Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரிக்கெட் மேகங்கள் சூழ் லாகூர்... ரன் மழையை எதிர்பார்த்து ரசிகர்கள்!

புதுப்பிக்கப்பட்ட லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தின் மொத்த இருக்கைகள் 27,000. இங்கிருக்கும்  ஒரு இடத்தைப் பிடிக்க மைதானத்துக்கு வெளியே கடந்த மூன்று நாள்களாக முண்டியடிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் மேல். காரணம் கிரிக்கெட். ஆம், இந்த மைதானத்தில்தான் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) டி-20 ஃபைனல் நடக்க உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி மீது 2009-ல் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின், வேறு எந்த அணியும் பாகிஸ்தானில் விளையாட முன்வரவில்லை. ‘வர்றது வரட்டும்...’ என, ஜிம்பாப்வே அணி துணிந்து 2015-ல், பாகிஸ்தானுக்கு ‘ட்ரிப்’ அடித்தது. உயிரைப் பணயம் வைத்து அங்கு விளையாடியதற்காகவே, ஜிம்பாப்வே வீரர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்தது அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம். அதுதவிர்த்து, இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தானில் வேறு எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. ஏன்... பாகிஸ்தான் அணி விளையாடும் சர்வதேசப் போட்டிகளே ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில்தான் நடக்கின்றன.

ஐ.பி.எல் பாணியில் நடத்தப்படும்,  PSL தொடரின் லீக் போட்டிகள் ஷார்ஜா, துபாய் மைதானங்களில்தான் நடந்தன. ஐந்து அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் 20 லீக் போட்டிகள் முடிந்து, தற்போது League இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஏற்கெனவே ஃபைனலுக்கு தகுதிபெற்று விட்டது. கராச்சி கிங்ஸ், பெஷாவர் ஜல்மி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் வெல்லும் அணி ஃபைனலில் குவெட்டாவை சந்திக்கும். இதுவரை இந்த League எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை. முதன்முறையாக பி.எஸ்.எல் தொடர், சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. காரணம், அனல் பறக்கும் ஃபைனல் அல்ல. மைதானம். அந்த மைதானம் அமைந்திருப்பது லாகூரில்...

பாகிஸ்தான் கிரிக்கெட்

இதிலென்ன ஆச்சர்யம்? கேள்வி எழுகிறதா... லாகூரில் கடந்த மாதம், நர்ஸ்கள் போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்கு வந்த போலீஸாரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானது 13 அப்பாவிகள். லாகூர் மட்டுமல்ல, கராச்சியில் பத்திரிகையாளர்கள் மீது, சிந்துவில் சுஃபி இனத்தவரின் வழிபாட்டுத் தலம் மீது (80 பேர் பலி) என கடந்த இரண்டு மாதங்களில் பாகிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள். குவெட்டா, தெற்கு வஜிரிஸ்தான் பகுதியில் குண்டுவெடிக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.

இப்படி எங்கு பார்த்தாலும், பாகிஸ்தானில் பயங்கரவாத மேகங்கள் சூழ்ந்திருக்க, லாகூரில் பி.எஸ்.எல் ஃபைனலை நடத்தியே தீர்வோம் என அடம்பிடிக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. லாகூர் ஸ்டேடியத்துக்கு வெளியே டிக்கெட் வாங்கத் திரண்டிருப்பவர்களை ஒழுங்குபடுத்தும் போலீஸார் ஏ.கே-47 துப்பாக்கிகளை ஏந்தி இருக்கின்றனர். ஆனால், ‘இங்கு சர்வதேச வீரர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. பாகிஸ்தான், இன்டர்நேஷனல் மேட்ச் நடத்த ஏற்ற இடம்’ என்பதை நிரூபிக்க பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜம் சேதி. கூடவே, இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய சேர்மன் கில்ஸ் கிளார்க்கை அழைத்துவந்து, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யச் சொல்கிறார். 

பாகிஸ்தான் கிரிக்கெட்

இது ஒருபுறம் நடக்க, பி.எஸ்.எல். தொடரில் ஃபைனலுக்கு முன்னேறியுள்ள குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த, இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், தென் ஆப்ரிக்காவின் ரிலி ரூசெள, லூக் ரைட், டைமல் மில்ஸ் உள்ளிட்டவர்கள், துபாயில் இருந்து நேரடியாக தங்கள் நாடுகளுக்கு ஃப்ளைட் ஏறி விட்டனர். ஃபைனலைப் புறக்கணித்ததற்கு அவர்கள் சொன்ன காரணம், ‘பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல...’  அதோடு, மொத்தம் இந்த லீக்கில் பங்கேற்றுள்ள 60 வெளிநாட்டு வீரர்களில் இன்னும் சிலர், இந்த ஃபைனலில் இருந்து விலகலாம் என்றும் தெரிகிறது. 

ஆனாலும், கடாஃபி மைதானத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு 7,000 பாதுகாப்புப் படையினரை நிறுத்தியுள்ளது மாகாண அரசு. பிரதமரும், ராணுவத் தலைமை அதிகாரியும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். மைதானத்தை முற்றுகையிடும் சாலைகள் போலீஸார் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது; டிக்கெட் வாங்க ஒருபுறம் கூட்டம் அலைமோதுகிறது; துப்பாக்கி ஏந்திய போலீஸ் அவர்களைக் கட்டுப்படுத்த முனைகிறது; டிக்கெட் வாங்கியவர்கள் மூன்று மணி நேரத்துக்கு முன்பே ஸ்டேடியம் வந்து விட வேண்டும் என உத்தரவு பறக்கிறது; சோசியல் மீடியாவில் இந்த மேட்ச் குறித்து விளம்பரங்கள் பரவுகிறது. இப்படி லாகூரைச் சுற்றிலும் கிரிக்கெட் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

- தா.ரமேஷ் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement