வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (13/03/2017)

கடைசி தொடர்பு:12:48 (13/03/2017)

மகனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த சந்திரபால்! இருவரில் யார் டாப் ஸ்கோரர்?

அப்பாவும், மகனும் ஒரே போட்டியில் அரைசதம் அடித்த நிகழ்வு சமீபத்தில் நடந்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த சந்திரபாலை அவ்வளவு சீக்கிரம் நாம் மறந்து விட முடியாது. நம் பால்ய காலங்களில் சந்திரபால் மாதிரி ஒரு முறையாவது பேட்டிங் செய்ய வேண்டும் என நினைத்திருப்போம். இடது கை பேட்ஸ்மேனான சந்திரபால் கிளாசிக் பிளேயர். டெஸ்ட் போட்டிகளில் லாராவுக்கு அடுத்தபடியாக பத்தாயிரம் ரன்களை கடந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கும், அந்த மண்ணின் கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே நடக்கும் பஞ்சாயத்து இன்னமும் தொடர்ந்து வருகிறது. கிரிக்கெட் வாரிய உறுப்பினரை எதிர்த்துப் பேசியதால் சந்திரபாலுக்கு அணியில் வாய்ப்பு தராமல் இழுத்தடித்தார்கள். ஆறு மாதங்களுக்கு மேல் அணியில் சேர்க்கப்படாததால், வெறுப்படைந்த சந்திரபால் தனது அதிருப்தியை வெளியிட்டார். அவரை ஓய்வு பெற சொல்லி வாரியம் நிர்பந்தித்ததால் வேறு வழியே இல்லாமல் மன உளைச்சலோடு ஓய்வு பெற்றார். வெஸ்ட்  இண்டீஸ் அணிக்காக அதிக  டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர் என்ற பெருமை சந்திரபாலுக்கு உண்டு. 164 டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்களோடு 11,867 ரன் எடுத்திருந்தார்.

சந்திரபால்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா,  டெஸ்ட் போட்டிகளில் 11,953 ரன்கள் எடுத்துள்ளார்.  லாரா சாதனையை முறியடிக்க சந்திரபாலுக்கு தேவைப்பட்டது  வெறும் 87 ரன்கள்தான். நல்ல ஃபார்மில் இருந்தும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், லாராவின் சாதனையை முறியடிக்க முடியாத வருத்தத்தோடு வீட்டில் உட்கார்ந்தார். சந்திரபால் கடந்த ஆண்டு ஓய்வு பெறும்போது அவருக்கு வயது 41. 

இரண்டு மாதங்கள் வீட்டில் இருந்த சந்திரபால், தனது மனம்  கிரிக்கெட்டைச் சுற்றியே உழல்வதை உணர்ந்தார். மீண்டும் பேடு கட்டி பேட் பிடிக்க ஆரம்பித்தார். உள்ளூர் போட்டிகளில் களமிறங்கி தனது திறமையை நிரூபித்தார். சந்திரபாலுக்கு இருபது வயதில் ஒரு மகன் உண்டு. பெயர் டகிநரைன். சந்திரபாலை போலவே மகனுக்கும் கிரிக்கெட் மீதுதான் ஆர்வம். சிறு வயதில் இருந்தே முறையாக கிரிக்கெட் பயின்றார். அதிரடி பேட்ஸ்மேனாக விறுவிறுவென உள்ளூர் போட்டிகளில் புகழ் பெற்றார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் சமீபத்தில் கயானா அணிக்காக விளையாடுவதற்கு சந்திரபால் மற்றும் அவர் மகன் இருவரும் தேர்வு ஆகினர். கடந்த மார்ச் 10 முதல் மார்ச் 13 வரை கிங்ஸ்டன் சபீனா பார்க் மைதானத்தில் கயானாவும், ஜமைக்காவும் மோதின. டாஸ் வென்ற கயானா  ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது, முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா அணி, 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  ஸ்லோ பிட்ச் என்பதால் ரன் எடுக்க அத்தனை வீரர்களும் சிரமப்பட்டார்கள். 

அப்பா சந்திரபாலுடன் மகன் டகிநரைன்

கயானா அணிக்காக தொடக்க வீரராக டகிநரைன் சந்திரபாலுடன், ஹெட்மேயர் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய ஹெட்மேயர் 79 பந்துகளில் 74 ரன் எடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு வந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆயினர். அப்போதுதான் தந்தை சந்திரபாலும், மகன் சந்திரபாலும் ஜோடி சேர்ந்தார்கள். டகிநரைன் முட்டுக்கட்டை இன்னிங்ஸ் ஆட ஆரம்பித்தார். சந்திரபால் மகனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். மகன் 135 பந்துகளில் 58 ரன் எடுத்து அவுட் ஆக, சந்திரபால் 175 பந்துகளில் 57 ரன் எடுத்தார். அப்பாவும், மகனும் இணைந்து ஆடிய அற்புதமான ஆட்டத்தால் கயானா 262 ரன்கள் குவித்தது.

அப்பாவும் மகனும் இணைந்து ஒரே போட்டியில், ஒரே அணிக்காக ஆடி, இருவரும் அரை சதம் எடுத்திருப்பது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச போட்டிகளில் அப்பாவும், மகனும் இணைந்து ஆட வாய்ப்பு இல்லை என்றாலும் கூட, உள்ளூர் போட்டிகளில் இருவரும் தொடர்ந்து இணைந்து ஆட முடிவெடுத்திருக்கின்றனர். நெக்ஸ்ட் என்ன பாஸ் என கேட்டால், எங்களது அடுத்த இலக்கு இருவரும் ஒரே இன்னிங்ஸில் சதம் எடுப்பது என கோரஸாக சொல்லி சிரிக்கிறார்கள்.

- பு.விவேக் ஆனந்த் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்