வெளியிடப்பட்ட நேரம்: 20:11 (15/03/2017)

கடைசி தொடர்பு:20:19 (15/03/2017)

தோனியின் டிரேட்மார்க் சிக்ஸரில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஜார்கண்ட்! #VijayHazare

விஜய் ஹசாரே கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று நடந்த காலிறுதிப் போட்டியில் விதர்பாவை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறது ஜார்கண்ட் அணி. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போது விஜய் ஹசாரே கோப்பையில் ஆடிக்கொண்டிருக்கிறார். தனது சொந்த மாநிலமான ஜார்கண்ட் அணிக்கு கேப்டனாக பதவியேற்று விளையாடுவதால், உற்சாகத்துடன் பேட்டிங் செய்து வருகிறார். தோனி அணியில் இருப்பதால், மற்ற வீரர்களும் உற்சாகத்துடன் இருக்கின்றனர். இதனால் ஜார்கண்ட் அணி, யாருமே எதிர்பார்க்காத வகையில் அரையிறுதி வரை முன்னேறியிருக்கிறது. 

லீக் போட்டிகள் முடிவில் கர்நாடகா, பரோடா, தமிழ்நாடு, குஜராத், விதர்பா, ஜார்கண்ட், பெங்கால், மஹாராஷ்டிரா என எட்டு அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. கர்நாடகாவை பரோடா ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. குஜராத்தை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது காலிறுதிப் போட்டிகள் இன்று டெல்லியில் நடந்தன.

ஜார்கண்ட் கேப்டன் தோனி

விதர்பாவும், ஜார்கண்டும் மோதிய காலிறுதிப் போட்டியில், டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது விதர்பா. ஆடுகளம் மந்தமாக இருப்பதை உணர்ந்த ஜார்கண்ட் பவுலர்கள், பந்தை அதிகம் பவுன்ஸ் செய்யாமல் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் தந்தனர். அதிரடியாக ஷாட் ஆடவும் முடியாமல், விக்கெட்டை காப்பாற்றவும் முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது விதர்பா அணி.

ஒன்பது ரன்னுக்கு முதல் விக்கெட் விழுந்தது. 18 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகள் விழுந்தன. அந்த அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு அவுட்டானாதால், 70 - 80 ரன்களையாவது விதர்பா எடுக்குமா என சந்தேகம் எழுந்தது. ஆனால் விதர்பா பேட்ஸ்மேன் கணேஷ் சதீஸ் கொஞ்சம் நேரம் போராடினார். 42/5 . 80/6, 87/7 என அணி தத்தளித்து கொண்டிருந்தபோது  ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரவி ஜங்கித்  அட்டகாசமான இன்னிங்ஸ் ஆடினார். அவருக்கு விதர்பா பவுலர் ரஜ்னீஷ் குர்பானியும் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தார். அபாரமாக ஆடிய ரவி ஜங்கித் 87 பந்துகளில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உதவியுடன் 62 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். ஐம்பது ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து விதர்பா அணி. 

160 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சற்றே கடினமான இலக்கைத் துரத்த ஆரம்பித்தது ஜார்கண்ட். ஓப்பனிங் பேட்ஸ்மேன் பிரத்யூஷ் சிங்கும், இஷான் கிஷனும் பொறுமையாக ஆடினார்கள். இருவரும் முறையே 33,35 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து குமாரும், சவுரப் திவாரியும் அடுத்தடுத்து சொற்ப  ரன்களில் அவுட் ஆயினர். 116/4 என்ற நிலையில் அணி இருந்தபோது இஷான் ஜக்கியுடன் ஜோடி சேர்ந்தார் மகேந்திர சிங் தோனி. விதர்பாவின் லெக்  ஸ்பின்னர்  ஜங்கீத் பந்தில் அட்டகாசமாக ஒரு கவர் டிரைவ் ஆடி, ஒரு பவுண்டரி எடுத்தார் தோனி. ஆனால் அதன் பின்னர் பந்துகளை பவுண்டரி விளாச முடியாத அளவுக்குத் துல்லியமாக வீசினர் விதர்பா பவுலர்கள். இதையடுத்து ஒவ்வொரு ரன்னாக ஓடி ஓடிச் சேர்த்தது இந்த இணை. 46-வது ஓவரின் முதல் பந்தை கணேஷ் சதீஷ் வீச, அதை நேராக ஒரு சிக்ஸர் விளாசி மேட்சை முடித்தார் தோனி. இதையடுத்து ஜார்கண்ட் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. 

இன்னொரு காலிறுதியில்  கேதர் ஜாதவ் தலைமையிலான மகராஷ்டிரா அணியும், மனோஜ் திவாரி தலைமையிலான பெங்கால் அணியும் மோதின. மகாராஷ்டிரா விதித்த 320 ரன் எனும் இலக்கை, 49.5-வது ஓவரில் சேஸிங் செய்தது பெங்கால். அந்த அணி வரும் 17-ம் தேதி, ஜார்கண்ட்அணியை அரையிறுதியில் சந்திக்கிறது. நாளை நடக்கவுள்ள மற்றொரு அரையிறுதியில், பரோடாவும், தமிழ்நாடும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

- பு.விவேக் ஆனந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்