாற்றுகிறார். ஆந்திராவில் புட்டம்ராஜு கண்டிகா என்ற கிராமத்தைத் தத்தெடுத்துள்ளார்.  வீடுகள், பள்ளிகள் கட்டிக்கொடுத்து, கல்வி வசதியை ஏற்படுத்தியிருக்கிறார். கிராமத்துக்கு வந்து குழந்தைகளுடன் உரையாடுகிறார். ஐஎஸ்எல் தொடரில், 'கேரளா பிளாஸ்டர்ஸ்' அணியை வாங்கி, கால்பந்து வளர்ச்சியில் பங்குவகிக்கிறார்.

‘‘ஓய்வுக்குப் பின் என்னால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க முடிகிறது. எனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்கிறேன். பல இடங்களுக்குப் பயணிக்கிறேன். ஆனால், ஒன்று மட்டும் மாறவில்லை. கிரிக்கெட் வீராராக இருந்தபோது, என்னைக் கண்டதும் 'சச்சின் சச்சின்' எனக் கூச்சலிடுவார்கள். அதே குரல், இப்போதும் எழுகிறது. அதற்கு நான் என்ன தவம் செய்தேனோ?'' என சச்சின் நெகிழ்ந்துள்ளார்.

-எம்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்