Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.பி.எல் தொடரில் முன்னணி வீரர்கள் விலகல்... காயம்தான் காரணமா? #IPL2017

இந்திய டி-20 திருவிழாவாகக் கருதப்படும் (IPL) ஐ.பி.எல் போட்டிகளின் 10-வது சீஸன், ஏப்ரல் 5-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கி, மே 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 56 லீக் போட்டி, பிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள், ஒரு ஃபைனல் என 60 ஆட்டங்கள் இந்த சீஸனில் நடக்கிறது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடும் இந்த சீஸனின் முதல் மற்றும் இறுதிப் போட்டி, ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. ஏப்ரல் 5-ம் தேதி, இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது. பிசிசிஜ நடத்தும் இந்த மிகப்பெரிய டி20 கிரிக்கெட் திருவிழா, நாளை தொடங்கும் நிலையில், முன்னணி வீரர்கள் காயம் காரணமாக தொடர்ந்து விலகி வருகின்றனர். இதனால் அந்தந்த அணிகளின் உரிமையாளர்கள், கடும் குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றனர். 

IPL

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பல இந்திய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் அதனைப் பொருட்படுத்தாது விளையாடினர். ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகளை மனதில் வைத்து, அவர்களின் ஃபிட்னெஸ் அளவுகளை முன்னேற்றுவதில் தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறது பிசிசிஜ. எனவே காயமடைந்துள்ள இந்திய வீரர்கள், ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம். இது தொடர்பாக பிசிசிஜ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ''அனைத்து விதப் போட்டிகளுக்கும் கேப்டன் விராட் கோலிக்கு, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் விளையாடுவது குறித்து, இரண்டு வாரம் கழித்து முடிவு எடுக்கப்படும். லோகேஷ் ராகுலுக்கு இடது தோள்பட்டையில் ஏற்பட்டிருக்கும் காயத்துக்காக, லண்டனில் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு, அடிவயிறு மற்றும் தொடைப்பகுதியில் (குடலிறக்கம்) வலி ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படுகிறது.

முரளி விஜய்க்கு வலது கையில் (மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை) ஏற்பட்டுள்ள காயத்துக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. இவர்களைத் தவிர ரவீந்திர ஜடேஜா (கை விரல்) மற்றும் உமேஷ் யாதவ் (இடுப்பு & முதுகு வலி) ஆகியோர், சிறுகாயங்களுடன் தொடர்ச்சியாகப் போட்டிகளில் விளையாடி வருவதால், இரண்டு வார காலம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இவர்கள் அனைவரும் இந்தத் தொடர் முழுக்க விளையாடுவது கேள்விக்குறியே. இவர்களில் ஒருசிலருக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையைப் பொறுத்து, 10-வது சீஸன் ஐ.பி.எல் போட்டிகளின் பிற்பகுதியில் விளையாட ஆரம்பித்து விடுவதற்கான சாத்தியங்களும் இருக்கிறது. 

IPL

இவர்களைத் தவிர, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும், காயம் காரணமாக விலகியுள்ளனர். ஜாகீர் கான் தலைமையில் களமிறங்கும் டெல்லி டேர்டேவில்ஸ் அணியில் இருக்கும் தென் ஆப்ரிக்க வீரர்களான குவின்டன் டீ காக் மற்றும் டூமினி ஆகியோர் காயமடைந்துள்ளனர். கடந்த சீஸனில், டெல்லி டேர்டேவில்ஸ் அணி சார்பில் அதிக ரன்களைக் குவித்த டீ காக் விலகியிருப்பது, அந்த அணிக்குப் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில்  ''டுமினி, டி காக் போன்ற திறமையுடைய வீரர்களை இழப்பது என்பது நிச்சயம் பின்னடைவே. ஏலத்துக்கு முன்பாகவே இது தெரிந்திருந்தால் எளிதாக இருந்திருக்கும், ஏனெனில் நாம் அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டிருக்கலாம். ஆனால் கிரிக்கெட்டில் இப்படித்தான் நடக்கும்; ஆனால் சாம் பில்லிங்ஸ், கோரே ஆண்டர்சன், ஏஞ்சலோ மேத்யூஸ் போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களுக்குக் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. என்றாலும் ஸ்ரேயாஸ் ஐயர், கருண் நாயர், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் போன்ற இந்திய வீரர்கள், தங்களது முழுத்திறமையையும் வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். இந்த அணியின் ஆரம்பப் போட்டிகளில், காயம் காரணமாக ஏஞ்சலோ மேத்யூஸ் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது. 

IPL

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. கடந்த சீஸனில் அந்த அணிக்காக 973 ரன்களை குவித்த வீராட் கோலி மற்றும் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் கே.எல்.ராகுல் ஆகியோர் ஏற்கெனவே விலகிவிட்டனர். 2008-ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து, இதுவரை ஒரே ஒரு போட்டியைத்தான் கோலி மிஸ் செய்திருக்கிறார். இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறியதாவது, ''ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தொடர்ச்சியாக 5 அரைச்சதங்களை அடித்து, சிறப்பான ஃபார்மில் இருந்த கே.எல்.ராகுல் விலகியது மைனஸ்தான். அதே போல மிட்செல் ஸ்டார்க்  காயமடைந்திருப்பதால், அவரது இடத்தை டைமல் மில்ஸ் அல்லது ஆடம் மில்னே ஆகியோர் நிரப்புவார்கள்'' என்றிருக்கிறார். கோலி விலகியதால், டிவில்லியர்ஸ் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 30-ல், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் டிவில்லியர்ஸ், முதுகுவலி காரணமாக களமிறங்கவில்லை. இந்த அணிக்கு அது மேலும் ஒரு சோதனையாகவே கருதப்படுகிறது. அதிரடி இளம் வீரரான சர்ப்ராஸ் கானும் காயத்தினால் தொடரிலிருந்து விலகியுள்ளார். முதல் போட்டியில் ஷேன் வாட்சன் தலைமையில் களமிறங்குகிறது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ். 

IPL

அதேபோல கடந்த சீஸனில் தோனி தலைமையில் அறிமுகமான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி, இந்தமுறை ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களமிறங்குகிறது. ஏற்கெனவே அஸ்வின் விலகியுள்ள நிலையில், இந்தியா - ஆஸி டெஸ்ட் தொடரின் போதே காயத்தினால் வெளியேறிய ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ், இம்முறை ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார். எனவே இவருக்கு மாற்றாக, உலகின் நம்பர்-1 பந்துவீச்சாளரான இம்ரான் தாகீரை தேர்ந்தெடுத்துள்ளது புனே அணி நிர்வாகம். கடந்த சீஸனில் இதே அணிக்காக நான்கு போட்டிகளில் மட்டுமே ஆடிய கெவின் பீட்டர்சன், இடையிலேயே காயம் காரணமாக விலகினார். அவர் இந்த சீஸனிலும் பங்கேற்க இயலாது எனத் தெரிவித்துவிட்டார். 

IPL

கடந்த சீஸனில் முரளி விஜய் தலைமையில் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இம்முறை மேக்ஸ்வெல் தலைமையில் களம்காண உள்ளது. ஏற்கெனவே முரளி விஜய் விலகியுள்ள நிலையில், இந்த அணியால் 50 லட்ச ரூபாய்க்குப் பெறப்பட்ட மார்ட்டின் குப்திலும், காயம் காரணமாக இந்த அணியின் ஆரம்பப் போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் தகவல்கள் வருகின்றன. நடப்புச் சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த முஸ்டாபிஸூர் ரஹ்மான், அந்த அணியின் ஆரம்பப் போட்டிகளில் களமிறங்குவது சந்தேகம். வங்கதேச அணி, தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருவதே இதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.

சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியில், ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் காயத்தினால் அவதிப்படுகின்றனர். கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற பிக் பாஷ் லீக்கின் போது காயமடைந்த பிராவோ, அத்தொடரின் பாதியிலேயே விலகினார். இது அந்த அணிக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது போகப் போகத்தான் தெரியும். 

IPL

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த ஆன்டிரே ரஸல், ஊக்கமருத்து சர்ச்சையால் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் இவரும் ஆடமாட்டார். உமேஷ் யாதவும் காயத்தால் அவதிப்படும் நிலையில், இதைப் பற்றி அந்த அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் கூறியதாவது, '' கொல்கத்தா அணியின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக ரஸல் இருந்தார். அவரது இழப்பை ஈடுகட்டுவது மிகவும் கடினம். அதை ஈடுகட்ட வேண்டுமானால், அணியில் உள்ள மற்ற வீரர்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். என்னைத் தவிர, அணியில் உள்ள இந்திய பேட்ஸ்மேன்களான மணிஷ் பாண்டே, சூர்ய குமார் யாதவ், ராபின் உத்தப்பா, யூசுப் பதான் ஆகியோர் தங்களது பொறுப்பை உணர்ந்து, மேலும் சிறப்பாக ஆடுவதற்கு முயற்சிக்க வேண்டும். உமேஷ் யாதவ் விளையாடுவது சந்தேகமாக இருந்தாலும், அணியில் டிரெண்ட் போல்ட் இடம்பெற்றிருப்பது கூடுதல் பலம். ஜெய்தேவ் உனத்கட் அவருக்கு பக்கபலமாக இருப்பார். சுழற்பந்து வீச்சில் சுனில் நரைனுடன், பியுஸ் சாவ்லா மற்றும் ''சைனாமேன் பவுலர்'' குல்தீப் யாதவ் அணிக்கு வலுசேர்ப்பார்'' என்றார். தற்போது ரஸலுக்கு மாற்றாக, ஆல்ரவுண்டரான காலின் கிராண்ட்ஹோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

IPL

ஒருபுறம் காயத்தால் பலர் அவதிப்படும் நிலையில், ஏற்கெனவே காயமடைந்த வீரர்கள் தற்போது முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாராக இருக்கின்றனர். இந்தியாவைச் சேர்ந்த ரோஹித் சர்மா, முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அந்தப் பட்டியலில் முதன்மையானவர்கள் ஆவர். இவர்களுடன் இந்த வருடம் ஐ.பி.எல் ஏலத்தின் போது ஆச்சரியத்தை ஏற்படுத்திய முகமது சிராஜ், முகமது நபி, நடராஜன் ஆகியோருடன், இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்கும் கனவுடன்  ஷிகர் தவான், யூசுப் பதான் போன்ற பலர் காத்திருக்கின்றனர். எனவே  நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கும் இவர்கள், இந்த ஐ.பி.எல் தொடரில் அசத்தினால், சாம்பியன்ஸ் டிராஃபிக்காக இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது!

 - ராகுல் சிவகுரு.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement