Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தோனி மண்ணில் ஃபார்முக்கு திரும்புவாரா விராட் கோலி? என்ன நடக்கும்? #IndVsAus

டெஸ்ட் போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, நாளை ராஞ்சியில் உள்ள JSCA மைதானத்தில் நடைபெறுகிறது. வழக்கம்போல காலை 9.30 மணிக்குப் போட்டி தொடங்குகிறது. இந்த தொடரின் துவங்குவதற்கு முன்பாக, ஒன்றரை வருட தொடர் வெற்றிகளுடன்,  19 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, உச்சகட்ட ஃபார்மில் இருந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எளிதில் 4-0 என வொயிட் வாஷ் செய்யும் என கிரிக்கெட் உலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணியோ, பல்வேறு திட்டங்களையும், உத்திகளையும் கையாண்டதால், இந்தியாவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, புனேவில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றியைச் சுவைத்து, விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு மிக மோசமான தோல்வியைப் பரிசாக அளித்தது. மேலும் ''உள்ளூரில் புலி; வெளியூரில் எலி''-யாக இருந்த இந்திய அணியின் குறைகளையும், இப்போட்டி தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது எனலாம்.

ஆஸ்திரேலியாவின் நிலைப்பாடு என்ன?

பெங்களூரு டெஸ்ட்

ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் ஜெயித்தால், தொடரை இழக்கும் சூழ்நிலையைத் தவிர்த்துவிடும் என்பதுடன், அசைக்க முடியாத முன்னிலையையும் பெற்றுவிடும் என இருந்த நிலையில், பெங்களூரு போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது இந்திய அணி. முற்றிலும் புதிய திட்டங்களோடு இந்திய அணியை ஆக்‌ரோஷமாக வழிநடத்தினார் விராட் கோலி. அஸ்வின் - ஜடேஜாவின் கூட்டணியின் சுழல் தாக்குதல் மற்றும் ராகுல் - புஜாரா - ரஹானே ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்காலும், 4 நாட்களிலேயே இந்திய அணி ஆஸ்திரேலியாவை சுருட்டி எறிந்ததுடன், புனே தோல்விக்குத் தக்க பதிலடியையும் தந்தது. அப்போட்டியில் DRS முறையில் ஸ்டீவ் ஸ்மித் செய்த மோசடிகள் விஸ்வரூபம் எடுத்தன. இரு அணிகளின் கிரிக்கெட் வாரியமும், தங்கள் அணிக் கேப்டன்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இடையில் ஜசிசி தலையிட்டதால், நாளடைவில் அந்த பிரச்னையின் தன்மையும் நீர்த்துப் போனது. ராஞ்சியும் மெதுவான ஆடுகளமாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது. எனவே புனே டெஸ்ட் போல, ஒரு வேளை டாஸில் ஜெயித்துவிட்டால், கூடுதல் உத்வேகத்துடன் ஆடி வெற்றி பெறவே ஆஸ்திரேலியா விரும்பும். 

தோனி இஸ் பேக்! 

தோனி

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி, இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் சொந்த மாநிலத்தில் நடைபெறுவது கவனிக்கத்தக்கது. ஆகவே இந்த டெஸ்ட் போட்டிக்கான முன்னேற்பாடுகளை, JSCA மைதானத்துக்கு அடிக்கடி வந்து தோனி பார்வையிடுவதாக, மைதானத்தைப் போட்டிக்கு ஏற்ப தயார்படுத்தும் பராமரிப்பாளரான எஸ்.பி.சிங் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ''இந்தப் பிட்சில், 5 நாட்களுக்கும் விறுவிறுப்பான டெஸ்ட் கிரிக்கெட்டை எதிர்பார்க்கலாம். ஆடுகளம் ஸ்பின்னர்களுக்குச் சாதகமாக இருந்தாலும், பேட்ஸ்மென்களுக்கும் சாதகமான பல விஷயங்கள் உள்ளன என்பதால், அவர்களும் மகிழ்ச்சியாக பேட்டிங் செய்யலாம்'' எனத் தெரிவித்துள்ளார். ஆக 150கிமீ வேகத்தில் பந்துவீசக்கூடிய பாட் கம்மின்ஸின் வேகப்பந்து வீச்சு, எந்தளவுக்கு இந்த மைதானத்தில் எடுபடும் என்பது, போகப்போகத் தான் தெரியும். இதுதவிர பிட்ச் நிலவரம் குறித்தும், ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க செயலர் தெபாஷிஷ் சக்ரவர்த்தி அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் கவனமாக வழங்கி வருகிறாராம் தோனி! 

ராஞ்சி ஆடுகளம் எப்படி இருக்கும்? 

வலை பயிற்சி

புனே டெஸ்ட் மற்றும் பெங்களூரு டெஸ்ட் ஆகிய இரண்டு போட்டியிலும் நடுவராகச் செயல்பட்ட கிறிஸ் பிராட், போட்டி நடந்த இரு ஆடுகளங்களில் ஒன்று மோசமாகவும், மற்றொன்று சராசரிக்கும் குறைவான தரத்துடன் இருந்ததாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். ஜசிசிக்கு இதுதொடர்பான புகார் அறிக்கை ஒன்றையும் அவர் அனுப்பியுள்ளார். ஏன் இதை இங்கே சொல்கிறோம் என்றால், புனே போல ராஞ்சி மைதானத்திலும், இப்போதுதான் முதன்முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. எனவே போட்டி நடைபெறும் JSCA மைதானமும், தோனியின் கவனத்தை ஈர்த்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. தனது சொந்த மாநிலத்தில் இந்த டெஸ்ட் போட்டி நடைபெறுவதால், அதனை ஒரு மறக்க முடியாத அனுபவமாக, கிரிக்கெட் ரசிகர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் தோனி அதிக அக்கறை எடுத்துக் கொள்வதாகத் தெரிகிறது. 

ஃபார்முக்குத் திரும்புவாரா கோலி?

விராட் கோலி

ஆஸ்திரேலிய மைதானங்களில் அந்த அணிக்கு எதிரான போட்டிகளில் சதங்களாக அடித்துத் தள்ளிய கோலி, இந்தியாவில் அதே அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் சொதப்பிக் கொண்டிருக்கிறார். ஏனெனில் அவர், இரு டெஸ்ட் போட்டியிலும் சேர்த்து, இதுவரை 40 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். எனவே விராட் கோலி தனது ஃபார்மை மீட்டெடுத்தால், அது இந்திய அணிக்கு மட்டுமல்ல, கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய உற்சாக டானிக்காக அமையும் என்பதே உண்மை. தொடர் தற்போது சமநிலையில், இரு அணிகளும் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடும். எனவே முந்தைய போட்டிகளைப் போல சிறப்பானதொரு டெஸ்ட் போட்டி, கிரிக்கெட் ரசிகர்களுக்குக் காத்திருக்கிறது!

 - ராகுல் சிவகுரு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement