Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யுவராஜின் ஆல்ரவுண்ட், சச்சினின் ரன் வேட்டை, தோனியின் ஹெலிகாப்டர் சிக்ஸ்... மறக்க முடியுமா?! #WC2011Champion #OnThisDay

கிரிக்கெட் உலகின் உச்சம் நான்கு வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை. அந்தக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பது ஸ்ட்ரீட் கிரிக்கெட்டர்ஸ் முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவர் மனதிலும் இருக்கும் இமாலய கனவு. ஒரு முறையாவது அந்த கோப்பையை தொட்டுவிடமாட்டோமா என்ற ஏக்கம் இல்லாத கிரிக்கெட் வீரர்களே இல்லை. தோனி மட்டும் விதிவிலக்கா என்ன? 1983-ல் கபில் தேவ் தலைமையில் இந்தியா முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு, எத்தனையோ முறை உலகக்கோப்பை நடந்தது. 2007 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு கூட இந்தியா முன்னேறவில்லை. அந்த சமயத்தில் பல்வேறு விதமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

அதன் பிறகு, இந்திய அணி நிறைய மாற்றங்களைக் கண்டது. பலத்த எதிர்ப்பார்ப்புடன் 2011 உலகக் கோப்பையை எதிர்கொண்டது தோனி தலைமையிலான இந்திய அணி. அப்போது, ஆறு முறை உலகக் கோப்பையில் பங்குபெற்ற ஒரே வீரர் என்ற பெருமை கொண்ட சச்சின் அந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார். ஆக, இந்தத் தொடர் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று உலகமே உற்று கவனித்தது.

இந்த தொடரில் சிறப்பாக தன் திறமையை நிரூபித்துவந்த இந்திய அணி நாக் அவுட் சுற்றில் நடப்பு சாம்பியனான, 5 முறை உலகக் கோப்பையை வென்ற தி க்ரேட் ஆஸ்திரேலியாவை அசால்டாக வீழ்த்தியது. அரையிறுதியில் இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தானின் உலகக் கோப்பை கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்தப் போட்டி மொஹாலியில் அரங்கம் அதிர ஒவ்வொரு பந்தும் பலத்த எதிர்ப்பார்ப்புடனே சென்றது. இந்தப் போட்டியில் சச்சின் 85 ரன்கள் குவித்து பாகிஸ்தான் பௌலர்களின் பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி மற்றும் யுவராஜ்

இந்தியா, பாகிஸ்தானை வென்று இறுதியில் யாருடன் மோதப்போகிறது என்ற கேள்விக்கு பதிலாக, ``வா..வா..வா இப்போ வா`` என்று இலங்கை அணி கம்பீரமாக நிற்க.. போட்டி தொடங்கியது ஏப்ரல் 2, மும்பையில். ரவி சாஸ்திரி மைக்குடன் மைதானத்துள்ளே வர அரங்கமே கரகோசத்தில் அதிர்ந்தது. அந்த சத்தத்தில் டாஸ் கேட்பது சரியாக காதில் விழாமல் இரண்டாவது முறை டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய இலங்கை அணி 6 ஓவருக்கு 17 ரன்கள் எடுத்த நிலையில் ஜாகீர் கான் வீசிய பந்தை உபுல் தாரங்கா `கவர்ஸ்`ல் அடிக்க முயல, அது பேட்டின் வெளிமுனையில் பட்டு சிதற, சேவாக் டைவ் அடித்து பிடித்து இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் தில்சானும் ஹர்பஜன் சுழலில் விழ, இந்தியா ஆர்பரித்தது. பொறுமையாக ஆடிய அணியின் கேப்டன் சங்கக்கரா 48 ரன்கள் எடுத்து தோனியின் லாவகமான கேட்சில் அவுட் ஆனார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் அவ்வளவாக சோபிக்காமல் போக, பொறுப்புடன் ஆடிய ஜெயவர்தனே சதத்தை பூர்த்தி செய்து அணிக்கு வலு சேர்த்தார். 50 ஓவரில் முடிவில் இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்து இருந்தது. ஜெயவர்தனே 103 (88) ரன்களுடனும் பெரரா 9 பந்துகளில் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியா 275 ரன்கள் எடுத்தால் உலகக் கோப்பை கனவு நனவாகும் என்ற நம்பிக்கையில் களமிறங்கியது. அதிரடி ஆட்டக்காரர் சேவாக்கும் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் தொடக்க வீரர்களாக ஆரவாரத்திற்கிடையே பேட்டை சுற்றிக் கொண்டு மைதானத்திற்குள் கால் பதித்தனர். மலிங்கா வீசிய இரண்டாவது பந்தில் சேவாக் எல்பிடபில்யு ஆக, இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அடுத்து களமிறங்கிய கம்பீர், தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி ஆட்டத்தைத் தொடர்ந்தார். சச்சினும் தன்னுடைய ட்ரைவ் ஷாட்டுகளை ஆட இந்திய ரசிகர்கள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சி.

மலிங்கா ஓவரில் சச்சினும் பெவிலியன் திரும்ப மைதானமே அமைதியில் இருந்தது. சிலர் மேட்ச் முடிந்தது என்றே நினைத்துவிட்டனர். அடுத்து களத்தில் குதித்த விராட் தன் நிதான ஆட்டத்தினால் ரன்கள் சேர்த்தார். 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தில்சன் வீசிய பந்தை ஸ்ட்ரைட் ட்ரைவ் ஆட முயற்சிக்க, அவர் அவுட். அடுத்ததாக தோனி மைதானத்தில் இறங்க, அனைவருக்கும் அவ்வளவு ஆச்சர்யம். இன்னும் யுவராஜ் இருக்கிறாரே, ஏன் தோனி உள்ளே வந்தார் என இலங்கை வீரர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

ஒருபுறம் விக்கெட் விழ, எதிர்முனையில் கம்பீர் கம்பீரமாக நின்றது, இலங்கை அணிக்கு உறுத்தலாகவே இருந்தது. கம்பீரை அவுட் செய்ய நிறைய யுக்திகளை பயன்படுத்தினர். ஆனால், அதற்கு சற்றும் சளைக்காத கம்பீர் தன் ஸ்டைலில் பவுண்டரிகளாக ஆடி இந்திய அணிக்கு உறுதுணையாக இருந்தார். தோனியும் தன் பங்குக்கு விளாச ஆரம்பிக்க எதிரணியினர் என்ன செய்வதென்றே அறியாமல் திகைத்து நின்றனர். தோனியும் அரைசதத்தை நெருங்க போட்டி இன்னும் அனல் பறக்க ஆரம்பித்தது. தோனி அரைசதத்தை பூர்த்தி செய்தவுடன் பேக் கிரவுண்டில் ரஹ்மானின் ``வந்தே மாதரம்`` பாட்டு இசைக்க ஆரம்பிக்க இந்திய ரசிகர்களின் ஆரவாரம் இன்னும் அமர்களமானது. தோனி - கம்பீர் ஜோடி 109 ரன்கள் சேர்த்து அசத்தியது. அருமையாக விளையாடிய கம்பீர் நிச்சயமாக சதமடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 97 ரன்னில் பெரராவின் பந்தில் அவசரப்பட்டு இறங்கி வந்து போல்டானார்.

தோனியின் சிக்ஸர்

தோனியுடன் யுவி கை கோர்த்தார். இந்த ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்தியா இன்னும் 6 ஒவர்களில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. தோனி ஒவ்வொரு பந்தையும் சந்தித்த விதமே அவர் வெற்றி பெற துடிக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தியது. இருவரும் மாறி மாறி பவுண்டரிகளாக விளாச மைதானத்தில் யாரும் நாற்காலியில் அமரவே இல்லை. அந்த அளவிற்கு ஆரவாரம். 3 ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய தருணத்தில், தொடர்ந்து 2 பவுண்டரிகளை லெக் சைடில் கேப்டன் கூல், கூலாக அடிக்க இந்தியாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

அப்போதே அரங்கம் முழுவதும் இந்தியாவின் தேசிய கொடி பறக்க ஆரம்பித்தது. 2 ஒவரில் 5 எடுத்தால் வெற்றி என்ற நிலையில், யுவராஜ் சிங்கிள் தட்ட அடுத்த பந்தை தோனி சந்திக்க தயாரானார். வழக்கம் போல கையுறையை சரி செய்து, தோள்களை சிலுப்பி, தோனி பந்தை சந்திக்க தயாராக, அரங்கமே ``வீ வான்ட் சிக்சர்`` என்று முழங்க, தோனி பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸர் பறக்க விட, அனைவரும் வானத்தை பார்க்க, பந்து கேலரியில் போய் விழுந்தது.   தோனி பல மேட்ச்களில் சிக்ஸர் பறக்க விட்டு வெற்றியைத் தொட்டிருந்தாலும், இந்த சிக்ஸர் அவரின் ஆகச்சிறந்த ஒன்று. அவரது வாழ்நாளின் மிகச்சிறந்த சிக்ஸர் எனலாம். ஆட்டத்தின் முடிவில் தோனி 91 ரன்களுடனும் யுவராஜ் 21 ரன்களுடனும் களத்தில் நின்றனர். ரவி சாஸ்த்ரி, ``தோனி எப்பவும் போல அவர் பாணியில் போட்டியை முடித்தார்`` என்று வர்ணனை செய்ய, இந்தியாவே மகிழ்ச்சியில் தத்தளித்தது. இந்திய வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புத்தாண்டு, தீபாவளியை போல் அன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக இருந்தது.

மீடியாக்கள் வீரர்களை சூழ, ஆனந்த வெள்ளத்தில் இருந்தனர் நம் வீரர்கள். இந்தக் கோப்பையை நாங்கள் சச்சினுக்கு சமர்பிக்கிறோம் என்று கோப்பை வாங்கி, சச்சினிடம் கொடுத்த நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிக்க...கோலி, ரெய்னா, யூசுப் பதான் ஆகிய மூவரும் சச்சினை தோளில் சுமந்தபடியே மைதானத்தை வலம் வந்த காட்சி என்றும் நம் கண்களில் நிற்கும். இந்தியாவின் 28 ஆண்டுகால கனவு தோனியின் தலைமையில் நிறைவேறி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அனைவரும் தேசியக் கொடியைப் போர்த்தி மைதானத்தை சுற்றி வந்து ஆர்ப்பரித்த அந்த நிமிடம் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகன் வாழ்விலும் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பது நிதர்சனம். இந்த வெற்றி ஆறு வருடமல்லாமல் எத்தனை வருடங்கள் ஆனாலும் நினைத்தாலே இனிக்கும்...

 – உ.சுதர்சன் காந்தி

(மாணவப் பத்திரிகையாளர்) 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement