முல்தானில் முச்சதம் விளாசி பாகிஸ்தானுக்கு ஷேவாக் மரணபயம் காட்டியதை மறக்க முடியுமா?! #ThrowbackMemories #OnThisDay

2004ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்த தொடர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத ஒன்று.  காரணம், இந்த தொடரில் தான் வீரேந்திர ஷேவாக் 300 ரன்கள் அடித்து அசத்தினார். இதுதான் முதன்முறையாக ஒரு இந்திய வீரர் முச்சதம் அடிப்பது. அந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் ஜிம்பாவேவிற்கு எதிராக 380 அடித்ததே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனி நபரின் அதிகபட்ச ஸ்கோர்.

12 ஆண்டுகளுக்கு முன், இந்த நாளில் அந்த சாதனை நிகழ்ந்தது. இந்தியாவின் அனைத்து பத்திரிகைகளிலும் நியூஸ் சேனல்களிலும் ஷேவாக்கின் முகம் வந்து காட்சியளித்தது. ஒரு 26 வயது இளைஞனை கொண்டாடித் தீர்த்தது கிரிக்கெட் உலகம். சச்சின் சச்சின்... என்று  குரல்கள் மேலோங்கி நின்றுகொண்டிருக்க , அதே தருணத்தில் தன் பெயரையும் நிலை நிறுத்தினார்  வீரு. அந்த சமயத்தில் இந்திய டெஸ்ட் அணிக்கு என ஆடுபவர் ஆகாஷ் சோப்ரா. அவரும் ஷேவாக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களத்தில் இறங்கினார்கள். பலத்த எதிர்ப்பார்ப்புடன் நடந்த இந்த போட்டி முல்தானில் நடைபெற்றது. நிதானமாக ஆடிய இந்த ஜோடி 160 ரன்கள் சேர்த்தது. சோப்ரா 42 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பிறகு, அவருடன் சேர்ந்த அணியின் கேப்டன் டிராவிட் அவ்வளவாக சோபிக்கவில்லை. வெறும் 6 ரன்கள் எடுத்து சமியின் வசம் வீழ்ந்தார். பிறகு, கைகோர்த்த சச்சினும் ஷேவாக்கும்  பாகிஸ்தான் பௌலர்களை திக்குமுக்காட செய்தனர். சிறப்பாக ஆடிய ஷேவாக்  இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். அரங்கம் முழுதும் ஷேவாக் பெயரை சொல்ல ஆரம்பிக்க, இவரது ஆட்டம் இன்னும் சூடு பிடிக்க ஆரம்பித்த்தது. சச்சினும் தன் பங்கிற்கு பவுண்டரிகளாக விளாசினார். முதல் நாள் முடிவில் அணியின் ஸ்கோர் 356 அதில் ஷேவாக் 228 ரன்களும் சச்சின் 60 ரன்களும் எடுத்து களத்தில் நின்றிருந்தனர்.

வீரேந்திர சேவாக்

இரண்டாம் நாள் (மார்ச் 29, 2004) இந்த ஜோடியின் ஆட்டம் வேற லெவலில் இருந்தது. சிக்ஸரும் பவுண்டரிகளுமாக அதிரடியாக ஆடிய ஷேவாக் பாகிஸ்தான் பௌலர்களை கதறவிட்டார். இதற்கு முன், ஒரு இந்திய வீரரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 281. விவிஎஸ் லஷ்மன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2001ல் அடித்திருந்தார். இந்த சாதனையை ஷேவாக் முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார். சச்சினை போலவே, இவருக்கும் ஸ்டாமினா அதிகம்.. பெரிய அளவில் இந்திய அணியில் ஜொலிப்பார் என்றல்லாம் பேச ஆரம்பித்துவிட்டனர் கிரிக்கெட் விமர்சகர்கள். 281 ரன்னை அவர் தாண்டியதும் ஒட்டுமொத்த இந்தியாவுமே இவரின் 300க்காக காத்திருந்தது.  

அதன் பிறகு, இவர் சந்தித்த ஒவ்வொரு பந்துகளையும் இந்திய முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் உன்னித்து கவனிக்க ஆரம்பித்தனர். 300 ரன்களை நெருங்கப் போகிறோம் என்ற பதட்டம் சிறிதளவும் இல்லாமல் பாகிஸ்தானின் புயல் வேக பந்துகளை எதிர்கொண்டு ஆடினார். 294 ரன்களில் வந்து நிற்க மைதானமே அமைதியில் இருந்தது. காரணம், இவர் தன் அதிரடி ஆட்டத்தால் 300 ரன்களை பூர்த்தி செய்வார் என்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் இருந்தது. சக்லைன் முஸ்தக் பந்தில் ஷேவாக் இரண்டு அடி எடுத்து வைத்து இறங்கி வந்தார். பந்து தரையில் இருந்து மேலே எழ ஆரம்பித்த அந்த நொடி, ஷேவாக்கின்  பேட் பந்தை விளாசியது.   எதிர்முனையில் இருந்த சச்சின் உட்பட பாகிஸ்தான் வீரர்கள் அனைவரின் பார்வையும் வானத்தை நோக்கியது. அரங்கமெங்கும் நிறைந்திருந்த ரசிகர்கள் ஒரு கணம் மூச்சுவிட மறந்து பந்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மைதானத்தில் இருந்த கேமராமேன் பந்தை நோக்கி கேமராவை திருப்ப, மைதானம் மட்டுமல்லாமல் வீட்டில் இருந்து பார்த்த அனைவரின் முகமும் ஒருவிதமான அதிர்ச்சியுடன் தலையை திருப்பிப் பார்க்க..

பந்து பவுண்டரி கோட்டை தாண்டி விழுந்தது. சிக்ஸர்!

இந்த சிக்ஸர் இவரது சாதனைக்கு வழிவகுத்தது. அடுத்த நிமிடம் ஹெல்மட்டை கழற்றி பேட்டை உயர்த்தி சிரித்தார் அதிரடி நாயகன் வீரு. ஓடி வந்து எதிர்முனையில் இருந்த ஜாம்பவான் சச்சினை கட்டித்தழுவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த சிக்ஸரின் மூலம் 300 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ஷேவாக். 309 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சமி வீசிய பந்தில் முதல் ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த டஃபிக் உமரின் வசம் பிடிப்பட்டார். 375 பந்துகளில் 309 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த இந்தியாவையே தன் பக்கம் திருப்பியிருந்தார்.  இதில் 39 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடங்கும். இந்த ஜோடி 336 ரன்கள் சேர்த்து பாகிஸ்தானை ஒரு கை பார்த்தது. அடுத்து விளையாடிய லஷ்மண்  29 ரன்களும், யுவராஜ் சிங் 59 ரன்களும் எடுத்தனர். இறுதி வரை தன் நிதான ஆட்டத்தில் 194 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார் சச்சின் டெண்டுல்கர். இந்தியா 675 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

வீரேந்திர ஷேவாக்

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 407 ரன்கள் எடுத்தது, ஃபாலோ ஆனில் விளையாடிய பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸில் 216 ரன்களுக்கு சுருண்டது. இந்த இன்னிங்ஸில் கும்ப்ளே 6 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார். ஆக, இந்திய 52 ரன்களுடன் இன்னிங்ஸில் வெற்றியும் பெற்றது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்த போட்டிக்கு பிறகு, (மார்ச் 28) சென்னையில் நடைபெற்ற தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் வாசிம் ஜாஃபரும் ஷேவாக்கும்   இணைந்து முதல் விக்கெட்டிற்கு 213 ரன்கள் சேர்த்தனர். 278 பந்துகளில் 300 ரன்களை தாண்டி குறைந்த பந்துகளில் முச்சதமடித்து சாதனை புரிந்தது மட்டுமல்லாமல் 319 ரன்கள் குவித்து மீண்டும் வரலாற்றில் இடம் பிடித்தார் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன். இதில் 42 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். இந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார் ஷேவாக்.. ஏப்ரல் 2004 ல் இங்கிலாந்திற்கு எதிராக மேற்கு இந்திய தீவுகள் அணியின் நட்சத்திர நாயகர் ப்ரைன் லாரா 400 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் கம்பீரமாக நின்றார். அதுவே, இன்று வரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனி நபரின் அதிகபட்ச ஸ்கோர். இதுவரை இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முச்சதம் அடித்த வரிசையில் ஷேவாக் மட்டும் தனிமையில் இருந்தார். பின், கருண் நாயர் 303 ரன்கள் குவித்து அந்த வரிசையில் இடம்பிடித்தார். ``இந்த வரிசையில் ரொம்ப நாட்களாக தனிமையில் இருந்தேன்.. என்னை அந்த தனிமையில் இருந்து விடுவித்துவிட்டாய்`` என்று தம்ஸ் அப் காட்டி கருண் நாயரை வாழ்த்துகள் சொல்லி வரவேற்றார் இந்த மழலை சிரிப்பு கொண்ட மகத்தான பேட்ஸ்மேன்.

டெஸ்ட், ஒரு நாள், டி20 என எந்த ஃபார்மெட்டாக இருந்தாலும் ``இது தான் என் ஸ்டைல்.. என் வழி தனி வழி.. ``என்று தன் அதிரடி பாணியின் மூலம் கிரிக்கெட் உலகில் தனி இடத்தினை பிடித்துள்ளார் என்று சொன்னால் அதற்கு ஷேவாக்கின் உழைப்பும் மன உறுதியும் தான் காரணம்.  ஷேவாக்கின் இடத்தை நிரப்ப ஒருவர் மீண்டும் பிறந்து வரணும்!

வீ மிஸ் யூ வீரு பாய்...

 உ.சுதர்சன் காந்தி

(மாணவப் பத்திரிகையாளர்) 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!