வெளியிடப்பட்ட நேரம்: 15:44 (09/04/2017)

கடைசி தொடர்பு:17:47 (10/04/2017)

வலுவான கொல்கத்தாவை வென்று வெற்றிக் கணக்கைத் தொடங்குமா மும்பை இந்தியன்ஸ்? #MatchPreview #MIvsKKR

ஐபிஎல் தொடரின்  அணிகளுள் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் முக்கியமானவை. ரோஹித் ஷர்மா, கவுதம் கம்பீர் இருவருமே அருமையான கேப்டன்கள். இருவருமே இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்குத் தலைமை ஏற்றவர்கள். இந்த  அணிகளின் பிள்ளையார்சுழி இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் சச்சினும் கங்குலியும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆக, அவர்கள் இருந்த காலத்தில் இருந்தே இந்த கடும் போட்டியானது இருந்துகொண்டே தான் இருக்கிறது. மற்ற அணிகளுடன் இந்த இரண்டு அணிகள் மோதுவதைவிட இவ்விரண்டு அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி மிகுந்த சுவாரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

மும்பை இந்தியன்ஸ் ரோஹித் ஷர்மா vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கம்பீர்

மும்பை அணியைப் பொறுத்தவரை, சென்ற வருடம் விளையாடிய மார்டின் கப்தில் இந்த முறை மும்பை அணியில் இல்லை. சிம்மன்ஸிற்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் விளையாடமாட்டார். கடந்த சில போட்டிகளில் பேட்டிங் ஆர்டரில் சில பேட்ஸ்மேன்கள் சற்று  சறுக்கி இருந்தாலும் கேப்டன் ரோஹித், இங்கிலாந்தின் பட்லர், பார்த்திவ் படேல், ராயுடு ஆல்ரவுண்டர் பொலார்ட் என பேட்டிங் பட்டியல் வலுவாகவே  வைத்திருக்கின்றது மும்பை இந்தியன்ஸ். ரோஹித் கடந்த 6 மாதங்களாக விளையாடாமல் இருப்பதினால் அவரது ஆட்டத்தை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். பொலார்ட் வழக்கம் போல் சிக்ஸர்களில் அசத்துவார் என்ற நம்பிக்கையும் மும்பை ரசிகர்கள் மத்தியில் உள்ள ஆழமான உண்மை. மிடில் ஆர்டரில் களமிறங்கும் மும்பையின் ஃபேவரைட் பாய் ஹார்டிக் பாண்டியா தன் பங்கிற்கு பேட்டிங்கிலும் பௌலிங்கிலும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.

 பந்து வீச்சில்,  மலிங்கா இல்லாத குறையை ஜான்சன் தீர்க்கலாம்.  ஏற்கனவே, மும்பையில் விளையாடிய இவர், இடையில் பஞ்சாப் அணிக்காக விளையாடி தற்போது மீண்டும் மும்பைக்கு திருப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. மலிங்கா சமீபத்தில் தான் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். அவர் சோர்வாக இருப்பதால், இன்றைய போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் தான்.  மேலும், `பூம் பூம்` பும்ரா, வினய் குமார், டிம் சவுத்தி, மெக்லனகன் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களையும், சுழற்பந்துவீச்சில் ஹர்பஜன்,  கார்ன்  ஷர்மா போன்றோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். பந்து வீச்சில்  மும்பை கவனம் செலுத்தினால் நல்லது. சென்ற போட்டியில் பட்லர், பார்திவ், ஹார்டிக், நிதிஷ் ராணா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளது அணிக்கு ப்ளஸ். கடந்த போட்டியில் சரியான சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் திணறியது மும்பை இந்தியன்ஸ். இதையடுத்து இன்று நடக்கும் போட்டியில் மீண்டும் ஹர்பஜன் களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம்.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை, க்ரிஸ் லின், கம்பீர், மணிஷ் பாண்டே, உத்தப்பா, யுசூப் பதான்,  என பேட்டிங் வரிசை தரமாக இருப்பதால் மும்பைக்கு கூடுதல் கவனம் தேவை. காரணம், கம்பீர், லின் சென்ற போட்டியில் அதிரடியாக விளையாடி நைட் ரைடர்ஸ் அணிக்கு உறுதுணையாக உள்ளனர். லின் பிக்பாஷ் தொடரில் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.  அவரின் இந்த ஐபிஎல் சீஸனின் ட்ரேட் மார்க்கின் தொடக்கம் தான் 41 பந்துகளில் 93 ரன்கள். தியோதர் கோப்பையில் மணிஷ் பாண்டேவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. யுசூப் எப்போது விஸ்வரூபம் எடுப்பார் என்று நம்மால் சொல்ல முடியாது. இவர்களை தொடர்ந்து க்ரிஸ் வோக்ஸ் அணியில் ஆல்ரவுண்டராக அசத்துவார் என நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது. ஆனால் அவர் கடந்த போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். எனவே அவருக்கு பதிலாக ஷகிப் அல் ஹசனை கம்பீர் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளும் இருக்கிறது. 

சூர்யகுமார் யாதவ், பியுஷ் சாவ்லா அகியோர் அணியில் வழக்கம்போல் இடம்பெற்றுள்ளனர். ஸ்பின் ட்ரூப்பை நரேன் வழி நடத்துகிறார். இவரைத் தொடர்ந்து `சைனாமேன்` குல்தீப் மீது அனைவரின் பார்வையும் எதிர்ப்பார்ப்பும் விழுந்துள்ளது.

2008 முதல் 2016 வரை நடந்த ஐபிஎல் சீசன்களில் 18 போட்டிகளில் மும்பை அணியும் கொல்கத்தா அணியும் நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. அவற்றுள், 13 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ்  அணி வென்று நல்ல முன்னிலையில் உள்ளது.  சொந்த ஊரில் மும்பை கில்லி. இதுவரை ஆறு முறை மும்பை மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியுள்ளன. இதில் ஐந்து முறை மும்பையே வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறது. வான்கடே மைதானத்தைப் பொறுத்தவரையில், அது பேட்டிங்குக்கு சொர்க்கபுரி. எந்தவொரு கேப்டனும் இங்கே சேஸிங் செய்யவே விரும்புவார்கள். 

180க்குட்பட்ட எந்த இலக்கையும் இங்கே எளிதாக சேஸ் செய்ய முடியும். எனவே முதலில் பேட்டிங் பிடிக்கும் அணி, 210  ரன்களுக்கு மேல் குவிப்பது அவசியம். ஆக, இன்று ரன் மழை மும்பையில் பொழியும் என எதிர்பார்க்கலாம்.. 

 – உ.சுதர்சன் காந்தி (மணவப் பத்திரிகையாளர்) 


டிரெண்டிங் @ விகடன்