’மீண்டும் உலக செஸ் சாம்பியன்’ - விஸ்வநாதன் ஆனந்த் நம்பிக்கை!

‛உலக அளவில் செஸ் விளையாட்டில் இளைஞர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். கணினிகளின் பயன்பாடும் தவிர்க்கமுடியாத நிலையை அடைந்துள்ளது’ என, உலக செஸ் அரங்கில் முடிசூடா மன்னராக விளங்கும் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

படம்:ப.சரவணகுமார்

வேலம்மாள் கல்விக்  குழுமம் மற்றும் கோல்டன் கூஸ் விளையாட்டுக் குழுமம்  சார்பில் சென்னையின் பல்வேறு பள்ளிகளில் படிக்கும், செஸ் ஆட்டத்தில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சர்வதேச  போட்டிகளில் பங்கேற்க  ஊக்கமளிக்கும் வகையிலும், விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையிலும், இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டரும், ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவருமான விஸ்வநாதன் ஆனந்த் சில நுணுக்கங்களைக் கற்றுத் தருகிறார். 

இதுபோன்ற பயிற்சிப் பட்டறையில், தான் முதன்முறையாக பங்கேற்பதாகவும், இந்த மூன்று நாள்களில் மாணவர்களுக்கு பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுத்தர உள்ளதாகவும் ஆனந்த் கூறினார்.  “செஸ் விளையாட்டை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே விளையாடும்போது ஆட்ட நுணுக்கம் மட்டுமல்லாது, அவர்களின் படிக்கும் திறன், சிந்திக்கும் திறன், ஆராய்ந்து அறியும் ஆற்றல் அதிகரிக்கிறது. அதன் காரணமாக சிறந்த ஞாபகசக்தி, கற்றல் திறன் மேம்படுகிறது’’ என்றார் ஆனந்த். செஸ் விளையாட்டில் சமீபகாலமாக அதிகரித்து வரும் கணினிகளின் பயன்பாடு தவிர்க்கமுடியாத நிலையை அடைந்திருந்தாலும், வளரும் செஸ் வீரர்கள் அவற்றை பயன்படுத்துவதால் எதிர்மறையான விளைவும், ஆட்டத்திறன் இழப்பும் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர்  தெரிவித்தார். 

தற்போது பலர் சிறுவயதிலேயே செஸ் விளையாட கற்றுக்கொள்ள தொடங்கும் சூழல்  இருந்தாலும், இருபது வயதுக்கு மேற்பட்டவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். செஸ் கற்றுக்கொள்ள வயது வரம்பு இல்லையென்றாலும், சிறு வயதிலேயே ஆட்ட நுணுக்கங்களைப் புரிந்துகொள்தல் மற்றும் ஆராய்ந்தறியும் ஆற்றல் அதிகளவில் இருக்குமென்பதால், இருபது வயதுக்குப் பின் செஸ் விளையாடத் தொடங்குவது, பெரிய அளவில் பலன் அளிக்காது என்பது ஆனந்த் கருத்து.

பயிற்சிப் பட்டறையின் முதல் நாளில் செஸ் விளையாட்டு பற்றிய கோட்பாடு ரீதியான விளக்கங்களைக் கற்றுக் கொடுக்க இருக்கிறார் ஆனந்த். இரண்டாம் நாளன்று மாணவர்களின் திறனை சோதிக்கும் வகையிலான பயிற்சிகள் இடம்பெறும். கடைசி நாளில் ஆனந்த் எப்படி போட்டிகளுக்குத் தயாராவார் என்பது குறித்து விளக்கப்படும். அத்துடன், மாணவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு அவர் பதிலளிப்பார். இதுதான் அந்த மூன்றுநாள் பயிற்சிப் பட்டறையின் சாரம்சம்.

கடந்த சில ஆண்டுகாலமாக குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெறாத விஸ்வநாதன் ஆனந்த்திடம் அதற்கு வயது அதிகரித்து வருவது ஒரு காரணமா என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆனந்த், 1980களில் உலகின் டாப் 10 செஸ் வீரர்களின் சராசரி வயது 36-ஆக இருந்ததாகவும், அது தற்போது 26-ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், ‛‛ஒரு வகையில் வயது அதிகரிப்பு என்பது பின்னடைவுக்கு காரணமாக இருந்தாலும், இக்கால இளைஞர்களின் ஆட்ட நுணுக்கம் மற்றும் ஆற்றல் சவால் அளிக்கும் வகையில் உள்ளது. நான் தொடர்ந்து செஸ்ஸில் கவனம் செலுத்த விரும்புகிறேன். குறிப்பாக வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் “கிராண்ட் செஸ் செஸ் டூர் 2017” மற்றும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள “உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கு  ஆயத்தமாகி வருகிறேன்’’ என்றார். 

 


- ஜெ. சாய்ராம்
மாணவப் பத்திரிகையாளர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!