வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (28/03/2017)

கடைசி தொடர்பு:08:39 (29/03/2017)

மெஸ்ஸிக்கு நான்கு போட்டிகளில் விளையாடத் தடை!

அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸியை, நான்கு போட்டிகளில் விளையாட பிஃபா தடை விதித்துள்ளது.

Messi

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச் சுற்றுகள் நடந்துவருகின்றன. இந்த நிலையில், அர்ஜென்டினா, சிலி அணிகள் கடந்த வாரம் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் மோதின. இந்தப் போட்டியின்போது, அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸிக்கும், போட்டி நடுவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து பிஃபா விசாரணை நடத்தியது. அப்போது, போட்டியின்போது துணை நடுவர் ஒருவரை மெஸ்ஸி மரியாதைக் குறைவாகப் பேசியது தெரியவந்தது. இதையடுத்து, அடுத்து நடக்க உள்ள நான்கு உலகக் கோப்பை தகுதிப் போட்டிகளில் விளையாட, அவருக்கு பிஃபா தடை விதித்துள்ளது. மேலும், அவருக்கு 10,000 சுவிஸ் பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில், உருகுவே, வெனிசுலா, பெரு, பொலிவியா ஆகிய அணிகளுக்கு எதிராக அர்ஜென்டினா விளையாடும் போட்டியில், மெஸ்ஸி கலந்துகொள்ள முடியாது. இது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் அடுத்ததாக... அர்ஜென்டினா அணி, பொலிவியா அணியுடன் மோத உள்ளது.