வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (08/04/2017)

கடைசி தொடர்பு:12:40 (08/04/2017)

2017 ஐ.பி.எல். சாம்பியன் யார்? வாசகர்கள் கணிப்பு!

மூன்று நாட்களுக்கு முன்பாக 2017 ஐபிஎல் சாம்பியன் யார் என விகடன்.காம் வாசகர்களிடம் ஒரு சர்வே நடத்தியிருந்தோம். நான்கு முக்கியமான கேள்விகளோடு இடம்பெற்ற அந்த சர்வேயில் பல வாசகர்கள் பங்கெடுத்தனர். ஒவ்வொரு கேள்விக்கும், ரசிகர்கள் தந்திருந்த பதிலை பார்க்கும்போது, ரசிகர்களின் மனநிலை வெகுவாக மாறியிருப்பதை உணர முடிகிறது. ஐபிஎல் சர்வே  முடிவுகள் இங்கே 

1. ஐபிஎல் 2017 கோப்பையை  எந்த அணி ஜெயிக்கும்? 

பொதுவாக சென்னை சூப்பர் கிங்ஸ் இருந்த சமயங்களில், சிஎஸ்கேவுக்கும் - மும்பைக்கும் இடையிலான மேட்சில் அனல் தெறிக்கும். இந்த இரண்டு அணிகளுக்கும் பெரும் ரசிக பட்டாளம் உண்டு. இந்த சீசனில்  சிஎஸ்கே இல்லை. இந்நிலையில், எந்த அணி கோப்பையை ஜெயிக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு அநேகம் பேர்  சொல்லியிருப்பது மும்பை இந்தியன்ஸ் தான். எட்டு அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் மட்டுமே 21% வாக்குகளை பெற்று தனித்துத் தெரிகிறது.

இரண்டாவது இடத்தில், குஜராத் லயன்ஸ் நிற்கிறது. மூன்றாவது இடத்தில் பெங்களூரு அணி உள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை விட ஒரு வாக்கு குறைவாக பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது புனே அணி. சன் ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தாவுக்கு சம  வாக்குகள் விழுந்துள்ளன. டெல்லி அணிக்கு மிகக்குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன. 

வாசகர்கள் சர்வே - ஐபிஎல்

வாசகர்கள் வாக்கு அடிப்படையில் கோப்பையை வெல்லும் அணி என கணிக்கப்பட்டவை இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 

1. மும்பை இந்தியன்ஸ் 

2. குஜராத் லயன்ஸ் 

3. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 

4. புனே சூப்பர் ஜெயன்ட் 

5. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

6. சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் 

7. கிங்ஸ் லெவன் பஞ்சாப் 

8. டெல்லி டேர்டெவில்ஸ் 

2. எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்? 

ஐபிஎல்லில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதே கவுரவம் சார்ந்த விஷயமாக கருதப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே தான் இருந்த எட்டு சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி. அந்த சாதனை இன்றளவும் பெருமைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனில், எந்தெந்த அணிகள் பிளே ஆஃபுக்கு தகுதி பெறும் என  ஒரு கேள்வி கேட்டிருந்தோம். கோப்பையை ஜெயிக்கும் அணிக்கான கேள்விக்கு வந்த பதிலும், இந்த கேள்விக்கான பதிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. 

18 % வாக்குகளோடு மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு அணியும் உள்ளன. சதவிகித அடிப்படையில் சமம் என்றாலும், மும்பையை விட பெங்களூரு இரண்டு வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது. மூன்றாவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.  13.6 % பெற்று அடுத்தபடியாக குஜராத் அணியும், ஹைதராபாத் அணியும் உள்ளன. எனினும் வாக்குகள் அடிப்படையில் குஜராத்தை விட ஒரு வாக்கு கூடுதலாக பெற்றுள்ளது ஹைதராபாத். இதிலும் கடைசி இடம் டெல்லிக்குத் தான். 

வாசகர்கள் சர்வே - ஐபிஎல்

வாசகர்கள்  வாக்குகள் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் என கருதப்படுபவை இவை தான் :-

1. மும்பை இந்தியன்ஸ் 

2. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 

3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

4. சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.

3. இந்த சீசனில் கடைசி இடம் பிடிக்கப்போகும் அணி எது? 

மிக அதிக வாக்குகளையோடு இதில் ஜெயித்திருப்பது (!) டெல்லி  டேர்டெவில்ஸ் தான். இதற்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை வாங்கியிருப்பது (!) கிங்ஸ் லெவன் பஞ்சாப். இந்த இரண்டு அணிகளுக்கு மட்டும் 48% வாக்குகள்  கிடைத்துள்ளன. பெங்களூரு அணி மற்றும் கொல்கத்தா அணி நிச்சயம் கடைசி இடம் பிடிக்காது என வாசகர்கள் பெரும் நம்பிக்கை வைத்திருப்பது தெரிகிறது. 

4. எந்த கேப்டனுக்கு உங்கள் சப்போர்ட் ? 

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவு சுரேஷ் ரெய்னாவுக்கு இருக்கிறது. குஜராத் அணியில், ஐந்து பேர்  சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்கள் இருப்பதால் ரெய்னாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கலாம் எனத் தெரிகிறது. 

வாசகர்கள் சர்வே ஐபிஎல்

சுரேஷ் ரெய்னாவுக்கு  அடுத்தபடியாக விராட் கோலி எக்கச்சக்க வாக்குகள் பெற்றிருக்கிறார். இவர்கள் இருவருக்கு மட்டுமே 55.1% வாக்குகள் கிடைத்துவிட்டன. மீதி 44.9 % வாக்குகள் தான் மற்ற கேப்டன்களுக்கு கிடைத்தன. கோலிக்கு அடுத்தபடியாக, ரோஹித் ஷர்மாவுக்கு சப்போர்ட் கிடைத்திருக்கிறது. மேக்ஸ்வெல்லுக்கு வெகு சொற்பமான ஆதரவே கிடைத்திருக்கிறது. 

5  பத்தாவது ஐபிஎல் சீஸனில் யார் அதிக ரன்கள் குவிப்பார்? யார் அதிக விக்கெட்டுகளை அள்ளுவார்? சென்னை அணி இல்லாதது குறித்து உங்கள் கருத்து என்ன உள்ளிட்டவற்றை இந்த பெட்டியில் உள்ளிடவும்.  - இது கடைசி கேள்வி. 

ரெய்னா  தான் அதிக ரன்கள் குவிப்பார் என அதிகளவிலான ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். அவருக்கு அடுத்தபடியாக டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோரை ரசிகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

டுவைன் பிராவோ, ஆசிஷ் நெஹ்ரா, ஆடம் ஜாம்பா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் அதிக விக்கெட்டுகள் வீழ்த்துவார்கள் என ரசிகர்கள் கணித்துள்ளார்கள். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், இன்னும் ஒரு போட்டி கூட ஆடாத,  தமிழகத்தை சேர்ந்த நடராஜன் இந்த ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுங்கள் வீழ்த்துவார் என எக்கச்சக்கம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். சிஎஸ்கே இல்லாதது குறித்து சிலர் ஃபீல் செய்தாலும், சூதாட்டம் போன்ற புகாரில் சிக்கிய அணியைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தது மகிழ்ச்சி என நிறைய பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 

சர்வேயில் பங்கெடுத்த வாசகர்களுக்கு நன்றி . 

- பு.விவேக் ஆனந்த்