Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பயஸ் - பூபதி ‘ஈகோ’ சண்டை... பாதிப்பு யாருக்கு?

லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதியின் நட்பு எந்த லெவல் என்பதை டென்னிஸ் உலகம் அறியும். சமீபத்தில் டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. பூபதி ‘நான் பிளேயிங்’ கேப்டன். பயஸ் சீனியர் பிளேயர். இருவரும் இணைந்து ஒரு காலத்தில் குவித்த பட்டங்கள் ஏராளம். இப்போது இருவருக்கும் பிராப்ளம். ஆனால், பூபதிக்கு கீழ் பணிபுரியும் நிலையில் பயஸ். அப்படி இருக்க, டேவிஸ் கோப்பை தொடரில் ஏதாவது புகைச்சல் வரணுமே? ஆம், வந்தது.

பெங்களூரில் டேவிஸ் கோப்பை ஆசிய - ஓசினியா குரூப் -1 சுற்றில் உஸ்பெகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா. இதில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று இறுதி செய்யப்பட்டது. ‘இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா உடன் தமிழக வீரர் ஸ்ரீராம் பாலாஜி ஜோடி சேர்வார்’ என பிரஸ் மீட்டில் தெரிவித்தார் மகேஷ் பூபதி. பயஸுக்கு தூக்கி வாரிப் போட்டது. 1990-ல் இருந்து டேவிஸ் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடி வருகிறார். முதன்முறையாக 27 ஆண்டுகளுக்குப் பின் ஒரு பிரேக்? இது பிரேக்தானா இல்லை முடிவுரையா?

பயஸ்

களத்தில் இறங்க வேண்டியவரை பார்வையாளர்களில் ஒருவராக்கியதற்கு பூபதி சொன்ன விளக்கம் இதுதான். ‘‘பயஸ் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து பயிற்சி பெற்று வருகின்றனர். பயஸ் புதன்கிழமைதான் வந்து சேர்ந்தார். மூன்று கேம் மட்டுமே பிராக்டீஸ் செய்தார். பின் மழை குறுக்கிட்டது. ஆனால், மற்ற வீரர்கள் தினமும் மூன்று செட் வரை விளையாடி வருகின்றனர். ஒரு அணியாக இருக்கின்றனர். அவர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. தேவையில்லாமல் இரட்டையர் பிரிவில் சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை. தவிர, கிரவுண்ட் ஸ்ட்ரோக் மற்றும் சர்வ் வீசுவதில் வல்லவர்களை இரட்டையர் பிரிவுக்கு தேர்வு செய்திருக்கிறோம்’’ என்றார் பூபதி. அவர் சொல்வது சரிதான். பயஸ் 200 கி.மீ வேகத்தில் சர்வ் செய்து நாளாச்சு.

இதெல்லாம் ஒரு காரணமா பாஸ் என நினைக்கலாம். பயஸ் முன்புபோல இல்லை. வயது 43. தன் ‘ப்ரைம் டைம் ஓவர்’ என்பதை உணராத விளையாட்டு வீரர்களிலும் அவரும் ஒருவர். 2015-ல் மூன்று கிராண்ட் ஸ்லாம் வென்றார். 2016-ல் ஃபார்ம் சுத்தம். தரவரிசையில் 72-வது இடம். 2001-க்குப் பின் இதுவே அவரது மோசமான ரேங்கிங். மொத்தம் 18 கிராண்ட் ஸ்லாம் வென்றிருந்தும் தன் ஆட்டத்தை மீட்டெடுக்க, ஏ.டி.பி டூர்ஸ் தொடர்களில் பங்கேற்றார். அப்படி ஒருபோட்டியான லியான் சேலஞ்சர் தொடரில் தான் கடந்த வாரம் பட்டம் வென்றார்.

போட்டி முடிந்து மெக்ஸிகோவில் இருந்து பெங்களூரு திரும்புவதற்கு லேட் ஆகி விட்டது. போதிய பயற்சியும் செய்யவில்லை. நம்மை யார் தடுக்க முடியும் என்றிருந்தவரை, பூபதி ஓரங்கட்டி விட்டார். இந்த இடத்தில் தான் இருவருக்கும் இடையே ஈகோ எட்டிப் பார்த்தது.

‘நாட்டுக்காக விளையாடுவது பெருமை’ என அடிக்கடி சொல்வார் பயஸ். ஆனால், இந்தியாவுக்காக விளையாடும் போட்டிகளுக்கு தயாராவதில் மெத்தனமாக இருப்பார்.  ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தாமதமாக சென்று, ஒருமுறை கூட தன் ஜோடி ரோகன் போபண்ணாவுடன் இணைந்து பிராக்டீஸ் செய்யாமல், தெமேவென விளையாடினார். போபண்ணா - பயஸ் ஜோடி விளையாடிய போட்டியில் ஒரு விறுவிறுப்பே இல்லை. விளைவு இந்தியா தோல்வி. அதையேதான் இன்று டேவிஸ் கோப்பையிலும் தொடர நினைத்தார். நேரடியாக வந்து போட்டிகளில் மட்டும் ஆடிச் செல்ல நினைத்தார். அதற்கு பூபதி அனுமதிக்கவில்லை. தவிர, பயஸ் உடன் ஜோடி சேர்வதை போபண்ணாவும் விரும்பவில்லை. எல்லோரும் சேர்ந்து பயஸை ஓரமாக உட்கார வைத்து விட்டனர். 

‘‘ஒரு கேப்டனாக அணியைத் தேர்வு செய்ய பூபதிக்கு உரிமை உண்டு. விதிமுறைப்படி பார்த்தால் நான் விளையாடுவதற்குத் தகுதியானவன். ஆனால், அணி நிர்வாகம் அதைப் புறக்கணித்து விட்டது. நாட்டுக்காக விளையாட வேண்டும், பெங்களூரு சூழலுக்கு என்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே மலைப் பிரதேசம் அமைந்துள்ள இடங்களில் பிராக்டீஸ் செய்தேன். நான் பங்கேற்றது ஏ.டி.பி. சேலஞ்சர் தொடரில், Futures தொடரில் அல்ல. ஒரு போன் கால் இந்த எல்லா பிரச்னைகளுக்கும் முடிவாக அமைந்திருக்கும்’’ என்றார் பயஸ்.

ஆத்திரத்தில் பயஸ் சில உண்மைகளையும் சொல்லி விட்டார். ரோஜர் ஃபெடரருக்கு நிகராக இரட்டையர் பிரிவில் கிராண்ட் ஸ்லாம்களை அடுக்கி வைத்திருக்கும் பயஸ், சேலஞ்சர் தொடரில் பங்கேற்று தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை அவர் சொல்வது உண்மையாகவே இருந்தாலும், ஒரு பிரதான போட்டிக்கு முன்னதாக, இரு வீரர்களும் சேர்ந்து பிராக்டிஸ் எடுக்க வேண்டியது அவசியம் இல்லையா? ஒலிம்பிக், டேவிஸ் கோப்பை என இந்திய அணிக்காக விளையாடும் போட்டிகளை இவ்வளவு அஜாக்கிரதையாகத்தான் எதிர்கொள்வதா?

ஒரு வகையில் கேப்டன் என்ற முறையில் மகேஷ் பூபதியின் மீதும் தவறு இருக்கிறது. உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி ஒரு மாதத்துக்கு முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது. பயஸ், பூபதி இருவரும் ‘ரிசர்வ்’ வீரர்களாகத்தான் இடம்பெற்றிருந்தனர். அப்படி இருக்க, இருவரும் இணைந்து முன்கூட்டியே பேசி இருந்தால் இந்த பஞ்சாயத்தே வந்திருக்காது. என்ன சொல்ல... இருவருக்கும் ஈகோ.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement