Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"அஸ்வினிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்!’’ ஆஸி பந்துவீச்சாளர் நாதன் லியான் #IndVsAus

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், தற்போது 1-1 சமநிலையில் உள்ளது. இந்த இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி, நாளை (மார்ச் 16-ம் தேதி) ராஞ்சியிலும், கடைசி 4-வது டெஸ்ட் தர்மசாலாவில் வருகின்ற 25-ம் தேதியும் நடைபெற உள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லியான், போட்டி குறித்து கூறியிருப்பதாவது: ''இந்த தொடருக்கு முன்னதாகவே, பலரும் எங்களுக்கு எதிரான கருத்துகளையே தொடர்ச்சியாக தெரிவித்துக் கொண்டிருந்தனர். நாங்கள் இந்த தொடரில் 4-0 என தோல்வி அடைவோம், முன்பிருந்த அணியுடன் ஒப்பிடும்போது அணியில் சிறந்த வீரர்கள் இல்லை, பல இளம் வீரர்கள் தற்போதுதான் போதுமான அனுபவத்தைப் பெற்று வருகின்றனர் என்றே கருதினர். ஆனால் இதோ டெஸ்ட் தொடர் தொடங்கியதும், அந்த நிலைமையை நாங்கள் தலைகீழாக மாற்றிவிட்டோம். 

இந்தியா

இன்னும் ஒரு ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றால் போதும்..., பார்டர் - கவாஸ்கர் டிராஃபியை நாங்கள் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதில் எங்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. அதற்குத் தேவையானவற்றை நாங்கள் நிச்சயமாகச் செய்வோம். எனவே இந்திய அணிதான் கடும் நெருக்கடியில் உள்ளது; நாங்கள் அப்படி இல்லை. ஏனெனில் எப்படிப்பட்ட சிறந்த அணிகளையும், உலகின் எந்த பகுதியில் போட்டி நடந்தாலும் வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இதை நாங்கள் பலமுறை செய்திருக்கிறோம் என்பதுடன், இந்தியாவுக்கு எதிராக புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இதை நிருபித்தோம். பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டிலும், வெற்றிக்கு மிக அருகில் நெருங்கி வந்தோம். ஆனால் இறுதியில் இந்தியா ஏதோ மேஜிக் செய்துவிட்டது.

இந்தியா

அப்போட்டியில், எனது வலது ஆள்காட்டி விரலில் உள்ள தோல் உரிந்து காயம் ஏற்பட்டு விட்டது. கடந்த 2013-ல் இந்தியச் சுற்றுப்பயணத்தில் விளையாடிய போதும், இதே போன்ற காயத்தால் பாதிக்கப்பட்டேன். அப்போதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 3 நாட்களுக்கு பின்னர்தான் என்னால் விளையாட முடிந்தது. கையில் டேப் ஒட்டிக்கொண்டு, பந்துகளை வீசக்கூடாது என்ற விதி உள்ளது. அதனால் காயத்தைப் பற்றி நான் பெரிதாகச் சிந்திக்கவில்லை. ஆனால் வலைபயிற்சியின் போது, கையில் சிறிது வலி ஏற்பட்டது. எனினும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே, காயம் முழுவதுமாக குணமாகிவிடும் என்றே உணர்கிறேன். அஸ்வினிடம் இருந்து உன்னிப்பாகப் பல விஷயங்களைக் கற்றுவருகிறேன். இந்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ப, வலது/இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் எப்படி ஓவரை தகவமைத்துப் பந்துகளை வீசுகிறார் என்பதை, அவரது வழியிலேயே அறிந்து கொண்டு வருகிறேன். கிரீஸைப் பயன்படுத்தும் விதம், பந்தை வித்தியாசமாக பிடித்து வீசும் திறன் ஆகியவற்றையும் கவனித்து வருகிறேன்.

மொத்தத்தில், கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், எங்களுக்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லை, அது இந்திய அணிக்குத்தான் சேரும்'' என தெரிவித்துள்ளார்.

இந்தியா

முன்னதாக காயம் காரணமாக, ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் ஆகியோர், தொடரில் இருந்து வெளியேறி விட்டனர். அவர்களுக்குப் பதிலாக, நியூசிலாந்துக்கு எதிரான ஒருதினப் போட்டியில் அசத்திய மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மீன்ஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி என்ன பதில் சொல்லப்போகிறது?  

 - ராகுல் சிவகுரு

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close