Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிராவிட் பாதி லட்சுமண் மீதி! புஜாராவைப் பற்றி 8 சுவாரஸ்யங்கள் #Pujara

புஜாராவைப் பற்றி இணையத்தில் சுற்றும் மீம் இது. 

புஜாரா மீம்ஸ்

சில நேரம், ஆயிரம் பக்கங்களில் பேசப்படும் விஷயத்தை விட, ஒரே ஒரு புகைப்படம் அதிகம் பேசும் எனச் சொல்வார்கள். இப்போது பல நூறு வார்த்தைகளில் விவரிக்க வேண்டிய விஷயத்தை ஒரே ஒரு மீமில் போட்டுத் தாக்கி விடுகிறார்கள்.

இந்த மீம் வெறும் சிரிப்பதற்கு மட்டுமல்ல. புஜாராவின் 'ராஞ்சி' இன்னிங்ஸ் தனித்துவம் வாய்ந்தது. நிபுணத்துவம் பெற்ற மெச்சூர்ட் இன்னிங்ஸ் அது. சுமார் ஆறு செஷன், அதாவது இரண்டு நாட்கள், 668 நிமிடங்கள், 525 பந்துகள்  என நம்பர்கள் சொல்லும் விஷயம் பிரமிக்க வைக்கின்றன. நிச்சயமாகc சொல்லிவிடலாம், புஜாராவின் வாழ்நாளில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இது.

ராஞ்சி பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சும் கிடையாது, பவுலிங்கிற்கு சாதகமான பிட்சும் அல்ல. ரன்கள் அடிக்க முடியும், விக்கெட்டும் வீழ்த்த முடியும். ஆனால் பேட்ஸ்மேனோ, பவுலரோ யாராக இருந்தாலும், தனது முழுத் திறமையைக் காட்டவேண்டும் ; மிக முக்கியமாக பொறுமையுடன் இருக்க வேண்டும் இதில் தேர்ந்தவர்கள்தாம் இது போன்ற பிட்ச்களில்  தேற முடியும். ஆம், இந்த டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை நான்கு முக்கியமான வீரர்களை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்தியாவுக்கு புஜாரா, ஜடேஜா. ஆஸ்திரேலியாவுக்கு பேட் கம்மின்ஸ், ஸ்டீவன் ஸ்மித் இந்த நால்வரையும் பாராட்டியே ஆக வேண்டும். நல்ல டச்சில் இருந்தாலும், பொறுமை தவறி, மோசமான முறையில் அவுட் ஆனதால் முரளி விஜய் இங்கே சேர்க்கப் படவில்லை. 

சரி, இந்தப் போட்டியின் நாயகன் யார்? சர்வ நிச்சயமாக புஜாராவைச் சொல்லலாம்.  சில தகவல்கள் இங்கே. 

1.  புஜாராவின் குடும்பமே  கிரிக்கெட் குடும்பம்தான். தாத்தா ஷிவ்லால் புஜாரா  லெக் ஸ்பின்னர். குஜராத்தில் உள்ள தரங்கதாரா                நகரத்துக்காக ஆடியவர். அப்பா அர்விந்தும், மாமா பிபின் புஜாராவும்  ரஞ்சி கோப்பையில்  சவுராஷ்டிரா அணிக்காக ஆடிய அனுபவம்  உள்ளவர்கள். அந்த வரிசையில் வந்த வாரிசுதான் சதீஷ்வர் புஜாரா.

2. 2012 -2013 சீஸனில் ஹைதராபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முரளிவிஜய்யும், புஜாராவும் இணைந்து    குவித்த ரன்கள் 370.  இந்திய அணி சார்பில் இரண்டாவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த இணை  இவர்கள்தாம். ஒட்டுமொத்தமாக  இந்திய அணி சார்பில் நான்காவது பெரிய பார்ட்னர்ஷிப் இது. முரளி விஜய்க்கும், புஜாராவுக்கும் எப்போதுமே நல்ல பார்ட்னர்ஷிப் உண்டு.  டிராவிட் - லட்சுமண் இணைக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணிக்கு நம்பிக்கையளிக்கும் பார்ட்னர்ஷிப் இதுவே. 

தந்தையுடன் புஜாரா

3. புஜாராவுக்கு  'சீன்ட்டூ' என்பது  செல்லப்பெயர். மனைவியை இழந்த பிறகு இடிந்த போயிருந்த அர்விந்த், தன் மகனுக்காக வாழ ஆரம்பித்தார். புஜாராவை உலகத் தரம் வாய்ந்த பிளேயராக மாற்றிக்காட்ட வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்டிருந்தவர், கடும் வேலைப்பளுக்கு மத்தியில் புஜாராவுக்கு பயிற்சியாளராகவும் மாறினார். அப்பாவிடம் இருந்து  தான் டிஃபென்ஸ் டெக்னிக்குகளை கற்றுக்கொண்டார் புஜாரா.

4.  டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 500 பந்துகளை சந்தித்த முதல் இந்திய  வீரர் புஜாரா தான். இதற்கு முன்னதாக அதிக பந்துகளைச் சந்தித்த பெருமைக்குரியவராக விளங்கியது டிராவிட்தான். 2004 ல் நடந்த ராவல்பிண்டி டெஸ்ட் போட்டியில் 495 பந்துகளை சந்தித்து 270 ரன்கள் எடுத்திருந்தார் டிராவிட். உலகிலேயே மிகக்குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் இரட்டைச் சதம் எடுத்தவர் வரிசையில் புஜாராவுக்கு இரண்டாவது இடம். முதலிடம் இலங்கை வீரர் குறுப்புவுக்கு - 201* (548)

5. புஜாராவால் எப்படி இப்படியொரு நீளமான இன்னிங்ஸ் விளையாட முடிந்தது என எல்லோரும் வியந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கான விதை எப்போது போடப்பட்டது தெரியுமா? புஜாராவின் 12 வயதில் ! 

2001 ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் நடந்த 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா அணிக்காக ஆடி முச்சதம் எடுத்து  சாதனை படைத்தவர் புஜாரா. பரோடாவுக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் ஆடிய சவுராஷ்டிரா ஐந்து விக்கெட் இழப்புக்கு 470 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதில் புஜாரா எடுத்த ரன்கள் 306. சந்தித்த பந்துகள் 516.

PUJARA

6. முதல் தர போட்டிகளில் அதிக இரட்டைச்சதம் எடுத்தவர் என்ற பெருமை புஜாராவுக்கு உண்டு.  விஜய் மெர்ச்சண்ட்டும், புஜாராவும் மட்டுமே 11 இரட்டை  சதங்கள் விளாசியிருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக சுனில் கவாஸ்கரும், ராகுல் டிராவிடும் 10 இரட்டை சதம் விளாசியிருக்கிறார்கள். புஜாராவின் பதினொன்றில் மூன்று டெஸ்ட் போட்டியிலும், ஐந்து - ரஞ்சி போட்டியிலும், இரண்டு இந்திய ஏ அணிகாகவும், ஒன்று துலிப் டிராபியிலும் அடிக்கப்பட்டது.

7. பின்கால் நகர்த்தல்களில் தேர்ந்தவர். இதனால் சுழற்பந்து வீச்சாளர்களை எளிதாகக் கையாளுவார். 2014 இல் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது  நாதன் லியான் பந்துவீச்சில் திணறினார். அதைத் தவிர, அவர் சுழற்பந்துக்கு மிகப்பெரிய அளவில் சிரமப்பட்டதே இல்லை. பேட்டை இறுக்கமாகப் பிடிக்காமல், தளர்வாகப் பிடித்து விளையாடுவதே சுழற்பந்தை  சிறப்பாக எதிர்கொள்ள  சிறந்த வழி என ரகசியம் சொல்கிறார் புஜாரா.

8.  புஜாராவுக்கு அவர் அம்மா ரீனா மீது மிகுந்த பிரியம் உண்டு. ரீனாவும்  மகன் மீது அளவில்லாப் பாசம் கொண்டவர். ஒழுக்கம், கடவுள் பக்தி இரண்டும் அம்மாவிடம் இருந்துதான் கற்றுக்கொண்டார். அம்மா புற்றுநோயால் பாதித்த போது துடிதுடித்துப் போனார் புஜாரா. இந்திய அணிக்காக அம்மா முன்பு ஆட வேண்டும்  என்ற புஜாராவின் ஆசை நிறைவேறவே இல்லை. தனது பதினேழு வயதில் அம்மாவை இழந்தார்.

ஆன்லைனில் பரவும் தவறான தகவல்கள் :-

இந்தியாவின் குட்டிச் சுவர், புஜாரா - இந்தியாவின் டிராவிட் 2.0 எனப் புகழாரங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சமயத்தில் டிராவிட்டின் வார்ப்பு தான் புஜாரா என்றொரு தகவலும் சுற்றிக்கொண்டிருக்கிறது .

ரஹானே, சஞ்சு சாம்சன், கருண் நாயர் எனப் பலர் டிராவிட்டின் வார்ப்புகள் என்பது உண்மை. ஆனால் புஜாரா டிராவிட்டின் வார்ப்பு என்பதில் முழு உண்மை இல்லை. டிராவிட்டுக்கும் புஜாராவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இளம் வயதில் அவர்  டிராவிட்டிடம் பயிற்சி பெறவில்லை, ஐ.பி.எல், கவுண்டி போன்றவற்றுக்கோ, வேறு ஏதேனும் உள்ளூர்ப் போட்டியிலோ அவர்  டிராவிட்டிடம் இருந்து பிரதானமாக எதுவும் கற்றுக்கொள்ளவும் இல்லை. உண்மையில், அவர் டிராவிட் இருக்கும் போதே இந்திய அணிக்குள் நுழைந்துவிட்டார். டிராவிட் அணியில் இருக்கும் போதே அவரது இடத்துக்கு தான் மாற்று என்பதைச் சில நேரங்களில் அவரது பேட் மூலம் சொல்லியிருக்கிறார். மற்ற வீரர்கள் போல சச்சின், டிராவிட் ஆகியோரிடம் ஒரு இளையவன் எனும் முறையில் ஆலோசனை கேட்டிருக்கிறார், அவ்வளவுதான்!  இந்த விஷயத்தை ஏன் இவ்வளவு சீரியஸாகச் சொல்ல வேண்டியதிருக்கிறதெனில், ஒரு வீரர் மகத்தான முறையில் ஆடும்போது அவருக்கான கிரெட்டிட்டை நிச்சயம் தர வேண்டும். 

- பு.விவேக் ஆனந்த் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close