கோலி & கோ தப்பிக்குமா... சரணடையுமா? #MatchAnalysis #INDVSAUS | Can India win Bangalore test?

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (07/03/2017)

கடைசி தொடர்பு:14:50 (07/03/2017)

கோலி & கோ தப்பிக்குமா... சரணடையுமா? #MatchAnalysis #INDVSAUS

செம த்ரில்லாக நடந்து கொண்டிருக்கிறது இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பெங்களூரு டெஸ்ட் போட்டி. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு, இந்தப் போட்டியை ஜெயித்து, இந்திய மண்ணில் கெத்தாக தலைநிமிர்வதற்கு  தேவைப்படும் மேஜிக் எண் 188. அதே சமயம், உலகின் நம்பர் 1 அணி எனும் பெருமையுடன் வளைய வந்துகொண்டிருக்கும் இந்திய அணியானது தொடர் தோல்வியை நிச்சயம் விரும்பாது. குறிப்பாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி  தோல்வி என்ற வார்த்தையை அறவே வெறுக்கக் கூடியவர். ஆக, இந்த போட்டியில் விடாகண்டன் கொடாகண்டனாக இரண்டு அணிகளும் நான்காவது இன்னிங்ஸில் மல்லுக்கட்டுவார்கள். மல்லுக்கட்டியே ஆக வேண்டும். 

ஸ்மித் - கோலி மோதல்

188 ரன்களை தற்போதைய பெங்களூரு பிட்சில் சேஸிங் செய்வது எந்தவொரு கடினமான காரியம்தான். பந்துகள் திடீரென எழும்புகின்றன, திடீரென தாழ்வாக செல்கின்றன, திடீரென திரும்புகின்றன. கொஞ்சம் அவசர கதியில் ஆடினாலோ, சிறு தவறை செய்தாலோ பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகி பெவிலியன் திரும்பி செல்ல வேண்டியதுதான். வார்னர், ரென்ஷா, ஸ்மித், ஷான் மார்ஷ் என முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தியாயியிற்று. ஆஸ்திரேலியா இன்னும் 87 ரன்கள் அடிக்க வேண்டும். இப்போது இரண்டு அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. பிட்சின் நிலைமையை கணக்கில் கொண்டால் இந்தியா 70-75% வெற்றி வாய்ப்புடன் முன்னிலையில் இருக்கிறது. இந்த போட்டியின் வெற்றி தோல்விகள் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த தொடரில் இதுவரையில் இந்திய அணியின் பெர்பார்மென்ஸ், உலகின் நம்பர் ஒன் என்ற அந்தஸ்துக்கு நியாயம் சேர்க்கிறதா என்ற கேள்வியை எழுப்பிப் பார்த்தால், இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. சற்று விரிவாகவே பார்ப்போம்.

2014 இறுதியில் துவங்கி 2015 ஜனவரியில் முடிந்த ஆஸ்திரேலிய தொடர், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அப்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அந்த தொடரில்தான் முதன்முறையாக கோலி இந்திய அணிக்கு கேப்டன் பதவியை ஏற்றார்; அந்த தொடரில்தான் இந்திய அணியின் ஆகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்; அதே தொடரில்தான் கே.எல் ராகுல், தான் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து அமர்க்களப்படுத்தினார்; ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு அயல்நாட்டு வீரர் ஒரே தொடரில் நான்கு சதம் அடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடந்ததும் அந்த தொடரில்தான். அந்த சாதனையைச் செய்தவர் விராட் கோலி. தற்போது டெஸ்ட் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக விளங்கும் ஸ்டீவன் ஸ்மித், மாணிக்கத்தில் இருந்து பாட்ஷாவாக மாறிய செமத்தியான டிரான்ஸ்ஃபர்மேஷன் நடந்ததும் இதே தொடரில்தான்.  

சமீபத்தில் இங்கிலாந்து, இந்தியாவுக்கு வந்து நன்றாகவே ஆடியது. நல்ல ரன்கள் குவித்தது. ஆனால் பவுலிங்கில் பெரும் சொதப்பல். விளைவு 0-4 என மோசமான தோல்வியைச் சந்தித்து சொந்த ஊருக்கு திரும்பியது. இங்கே இங்கிலாந்துக்கு நடந்ததுதான் அப்போது இந்தியாவுக்கும் நடந்தது. ஒரே ஒரு ஆறுதல் என்னவெனில் அப்போது இந்தியா வாஷ் அவுட் ஆக வில்லை. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றாலும், அடுத்த இரண்டு போட்டியையும் போராடி டிரா செய்தது. அந்த  தொடருக்கு பின்னதாக இந்தியா வேற லெவல் பாய்ச்சலுக்கு சென்றது எல்லோருக்கும் தெரிந்த கதை. 

இலங்கை, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளை கதறடித்து  இங்கே இந்தியா டெஸ்ட் அரங்கில் ஏற்றம் காண ஆரம்பித்த சமயத்தில், அங்கே ஆஸ்திரேலிய அணி இறங்குமுகத்தை சந்திக்க ஆரம்பித்தது. சொந்த மண்ணில் நியூசிலாந்திடம்  வெற்றிக்காக கடுமையாக போராடியது; ஹோம் சீரிஸில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் வாஷ் அவுட் ஆனது; உலகக் கோப்பை டி20 தொடரில் அரையிறுதிக்கு கூட தகுதி பெறவில்லை; ஒருநாள் தொடரில் தென் ஆப்ரிக்காவிடம் 0-5 என வாஷ்அவுட் ஆனது; இலங்கை மண்ணில் படுமோசமாக தோல்வி அடைந்தது; தென் ஆப்ரிக்காவிடம் சொந்த மண்ணில் தொடரை இழந்தது; நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை இழந்தது; இலங்கையிடம் கூட டி-20 தொடரை பறிகொடுத்தது. கிரிக்கெட்டை பற்றி பேச்சு வரும் சமயங்களில் எல்லாம்,  இந்திய அணியை எல்லோரும் அளவுக்கு மீறி புகழ ஆரம்பித்திருந்த காலகட்டத்தில், 'இந்த ஆஸ்திரேலிய அணிக்கு என்ன தான் ஆச்சு' என்ற கேள்வியை எழுப்பாமல் யாரும் எழுந்து சென்றதில்லை. அப்படியொரு பரிதாப நிலையில் இருந்தது ஆஸி.

இந்தியா - கேப்டன் விராட் கோலி

இப்போ பூமராங்? 

ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த தொடருக்கு பின்னர் (2015 -2017) இந்த இரண்டு ஆண்டுகளில் நடந்தது எல்லாமே, இப்போது இந்திய மண்ணில் நடந்து கொண்டிருக்கும், ஆஸ்திரேலிய தொடருக்குப் பின் தலைகீழாக மாறுமா என்பது எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கேள்வி. இதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா இழந்திருக்கிறது, இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  இந்திய அணிக்கு வெற்றி என்பது அவ்வளவு எளிதான காரியமொன்றும் கிடையாது. இந்த தொடருக்கு பிறகு இந்தியா அடுத்ததாக இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இது இந்திய அணிக்கும், கோலிக்கும் கடும் சவாலான காலகட்டம். இதுவரை பிடரி மயிர் தெறிக்க ஓடிவந்த இந்திய அணி, இனியாவது அங்கே பதிலடி தருமா என ஆசையோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். 

ஆனால் வரலாறு என்ன சொல்கிறது? உள்ளூரில் உறுமுவதும், அயல்மண்ணில் பதுங்குவதுமே இந்தியாவின் பாணி. உள்ளூரில் தொடர்ந்து ஜெயிப்பதும், பிற்பாடு தொடர்ந்து வெளியூரில் தோற்பதும் தொடர்வது நம்பர் ஒன் என பெருமை பொங்க சொல்லிக்கொள்ளும் அணிக்கு நல்லதல்ல. ஆனால், உள்ளூரிலேயே மோசமான தோல்வியைச் சந்தித்தால், மீண்டெழுந்து அயல் மண்ணில் அசத்துவது பெரும் சிரமம். எதிராளிகள் கடும் சவால் தந்தால் மட்டுமே ஒருவனின்  முழு திறமையையுயும் வெளிப்படும். நீண்ட கால தயாரிப்புகளோடு, பெருந்திட்டத்துடன் களமிறங்கி கச்சிதமாக காரியத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா. திறமைக்கு தீனி போடும் சரியான எதிராளி இங்கே இருக்கிறார். இப்போது வித்தியாசமாக யோசிக்க வேண்டும்; வியூகங்களை மாற்ற வேண்டும்; புதுமையான யுக்திகளை வகுக்க வேண்டும்; பதறக்கூடாது; வாய்ப்பு கிடைத்தால் கருணையே காட்டக்கூடாது. இதெல்லாம் மேலாண்மை பாடங்கள் தான். செக் வைக்கப்பட்டிருப்பது இப்போது கோலிக்கு. காய் நகர்த்த வேண்டியதும் இப்போது கோலி தான்.  

கோலி & கோ தப்பிக்குமா? 

சரணடையுமா? 

மீண்டு வந்து வெற்றி வாகை  சூடுமா? 

                                                                                                                                                                                                 - பு.விவேக் ஆனந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close