Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லியாண்டர் பயஸ் - நீங்கள் குட்பை சொல்ல வேண்டிய நேரம் இது!

நல்ல பிள்ளைக்கு அழகு சொல்லாமல் கிளம்புவது. அதுவும் நம்மை ஓரங்கட்டுகிறார்கள் என்று தெரிந்தும், யாருக்குத்தான் அந்த இடத்தில் நிற்க மனம் வரும். லியாண்டர் பயஸ் - இந்திய டென்னிஸின் முகம்தான், இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட் ஸ்லாம் வென்றவர்தான், ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வாங்கித் தந்தவர்தான், 27 ஆண்டுகளாக டேவிஸ் கோப்பையில் பங்கெடுத்தவர்தான், அவரிடம் இன்னும் ஏராளமான டென்னிஸ் மிச்சமிருக்கிறதுதான். ஆனால், பயஸ் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவே இல்லை.

‘‘வழக்கமாக அந்தப் பந்தை டைவ் அடித்துப் பிடித்துவிடுவேன். ஆனால், அன்று டைவ் அடிப்பதற்கு முன் யோசிக்கத் தொடங்கி விட்டேன். கீழே விழுந்து பந்தைப் பிடிக்க எப்போது தயங்கினேனோ, அப்போதே முடிவெடுத்து விட்டேன், இது ஓய்வுபெறும் நேரம் என்று...’’ - இது, எந்த அச்சு முறிந்தபோது நீ்ங்கள் ஓய்வு முடிவை எடுத்தீர்கள் என்று எழுப்பிய கேள்விக்கு ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் சொன்ன பதில். 

லியாண்டர் பயஸ்

வாடிய மலர் உதிர்வது இயல்புதானே? இதைப் புரிந்துகொண்டவர்கள் பிரியாவிடை கொடுத்துவிடுவார்கள். விஷயம் இதுவே. தன் ப்ரைம் டைம் முடிந்து விட்டது என்பதை பயஸ் இன்னும் அறியவில்லை. மாறாக விடாப்பிடியாக அணியில் தொங்கிக் கொண்டிருக்கிறார். அல்ல அல்ல அணியில் இடம்பிடிக்கவே போராடிக்கொண்டிருக்கிறார். பயஸ் ரேஞ்சுக்கு இப்படி போராட வேண்டிய அவசியமே இல்லை. பேசாமல் விலகிவிடலாம். ரிட்டையர்டுமென்ட் அறிவித்தால் ஜென்டிலாக வழியனுப்பி வைக்கப்பட வேண்டியவர் அவர். அவ்வளவு சாதித்திருக்கிறார். நாட்டுக்காகவும், தனிப்பட்ட முறையிலும்... ஆனால், சின்னப்பிள்ளை போல மகேஷ் பூபதியிடம் முட்டிக்கொண்டதால் லைக்ஸுக்குப் பதிலாக நெகட்டிவ் கமென்ட்ஸ் வரிசைகட்டுகிறது. மகேஷ் பூபதியும் நேரம் பார்த்து பயஸை பழி வாங்குகிறார். இருவருக்கும் ஈகோ, பெர்சனல் வென்டேட்டா இத்யாதி இத்யாதி.

டேவிஸ் கோப்பைக்கு இந்திய அணியின் கேப்டனாக மகேஷ் பூபதி நியமிக்கப்பட்டபோதே பயஸ் சுதாரித்திருக்க வேண்டும். செய்யவில்லை. இந்திய அணியில் அடித்துப்பிடித்து இடம்பிடித்தார். கேப்டன் என்ற முறையில் பூபதி, பயஸிடம் ‘‘டீம்ல ஆறு பேர்ல ஒருத்தராகத்தான் நீங்க இருப்பீங்க. ஓகேவா?’’ என கேட்டிருக்கிறார். அதாவது இரட்டையர் பிரிவில் பயஸ் களமிறங்குது உறுதியில்லை என்பதே பூபதியின் கொக்கி. ‘‘நோ பிராப்ளம். எனக்கு டீம்ல இருக்கணும். அவ்வளவுதான்’’ என பயஸிடம் இருந்து பதில் வந்தது. பின் எங்கே சொதப்பியது?

பயஸிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. நேரத்துக்கு ஆஜராக மாட்டார் எங்கும் எதிலும். 2016 ரியோ ஒலிம்பிக் நடந்தபோது, போட்டி தொடங்குவதற்கு முதல்நாள்தான் ரியோ டீ ஜெனீரோ சென்றார் பயஸ். ஒலிம்பிக் போட்டிக்கே இவ்வளவு மெத்தனம். தன் இணை ரோகன் போபண்ணா உடன் சேர்ந்து, முழுமையாக ஒரு நாள் கூட பிராக்டீஸ் செய்யவில்லை. தவிர, பயஸ் உடன் இணைவதை போபண்ணாவும் விரும்பவில்லை. ‘சாகேத் மைனேனி உடன் ஜோடி சேர விரும்புகிறேன்’ என பட்டவர்த்தனமாகவே அறிவித்திருந்தார் போபண்ணா. பயஸ் - போபண்ணா இருவருக்குமிடையே புரிதலும் இல்லை. விளைவு, முதல் போட்டியுடன் பெட்டியைக் கட்டினர்.

இன்று நேற்றல்ல பயஸ் எப்போதோ ஓரங்கட்டப்பட்டு விட்டார். லண்டன் 2012 ஒலிம்பிக்கிலும் இதே கதைதான். பயஸ் உடன் ஜோடி சேர பூபதி, போபண்ணா இருவரும் விரும்பவில்லை. வேறு வழியில்லாமல் விஷ்ணுவர்தன்  உடன் ஜோடி சேர்ந்தார் பயஸ். எதிர்பார்த்தது போலவே ரிசல்ட் சுத்தம். ஆக, ஐந்து வருடத்துக்கு முன்பிருந்தே இந்த புறக்கணிப்பு படலம் ஆரம்பித்து விட்டது.

இந்தியாவுக்காக விளையாடுவதில் முன்னபின்ன இருந்தாலும், ஃப்ரபொஷனல் ரீதியாக பயஸ் விளையாடிய போட்டிகளில் பெரிதும் சொதப்பவில்லை. 2015 வரை நன்றாகவே இருந்தது அவரது கிராப். 2015-ல் மூன்று கிராண்ட் ஸ்லாம் வென்றார். அப்போது அவர் வயது 41. 2016-ல் கலப்பு இரட்டையர் பிரிவில் மார்ட்டினா ஹிங்ஸ் உடன் இணைந்து பிரெஞ்ச் ஓபன் வென்றார் எனிலும், அதன்பின் ஃபார்ம் ஓஹோவென இல்லை. 

லியாண்டர் பயஸ்

உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை குரூப் சுற்றில், பயஸை நீக்கியதற்கு பூபதி சொன்ன காரணம் ஏற்புடையதே. ‘சமீபத்திய ஃபார்ம், ஃபிட்னஸ், பயிற்சி என ஐந்து விஷயங்களைக் கருத்தில் கொண்டு அணியைத் தேர்வு செய்தேன். இதில் எந்த பாக்ஸையும் பயஸ் டிக் செய்யவில்லை’ என்றார் பூபதி. அதாவது பயஸ் இனி சரிப்பட்டு வரமாட்டார் என்பதை நாசூக்காக சொன்னார். என்னதான், பெங்களூரு சூழலுக்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக்கொள்வதற்காக மெக்ஸிகோவில் பயிற்சி செய்ததாக பயஸ் சொன்னாலும், டேவிஸ் கோப்பையில் உக்கிரமாக போராடும் அளவு அவரிடம் எனர்ஜி இல்லை என்பதே உண்மை. தன் வயது 43 என்பதை அவர் மறந்து விட்டார். அதைவிட, ஒரு சேலஞ்சர் டிராபி வென்றதை எல்லாம் பெருமையாக சொல்வது, பயஸ் போன்ற ஜாம்பவான்களுக்கு அழகும் அல்ல.

ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. ஏடிபி, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பயஸ் பங்கேற்பதை யாரும் தடுக்க முடியாது. அது அவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றே தீருவேன் என அடம்பிடிப்பதுதான் ஆச்சர்யம். ‘நாட்டுக்காக விளையாடுவதே பெருமை’ என அடிக்கடி பெருமைப்படும் பயஸ்தான், 2014-ல் ஏசியன் கேம்ஸில் இந்தியாவுக்காக விளையாட மறுத்திருந்தார். ‘இளம் வீரர்கள் இந்த போட்டியில் தங்களை நிரூபிக்க நல்ல வாய்ப்பு. ஏசியன் கேம்ஸில் ஜொலித்தால் டேவிஸ் கோப்பை அணியில் இடம்பிடிக்கலாம்’ என, எஸ்கேப் ஆனதோடு, அட்வைஸ் பொழிந்தார் பயஸ். ஆனால் இன்று அவர்தான், இளம் வீரர்களுக்கு குறுக்காக நிற்கிறார். 

ஒரு வகையில் பயஸை அணியில் சேர்க்காததற்கு பூபதி சொன்னது காரணங்கள் அனைத்தும் ஏற்புடையதே. ஃபிட்னஸ் இல்லை; ஃபார்ம் இல்லை. அனல் பறக்கும் சர்வ் இல்லை, முன்னபோல ஓடியாட முடியவில்லை என பயஸுக்கு ஏகப்பட்ட மைனஸ்கள். 

2015- சென்னை ஓபன் தொடங்குவதற்கு முந்தையநாள் இரவு சென்னை எஸ்டிஏடி ஸ்டேடியத்தில் இளம் வீரர் ராம்குமார் ராமநாதன் உடன் இணைந்து பயிற்சி செய்தார் பயஸ். ஒரு மணி நேர பயிற்சிக்குப் பின் இருவரும் ரிலாக்ஸாக அமர்ந்தனர். ராம்குமாரிடம் துளி சோர்வில்லை. இளரத்தம். ஆனால், பயஸ்...முடியலைடா சாமி... என நெடுஞ்சாண் கிடையாக பத்து நிமிடத்துக்கும் மேல் படுத்து விட்டார்.

கில்கிறிஸ்ட் இப்படியொரு தருணத்தில்தான் ஓய்வு முடிவை எடுத்தார்.

-தா.ரமேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement