வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (16/03/2017)

கடைசி தொடர்பு:15:04 (16/03/2017)

பேட்ஸ்மேன் அவுட், பெளலர் கிண்டல்... கைகலப்பில் ஈடுபட்ட வீரர்கள்!

கிரிக்கெட்டை 'ஜென்டில்மேன் கேம்' என்பார்கள். கால்பந்து அதற்கு நேர் எதிரானது. கால்பந்து விளையாட்டின்போது மைதானத்தில் வீரர்கள் அடித்துக் கொள்வார்கள். எதிரணி வீரரைப் பார்த்து வசை பாடுவார்கள். 'பாடி கான்டக்ட்' விளையாட்டு என்பதால் கால்பந்து உலகில் வீரர்கள் மோதிக் கொள்வது சகஜம். கடந்த 2006-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துத் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஃப்ரான்ஸ் கேப்டன் ஜிடேன், இத்தாலி வீரர் மார்கோ  மாடரசியை தலையால் முட்டிய சம்பவத்தை கால்பந்து ரசிகர்களால மறக்கவே முடியாது.

கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அடிதடி

பிரேசில் உலகக் கோப்பை தொடரில் உருகுவே வீரர் சுவாரஸ், இத்தாலி வீரர் செலினியை தோள்பட்டையில் கடித்து வைத்திருந்தார். இப்படியெல்லாம் கால்பந்து மைதானங்களில் சம்பவங்கள் நடப்பது உண்டு. 'எல் கிளாசிகோ' என்று அழைக்கப்படும் ரியல்மாட்ரிட் - பார்சிலோனா அணிகள் விளையாடும் ஆட்டத்தில் அனல் பறக்கும். அதற்கேற்ப களமும் சூடாக இருக்கும். பிரிமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்பூல் மோதல், இத்தாலியில் ஏசி மிலன்- இன்டர்மிலன், ரிவர்பிளேட் - போகா ஜுனியர்ஸ் போன்ற பரம வைரிகள் மோதும் ஆட்டங்களில் எப்போது வேண்டுமானாலும் அடிதடி நடக்க வாய்ப்பு உண்டு.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அப்படியெல்லாம் இதுவரை நடந்தது இல்லை.  'ஸ்லெட்ஜிங்' அல்லது வார்த்தை மோதலுடன் முடிந்து விடும். ஆனாலும் சமீப காலங்களில் கிரிக்கெட் போட்டிகளிலும் கால்பந்து போல வீரர்கள் அடிதடியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மைதானத்தில் வீரர்களின் behaviour சரியில்லை என்றால் வீரர்களைக் களத்தை விட்டு வெளியேற்றும் விதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது கால்பந்து போல கிரிக்கெட் நடுவர்களும் சிவப்பு அட்டை காட்டி வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றலாம். அது நிரந்தரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ இருக்கும். 

கிரிக்கெட்  விளையாட்டுக்கும்  சிவப்பு அட்டை விதிமுறை கொண்டு வந்தது சரிதான் என்பதை உணர்த்தும் வகையில் ஆஸ்திரேலியாவில் மிக மோசமான சம்பவம் மைதானத்தில அரங்கேறியுள்ளது.  விக்டோரியா மாகாணத்தில் உள்ளுர் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், Yackandandah அணியுடன் Eskdale அணி மோதியது. போட்டியின்போது, Eskdale  அணியின் பேட்ஸ் மேனை Yackandandah  அணியின் பந்துவீச்சாளர் அவுட் செய்கிறார். பின்னர்,  பேட்ஸ்மேனை வெறுப்பேற்றும் விதத்தில் அவரை நோக்கி கைதட்டியவாறு ஓடி வருகிறார். பந்துவீச்சாளரின் செயலால் கோபம் தலைக்கேறிய பேட்ஸ்மேன் அவரைத் தனது தோள்பட்டையால் தட்டி கீழே விழ வைக்கிறார். 

 

 

இதனைப் பார்த்த  Eskdale அணியின் மற்ற வீரர்கள் ஓடி வந்து பேட்ஸ்மேனை கீழே தள்ளி தாக்குகின்றனர். கிரிக்கெட் மைதானத்தில் இது போன்ற சம்பவம் நடப்பதைப் பார்த்து நடுவர்களும் ரசிகர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். உண்மையில் கிரிக்கெட் வரலாற்றில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததே இல்லை. இதற்கு முன், இந்திய விக்கெட் கீப்பர் கிரண் முரேவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மியான்தத்தும் ஒரு போட்டியின்போது முறைத்துக் கொண்டனர். ஹர்பஜன் - ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் களத்தில் முறைத்ததும், ஒரு பரபரப்பு. அப்போது ஹர்பஜன் சிங், சைமன்ட்ஸை 'குரங்கு' என்று திட்டியதாக புகார் எழுந்தது. ஐ.பி.எல். போட்டியின்போது  ஹர்பஜன், பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்தார். ஸ்ரீசாந்த் அழுது கொண்டே மைதானத்தில் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். இதுபோன்ற மோதல்கள்தான் கிரிக்கெட் உலகில் நடந்த மோசமான நிகழ்வுகள். 

ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. பந்து வீச்சாளரைத் தாக்கிய பேட்ஸ்மேனுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்து வீச்சளர் நான்கு வாரங்கள் தடையை சந்தித்துள்ளார். இருவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

- எம்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்