வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (04/04/2017)

கடைசி தொடர்பு:16:49 (05/04/2017)

முடிவுக்கு வந்தது 33 வருட சகாப்தம்... மிஸ் யூ அண்டர்டேக்கர்!

`தி அண்டர்டேக்கர்', உலகெங்கிலும் உள்ள ரெஸ்ட்லிங் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்திருக்கும் பெயர். அதை செய்ய கிட்டதட்ட 33 ஆண்டுகள் உதிரம் சிந்தி, எலும்புகள் நொறுங்க, சதை கிழிந்து சண்டை போடவேண்டியிருந்தது மார்க் காலவேவுக்கு.

 

1965 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் வசித்துவந்த ஃபிரான்ட் காம்ப்டன் காலவேவுக்கு ஐந்தாவது ஆண் குழந்தையாக பிறந்தான் மார்க் காலவே. சிறுவயதில் இருந்தே விளையாடுவதில் அவனுக்கு பெரிதளவில் ஆர்வம் இருந்தது. கடைக்குட்டி மார்க் காலவேவுக்கு தனது நான்கு அண்ணன்களுடன் இணைந்து விளையாடுவது தான் ஒரே பொழுதுபோக்கு. தனது பள்ளியின் கால்பந்து மற்றும் கூடைப்பந்து அணிகளிலும் நட்சத்திர ஆட்டக்காரனாக வலம் வந்தான். ஆறே முக்கால் அடி உயரமும் ஒல்லியான தேகமும் கூடைபந்து விளையாட்டில் பெரும் பக்கபலமாய் அமைய, நிறைய விளையாடி, நிறைய வென்றான்.

அந்த தகுதி, ஏஞ்சலினா கல்லூரியில் பட்டப்படிப்பு பயிலும் வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தது. அங்கு படித்து பட்டம் பெற்ற பின்னர் டெக்சாஸ் வெஸ்லியான் பல்கலைகழகத்தில் விளையாட்டுத் துறை சம்பந்தமாக சில காலம் படித்தான். அந்த சமயத்தில்தான் மார்க் காலவேவுக்கு மல்யுத்தம் மீது ஈடுபாடு ஏற்பட ஆரம்பித்தது. நாளடைவில், கூடைப்பந்து விளையாட்டையே மறந்துபோய், 'மல்யுத்தம் தான் வாழ்க்கை' என மாறினான். 

உலகசாம்பியன் ஷிப்


டெக்ஸாஸ் மாகாணத்தில் இயங்கிவந்த பிரபல ரெஸ்ட்லிங் நிறுவனமான WCCW-வில் `டெக்ஸாஸ் ரெட்' என்ற பெயரில் 19-வது வயது இளைஞனாக அறிமுகமானார் மார்க் காலவே. முதல் போட்டியே தோல்வி. நான்கு ஆண்டுகள் கழித்து WCCW நிறுவனத்தில் இருந்து வெளியேறி CWA நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கே `மாஸ்டர் பெய்ன்' என்ற பெயரில் மல்யுத்தம் செய்துவந்த மார்க், அந்த ஆண்டின் ஏப்ரல் 1 ஆம் தேதி, அப்போதைய சாம்பியன் ஜெரி லாலரை எளிதில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். மல்யுத்த போட்டிகளில் அவர் பெற்ற முதல் சாம்பியன்ஷிப் பட்டம் அது. மார்க்கின் ஆறே முக்கால் அடி உயர உடம்பும், மல்யுத்த அசைவுகளும் அவரை ஊர் முழுக்க பிரபலமாக்கியது. `மல்யுத்த வீரனாவதற்காகவே பிறந்தவன்' என ரசிகர்கள் மெச்சினர். அந்த வார்த்தைகள் தான் அப்போதைய உலகின் மிகப்பெரிய தொழில்முறை மல்யுத்த நிறுவனங்களில் ஒன்றான WWF/WWE-ற்கு அவரை கூட்டிச் சென்றது. 

மினிஸ்ட்ரி ஆஃப் டார்க்

1990 ஆம் ஆண்டு `சர்வைவர் சீரிஸ்' போட்டியில் டெட் டிபியாஸியின் 'மில்லியன் டாலர்' அணிக்கும் டஸ்டி ரோட்ஸின் 'ட்ரீம்' அணிக்கும் இடையே `4 ஆன் 4 எலிமினேஷன் மேட்ச்' நடத்த திட்டமிட்டது WWE. மேலும், டெட் டிபியாஸியின் மில்லியன் டாலர் அணியில் மர்ம மனிதர் ஒருவர் விளையாடுவார் எனவும் விளம்பரம் செய்தது. மார்ச் 22,1990 ஆம் நாள் ஹார்ட்போர்ட் நகரின் சிவிக் சென்டரில் பிரம்மாண்டமாக துவங்கியது `சர்வைவர் சீரிஸ்' போட்டி. `யார் அந்த மர்ம மனிதன்?' என மக்கள் ஆர்வமாய் காத்திருந்தார்கள்.

இரு அணி வீரர்களும் மேடையேறிய பின், மில்லியன் டாலர் அணியின் தலைவர் டெட் டிபியாஸி மைக்கை வாங்கி இப்படி அறிவித்தார். `என் அணியில் விளையாடவிருக்கும் அந்த மர்ம மனிதனை அழைக்கிறேன். 320 பவுண்ட் எடை கொண்ட டெத் வேலி ( மரண பள்ளத்தாக்கு ) பகுதியைச் சேர்ந்த `தி அண்டர்டேக்கர்' உங்கள் முன் இதோ'... கருப்பு நிற லாங் கோட், கருப்பு நிற தொப்பி, பழுப்பு நிற லாங் பூட் அணிந்து 6 10' உயரத்தில் அரங்கித்திற்குள்ளே நுழைந்த அண்டர்டேக்கரை பார்த்து மக்கள் அரண்டுபோனார்கள்.

அண்டர்டேக்கரின் ஹிட் வரலாறு 25 படங்களில்!

போட்டி ஆரம்பித்த ஒரே நிமிடத்தில் கோகோவிற்கு ‛டாம்ப் ஸ்டோன் பைல் டிரைவர்’ போட்டு, போட்டியிலிருந்து அண்டர்டேக்கர் வெளியேற்றிவிட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பேரமைதியும், பெருங்கோபமும் ஒரு சேர கலந்திருந்த அண்டர்டேக்கரின் கண்கள் அவர்களை என்னவோ செய்தது. அப்போது தன்னைப் பார்த்தபோது ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஒருவிதமான உணர்வை, அந்த வியப்பை தன் கடைசி போட்டியின் போதும் ஏற்படுத்தியது தான் அவரின் சாதனை.

1990 ஆம் ஆண்டு `சர்வைவர் சீரிஸ்' போட்டியில் அறிமுகமான அண்டர்டேக்கர் அதற்கு அடுத்த ஆண்டு நடந்த 'சர்வைவர் சீரிஸ்' போட்டியிலேயே உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டம் ஜெயித்தார். அதுவும், அப்போதைய WWE சூப்பர் ஸ்டார் ஹல்க் ஹோகனை எதிர்த்து. அதன் பிறகு அண்டர்டேக்கர் இல்லையேல் WWE இல்லை என்றாகிவிட்டது. உலக ஹெவி வெயிட் சாம்பியன்ஷிப், ஹார்ட்கோர் சாம்பியன்ஷிப், WWE சாம்பியன்ஷிப் என எல்லா சாம்பியன்ஷிப்களையும் தனது தோள்களில் தாங்கியிருக்கிறார் அண்டர்டேக்கர்.

அமெரிக்கன் படாஸ்

`ரெஸ்ட்ல்மேனியா' போட்டிகளில் வேறெந்த வீரரும் செய்யாத சாதனையாக 25 முறை சண்டையிட்டுள்ளார். அதிலும் தொடர்ச்சியாக 21 போட்டிகளில் வென்றிருக்கிறார். ரெஸ்ட்லிங் வரலாற்றில் எட்டமுடியாத சாதனையாக இது கருதப்படுகிறது. WWE நிறுவனம் `மன்டே நைட் ரா' நிகழ்ச்சியை தொடங்கியதிலிருந்து இன்றுவரை அதில் சண்டையிட்டு வரும் ஒரே வீரன் அண்டர்டேக்கர் மட்டுமே. ஹல்க் ஹோகன் ஆரம்பித்து ஸ்டீவ் ஆஸ்டின், தி ராக், ஜான் செனா, ரோமன் ரெயின்ஸ் வரை எல்லா தலைமுறையினருடனும் மல்லுக்கட்டியிருக்கிறார். அண்டர்டேக்கரை எதிர்த்து சண்டையிடுவதையே தான் வாழ்க்கையில் பெற்ற பெரும் வரமாக பார்க்கிறார்கள் மல்யுத்த வீரர்கள். இளம் திறமைகளை கண்டறிந்து அவர்களுடன் சண்டையிட்டு அவர்களை வளர்த்துவிடவும் செய்வார் அண்டர்டேக்கர். ப்ராக் லெஸ்னர், ரேன்டி ஆர்டன், பட்டிஸ்டா என சொல்லிக்கொண்டே போகலாம். 

பிஜி எரா அண்டர்டேக்கர்


இளைஞர்களுக்கு நிகராக சிறுவர் கூட்டமும் WWE போட்டிகளுக்கு ரசிகர்களாக இருந்துவருகின்றர். பறந்து பறந்து அடிப்பது, கலர்ஃபுல்லான ஆடைகள் அணிவது, நகைச்சுவையாக பேசுவது போன்ற அம்சங்கள் தான் குழந்தைகளை ரசிக்கவைக்கும். ரே மிஸ்டிரியோ, ஜான் செனா போன்றோரை குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்க காரணம் இது தான். ஆனால், இது எதுவும் இல்லாமலேயே குழந்தைகளை ரசிக்கவைத்தவர் அண்டர்டேக்கர். கருப்பு நிறங்களில் ஆடைகள் அணிந்துகொண்டும், பயமுறுத்தும் உடல்மொழிகளை கொண்டுமே அதை செய்து காட்டினார். ஆக்ரோஷத்தில் சண்டையிட்டு கொண்டிருக்கும் அண்டர்டேக்கர் திடீரென ரெஃப்ரிக்களை திரும்பி ஒரு பார்வை பார்ப்பார். அதில் பயந்துபோய் ரெஃப்ரிக்கள் தெறித்து ஓடுவார்கள்.

ஒருமுறை ஸ்டோரி லைனுக்காக பிக்பாஸ் மேன் என்பவரை அண்டர்டேக்கர் தூக்கில் ஏற்றினார். மேன்கைன்டுடன் அவர் சண்டையிட்ட 'ஹெல் இன் எ செல்' போட்டியை பிளாக் அண்ட் ஒயிட்டில் பார்த்தாலும் ரத்த சிவப்பில் தான் தெரியும். உயிரோடு புதைப்பது, எரிப்பது என எத்தனையோ கண்கட்டு வித்தைகளை நிகழ்த்தி கதிகலங்க வைத்திருக்கிறார். 30 நிமிட சண்டையும் போட்டிருக்கிறார், 18 நொடிகளிலேயே மேட்சையும் முடித்திருக்கிறார். ரெஸ்ட்லிங் அரங்கில் அண்டர்டேக்கர் செய்யும் ஒவ்வொரு அசைவும் புத்தகத்தில் இருப்பவை.

தொழில்முறை ரெஸ்ட்லிங் போட்டிகளில் அண்டர்டேக்கர் அளவு நுட்பம் மற்றும் திறனோடு சண்டையிடும் ஆளே கிடையாது. வெவ்வெறு அவதாரங்கள், ஓட்டி வந்த புல்லட்டுகள், சண்டை நுணுக்கங்கள்,பட்டப்பெயர்கள், கேன் உடனான ஆன் ஸ்கிரின் உறவு என அண்டர்டேக்கரை பற்றி பேச எத்தனையோ இருக்கிறது. இப்படி பல எட்டமுடியாத சாதனைகளைப் புரிந்து, தொழில்முறை மல்யுத்த அரங்கில் மகுடம் சூடா மன்னனாக வலம் வந்த அண்டர்டேக்கர் நேற்றிலிருந்து வரலாறு ஆகிவிட்டார்.

 

அண்டர்டேக்கரின் ஹிட் வரலாறு 25 படங்களில்!

மார்க் காலவே தனது `அண்டர்டேக்கர்' அடையாளத்திற்கு ஓய்வு கொடுத்துவிட்டார். வயதில் அரை சதத்தை கடந்துவிட்ட மார்க் காலவே ரெஸ்ட்லிங் போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்டார். ரெஸ்டில்மேனியா போட்டிகளின் 21 வருடங்களாக 21-0 என விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டு வந்த அண்டர்டேக்கர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ப்ராக் லெஸ்னரிடம் தோல்வியடைந்தபோதே அவரது ரசிகர்கள் உடைந்துபோய்விட்டனர். மேலும், முதுமையால் தளர்ந்த உடல், சுருங்கிய தோல்களோடு அண்டர்டேக்கர் சண்டையிடுவதை பார்க்க அவர்களுக்கு மனமில்லை. அப்போதே ஓய்வை அறிவித்துவிடுவார் என எதிர்பார்த்தனர். எனவே, அவர்களுக்கு இந்த ஓய்வு அறிவிப்பு நிம்மதியைத் தான் தந்திருக்கும். ஆனால், அடுத்த தலைமுறை ரெஸ்ட்லிங் ரசிகர்கள் நிச்சயமாக ஒரு மாவீரனை இழந்திருக்கிறார்கள்.

ரெஸ்ட் இன் ஹோம் மார்க்...

-ப.சூரியராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்